Published : 03 Aug 2023 06:03 AM
Last Updated : 03 Aug 2023 06:03 AM

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக தனியார் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

கோப்புப்படம்

சென்னை: சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக தனியார் நிறுவனங்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் போலீஸார் 6 வார காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது சென்னை, கோவை மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கமும், திமுக சார்பிலும் லஞ்ச ஒழிப்புத் துறையி்ல் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அதன்காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அதையடுத்து, இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்து உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவ.30-ம் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், புலன் விசாரணையின்போது இந்த வழக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் இருந்தால் எதிர்காலத்தில் அவரையும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கலாம் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆலம் கோல்டு அண்டு டயமன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், எம்.எஸ்.கன்ஸ்ட்ரக்�ஷன்ஸ் இன்ப்ரா லிமிடெட், வைதூரியா ஹோட்டல், ஆலயம் அறக்கட்டளை பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார், ஏ.ரமேஷ் மற்றும் போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கில் போலீஸார் 237 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். 936 ஆதார ஆவணங்களை சேகரித்துள்ளனர். பலருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அவர்களது பெயரை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கியுள்ளனர். அதேபோல, அரசு அதிகாரிகள் மீதான குற்ற வழக்கும் கைவிடப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்துள்ளது. சில அதிகாரிகளின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் உள்ளதால் அரசின் ஒப்புதலுக்காக புலன் விசாரணை அதிகாரி காத்திருக்கிறார். இந்தச் சூழலில் மனுதாரர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்வது என்பது சரியாக இருக்காது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்த பிறகு அதில் தங்களது பெயர் உள்ளதா, இல்லையா என்பதை மனுதாரர்கள் சரிபார்க்கலாம். போலீஸார் 6 வார காலத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். எனவே, மனுதாரர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது.

இவ்வாறு தெரிவித்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x