Published : 24 Nov 2017 09:46 AM
Last Updated : 24 Nov 2017 09:46 AM

சின்னம் கிடைத்தும் இணையாத அதிமுக அணிகள்: கரூர், குமரி, புதுக்கோட்டையில் தனித்தனியே கொண்டாட்டம்

இரட்டை இலை சின்னம் கிடைத்தபோதும், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் குமரி மற்றும் கரூப் பகுதிகளில் தனித்தனியாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டன.

தமிழக அளவில் அதிமுக மிகவும் பலவீனமான மாவட்டம் கன்னியாகுமரி. நாஞ்சில் சம்பத், முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் உள்ளிட்டோர் தினகரன் பக்கம் நின்றனர். தமிழக அரசின் டெல்லிப் பிரதிநிதியான தளவாய் சுந்தரம் தொடக்கத்தில் தினகரன் அணியில் இருந்து, பின்னர் பழனிசாமி அணிக்கு வந்தார்.

ஓ.பன்னீர் செல்வம் அணியில், குமரி மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ஏ.அசோகன், முன்னாள் அமைச்சர் கே.பி.ராஜேந்திர பிரசாத், முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்பி, முதல்வர் கே.பழனிசாமி அணியில் நீடித்தார்.

முதல்வர், துணை முதல்வர் அணிகள் இணைந்த பிறகும், குமரியில் இவ்விரு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் இணையாமல் உள்ளனர்.

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் இருமுறை ரத்து செய்யப்பட்டு டிச.16-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கும், இங்கு நிலவும் கோஷ்டி பூசலே காரணம் என கூறப்படுகிறது.

இரட்டை இலை சின்னம் கிடைத்த மகிழ்ச்சியையும் நேற்று இவ்விரு கோஷ்டிகளும் தனித்தனியே கொண்டாடின. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வடசேரி எம்.ஜி.ஆர். சிலைக்கு தனியாக வந்து மாலை போட்டு, பட்டாசு வெடித்து, இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர். முதல்வர் அணியினர் நாகர்கோவில் அதிமுக அலுவலகத்தில் கூடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்கள் தனியாக வந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

கரூரில் மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் ஏ.ஆர்.காளியப்பன், நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்ட முதல்வர் அணியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

இதையடுத்து, நேற்று மாலை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கு.வடிவேல் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ காமராஜ், நகர்மன்ற முன்னாள் தலைவர் செல்வராஜ், சுசீலா உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.

புதுக்கோட்டையில் முதல்வர் அணியினர் நகர செயலாளர் பாஸ்கர் தலைமையிலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் தலைமையிலும் தனித்தனியே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x