Published : 05 Aug 2023 06:09 AM
Last Updated : 05 Aug 2023 06:09 AM

காவிரி தண்ணீர் | கர்நாடகாவுக்கு உத்தரவிட கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தபடி, காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அக்கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் குறுவை சாகுபடியும், சம்பா நெல் விதைப்பும், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை, குறிப்பாக கர்நாடகாவில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளன. மாதாந்திர அட்டவணைப்படி, பிலிகுண்டுலுவில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின்பங்கை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த உத்தரவை கர்நாடக அரசு முழுமையாகமதிக்கவில்லை. காவிரி ஆணைய வழிகாட்டுதலையும் கடைபிடிக்கவில்லை.

2023-24-ம் ஆண்டில் 2023 ஜூன் 1 முதல்ஜூலை 31 வரை கர்நாடகாவில் இருந்துபிலிகுண்டுலுவுக்கு 40.4 டிஎம்சி தண்ணீர் வரவேண்டும். ஆனால், 11.6 டிஎம்சிமட்டுமே வந்துள்ளது. கர்நாடகாவில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழுகொள்ளளவான 114.6 டிஎம்சியில், 91 டிஎம்சி இருப்பு உள்ளபோதிலும், கர்நாடக அரசு 28.8 டிஎம்சி அளவுக்கு பற்றாக்குறையாக தமிழகத்துக்கு தண்ணீர்திறந்து விட்டது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அணையில் கடந்த ஆக.2-ம் தேதி நிலவரப்படி, 26.6 டிஎம்சி மட்டுமே தண்ணீர் உள்ளது. குடிநீர் மற்றும் பிறஅத்தியாவசிய தேவைகளுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே இது போதுமானதாக இருக்கும்.

இத்தகைய ஆபத்தான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரிடம் கடந்த ஜூலை 5 மற்றும் 19-ம் தேதிகளில் இப்பிரச்சினையை எடுத்துச் சென்று, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த விநியோக அட்டவணையை கடைபிடிக்க கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்குமாறும், இதை முறையாக கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையத்தை அறிவுறுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், கர்நாடக அரசு இதை கருத்தில் கொள்ளாமல், முழுமையாக நிரம்பிய கபினி அணையில் இருந்து மட்டுமே தண்ணீரை திறந்து விட்டுள்ளது. கர்நாடகாவின் முக்கிய நீர்த்தேக்கங்கள் 80 சதவீதம் நிரம்பியுள்ள நிலையிலும், அவற்றுக்கு தொடர்ந்து நல்ல நீர்வரத்து உள்ள நிலையிலும், அந்த நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்கப்படாதது கவலை அளிக்கிறது.

பிரதமர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, காவிரி டெல்டாவில் தற்போது உள்ள குறுவை நெல் பயிரையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும்.

உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தபடி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிடவும், ஜூன், ஜூலையில் ஏற்பட்ட பற்றாக்குறையை தீர்க்கவும் கர்நாடக அரசுக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x