Published : 08 Aug 2023 06:07 AM
Last Updated : 08 Aug 2023 06:07 AM
சென்னை: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது, தங்களுக்கு தகுதிஇருந்து தங்கப்பதக்கம் வழங்கப்படவில்லை என மாணவ-மாணவிகள் குற்றம் சாட்டினர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார்.
பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கு சிறியதாக இருந்ததால், அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 762 மாணவ-மாணவிகளையும் விழா அரங்கில் அமர வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே பட்டமளிப்பு விழா அரங்கில் அமர வைக்கப்பட்டிருந்தனர். மீதமுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், பட்டமளிப்பு விழா அரங்கத்தின் அருகே காக்க வைக்கப்பட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
நிதி பற்றாக்குறை காரணமா? - அங்கு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், மாணவர்களும், அவர்களதுபெற்றோரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, 105மாணவ-மாணவிகளுக்கு மட்டும்தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கிவிட்டு குடியரசு தலைவர் முர்மு புறப்பட்டு சென்றார். அதன்பிறகு, மீதமுள்ள மாணவர்களுக்கு துணைவேந்தர் கவுரி பட்டங்களை வழங்கினார். அப்போது தங்கப்பதக்கம் பெற தகுதிஇருந்தும், தங்கப்பதக்கம் வழங்கப்படவில்லை எனவும், இதற்கு நிதிபற்றாக்குறைதான் காரணம் எனவும் ஒருசில மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டினர்.
மேலும், குடியரசு தலைவர் கையால் பட்டம் வாங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தும், சிறிய அரங்கில் விழா நடத்தியதால், தங்களால்,பட்டம் பெற முடியாமல் போய்விட்டது எனவும் மாணவர்கள் தங்களது கவலையை தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவ, மாணவிகளின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி கூறுகையில், ``தங்கப்பதக்கம் வழங்க நிதி பற்றாக்குறை காரணமாக இருப்பதாக வெளியான தகவல் தவறானது. தகுதியான நபர்களுக்குதான் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒருவேளை, தகுதி இருந்தும் யாராவது விடுபட்டிருந்தால் அவர்கள் பல்கலைக்கழகத்தை தொடர்புகொண்டால், பதக்கம் வழங்கஉரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறிய அரங்கத்தில் இந்த விழா நடத்தப்பட்டதால் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்களால் பட்டம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது'' என்றார்.
சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற வந்திருக்கும் மாணவர்கள் முறையாக வழிநடத்தப்படாதது அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT