Published : 08 Aug 2023 06:30 AM
Last Updated : 08 Aug 2023 06:30 AM

காவிரி ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? - அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

சென்னை: தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை விசாரித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரி ஆறு, அதற்கு உட்பட்ட அணைகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் ஆறுகள், அணைகளில் வரும் நீர் முழுமையும் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு அலுவலகம் பெங்களூரில் அமைக்கப்பட்டு அதன் மூலம் அன்றாடம் கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பையும், வரத்தையும் கணக்கில் கொண்டு தமிழ்நாட்டின் தேவை அடிப்படையில் பாசன நீர் பகிர்ந்து அளிக்க வேண்டிய பொறுப்பு ஆணையத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக உண்மைக்கு புறம்பாக மூத்த அமைச்சர் துரைமுருகன் கருத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் எடுக்கும் முடிவு தொடர்பாக மத்திய அரசிடம் ஆணையம் உதவி கோரும் பட்சத்தில் உரியமுறையில் உதவிட வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலங்களும் ஆணைய உத்தரவை மதிக்க வேண்டும். மத்திய அரசோ, சம்பந்தப்பட்ட மாநிலங்களோ ஆணையத்தின் முடிவை ஏற்றுக் கொள்ள முன் வராத நிலையில் ஆணையம் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என வழிகாட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம், மத்திய அரசு, ஆணையத்தின் முடிவில் தலையிட உச்ச நீதிமன்றம் இடமளிக்கவில்லை என்பதை அமைச்சர் உணர வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலத்துக்கு உரிய தண்ணீரை பெற்றுத் தர ஆணையம் மறுக்குமேயானால் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக முறையிட்டு தீர்வு காண மாநிலங்களுக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதனை பின்பற்றி இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆணையத்தின் மீது முறையிடுவதற்கான வாய்ப்புகளை இதுவரையிலும் உருவாக்கவில்லை என தெரியவருகிறது.

பிரதமருக்கோ, நீர் பாசனத்துறை அமைச்சருக்கோ கடிதம் எழுதி அவர்கள் மூலம் ஆணையத்தை வலியுறுத்த சொல்வது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பொருந்தாத ஒன்று. நடைமுறைக்கு ஏற்கத்தக்கது அல்ல.

இந்தியாவில் இதற்கு முன் மாநிலங்களுக்கு இடையே 6-க்கும் மேற்பட்ட ஆணையங்கள் நேரடியாக மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையம் மட்டுமே மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் அமைக்கப்பட்டிருக்கிற தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.

எனவே இருக்கும் அதிகாரத்தை சட்டரீதியாக பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமே தவிர, ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று திசை திருப்பி அரசியலாக்கவும், மீண்டும் 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி காவிரி பிரச்சினையை கொண்டு செல்லவும் முயற்சிக்கக் கூடாது.

ஆணையம் தண்ணீரை பெற்றுக் கொடுப்பதற்கு அவசர கால கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வந்தோம். தமிழ்நாடு அரசு அதை ஏற்க மறுத்து மத்திய அமைச்சரை சந்திப்பதும், பிரதமருக்கு கடிதம் எழுதுவதுமாக 2 மாத காலத்தை கடத்திவிட்டது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் அழிந்துவிட்டோம். இந்த அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து தமிழ்நாடு முதல்வர் தவறிவிட்டார்.

இனி, நாங்களே காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x