Published : 08 Aug 2023 09:44 AM
Last Updated : 08 Aug 2023 09:44 AM

போக்குவரத்துக்கு உதவாத புழுதிவாக்கம் பேருந்து நிலையம்: ஆட்சி மாறியும் காட்சி மாறல

சென்னை மாநகராட்சியில் பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட புழுதிவாக்கம் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக புழுதிவாக்கம் நகராட்சியாக இருந்தபோது 5 ஏக்கர் பரப்பில் 2009-ம் ஆண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து பிராட்வே உட்பட மாநகரின் பல இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

புழுதிவாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் நீண்ட காலமாக ஊர்க்கோயில் ஒரு ஓரமாக உள்ளது. அதனால் எந்தப் பிரச்னையும் இல்லை. அருகிலேயே குடிநீர் வாரியம் பம்பிங் ஸ்டேஷன் அமைத்துள்ளது. பெரிய குடிநீர் தேக்கத் தொட்டி உள்ளது. அம்மா உணவகம் செயல்படுகிறது. ஒரு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. 9 கடைகள் உள்ளன. பாதி இடம் அரசியல் ஆசீர்வாதத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. நடுவில் இருக்கும் கொஞ்சநஞ்ச இடத்தில்தான் பேருந்து நிலைய மேற்கூரை உள்ளது.

இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘பேருந்து நிலையம் எப்போதுமே பள்ளம், மேடாகத்தான் இருக்கிறது. பஸ் தவிர்த்து மற்ற வாகனங்களே இங்கே அதிகம் நிறுத்தப்படுகின்றன.மெட்ரோ லாரிகள் பம்பிங் மையத்தில் இருந்து தண்ணீர் பிடித்து செல்வதில் தவறில்லை. ஆனால், லாரிகள் ஒரேநேரத்தில் குறுக்கும் நெடுக்குமாக வந்து நிற்பதால் பஸ்கள் உள்ளே வருவதில் சிரமம் ஏற்படுகிறது.

இதுதவிர ஏகப்பட்ட தனியார் வாகனங்களுக்கு இந்த பேருந்து நிலையம் பொது பார்க்கிங் இடமாக மாறிவிட்டதுதான் வேதனை’’ என்கின்றனர்.ஏற்கெனவே பேருந்து நிலைய இடம் சுருங்கிப் போய்விட்ட நிலையில் இங்கேயே ஒரு சமூக நலக்கூடம் அமைக்கவும் பணிகள் ஜரூராக நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சோழிங்கநல்லூர் எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷிடம் கேட்டபோது, ‘‘பேருந்து நிலைய வளாகத்தில் பெருநகர சென்னை குடிநீர்வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் பம்பிங் ஸ்டேசன் உள்ளது. அங்கிருந்துதான் சுற்றுப்புற பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அதனால் குடிநீர் லாரிகள் அங்கு வந்து செல்கின்றன. தற்போது பள்ளிகரணையில் மற்றொரு பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் பணிகள் முடிவடைந்தபின் இப்போதுள்ள லாரிகள் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.

பேருந்தை தவிர தண்ணீர் லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள்
நிறுத்தும் இடமான புழுதிவாக்கம் பேருந்து நிலையம். படங்கள்: எம்.முத்துகணேஷ்

சமூக நலக்கூடம் இதுதவிர பேருந்து நிலையத்துக்குள் சமூக நலக்கூடம் அமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கு இதுவரை எதிர்ப்புகள் வரவில்லை. புழுதிவாக்கம் மிகவும் இடநெருக்கடி மிகுந்த பகுதியாகும்.

அதனால்தான் துணை மின்நிலையம் அமைக்கக் கூட இடமின்றி நீண்ட போராட்டத்துக்கு பின்பு தற்போது தான் மாற்று இடம் கண்டறியப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும், அனுமதியின்றி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட தனியார் வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. இவ்வாறு கூறினார்.

பஸ் ஸ்டாண்ட் குறித்து விவரம் சேகரிப்பது பற்றி அறிந்து, புழுதிவாக்கம் மண்டல அலுவலகம் அருகே நின்றிருந்த திமுக விசுவாசி ஒருவர், வலிய வந்து பேசினார்: கடந்த 5 ஆண்டாக அதிமுக ஆட்சி இருந்த நிலையில், பேருந்து நிலையம் சீரழிந்து கிடந்தது. திமுக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக இந்த பேருந்து நிலைய பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

உள்ளே கடைகளை அகற்றி அதிக அளவிலான பேருந்துகள் வந்து செல்லும் வகையில் பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என எங்களது கட்சிக்காரர்களுடன் பேசி இருந்தோம். அப்போதும் திமுக எம்எல்ஏதான் இருந்தார். ஆளுங்கட்சியை மீறி அவரால் ஏதும் செய்ய முடியவில்லை என்று நினைத்தோம்.

அதிமுககாரர்கள் அம்மா உணவகம், கடைகளை கட்டினார்கள். இதனால் பேருந்து நிலைய இடம் வெகுவாக குறைந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போதும் திமுக எம்எல்ஏதான் உள்ளார். ரூ.30 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையத்துக்கு கூரை அமைத்துக் கொடுத்தார். ஆனால் சின்ன மழைக்கே நடுவில் நீர் ஒழுகி சாக்கடையாக பேருந்து நிலைய வளாகம் மாறிவிடுகிறது.

பேருந்து வந்து திரும்ப முடியாத அளவுக்கு நடுவில் இருக்கைகள் போடப்பட்டன. திமுக எம்எல்ஏவும் உருப்படியான வேலை ஏதும் பார்க்கவில்லை. பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் சாவு ரதங்களைக் கூட அங்கிருந்து நகர்த்த முடியவில்லை. தண்ணி லாரிகளாலும் அதிக இடையூறு ஏற்படுகிறது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் சமுதாய நலக்கூடம் திறக்கப் போவதாக தகவல் வந்துள்ளது.

ஆளுங்கட்சி எம்எல்ஏவால இந்த ஏரியாவுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என மக்கள் பேசுகிறார்கள். கேட்க ரொம்ப கஷ்டமா இருக்கு. இவ்வாறு கூறினார் அந்த திமுக ஆதரவாளர். புழுதிவாக்கம் பேருந்து நிலையம் பொலிவு பெறுமா என்பதுதான் மக்களின் இப்போதைய கேள்வியாக உள்ளது.

‘இது பஸ் ஸ்டாண்ட் மாதிரிங்க. பஸ் தவிர்த்து எல்லாம் நிக்கும். தண்ணி லாரி, சாவு ரதம், முட்ட வண்டி, முறுக்கு வண்டி, கலவை லாரி, காயலான் கடைக்குப் போக வேண்டிய வண்டிங்க எல்லாத்துக்கும் இங்கதான் இலவச பார்க்கிங். மினி பஸ் காணாமலே போச்சு. மத்த பஸ்களை அத்தி பூத்தாற்போல்தான் பாக்க முடியும். இதை நம்பி இங்க வந்து நிக்க முடியாது. எங்கயும் போக முடியாது’

- புழுதிவாக்கம் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்திருந்த ஊர்க்காரப் பெரியவரின் புலம்பல் இது.

துணை மின்நிலையம் எப்போது? - புழுதிவாக்கம் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெருக்கத்தால் மின்தேவை அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி குறைந்தழுத்த மின்சாரம் மற்றும் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வாக புழுதிவாக்கம் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் மடிப்பாக்கம், உள்ளகரம், வாணுவம்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு சீரான மின் விநியோகம் கிடைக்கும். எனவே, இந்த பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் விரையில் துணை மின் நிலையம் அமையும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x