Published : 24 Nov 2017 09:29 AM
Last Updated : 24 Nov 2017 09:29 AM

கடலோர மாவட்டங்களில் இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை: பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என அரசு அறிவிப்பு

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று (24-ம் தேதி) சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது, இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலுள்ள கட லோர மாவட்டங்களில், சில கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கொண்ட மாதிரி பயிற்சியினை 24-ம் தேதி (இன்று) நடத்துகிறது.

இதற்கு முன்னோட்டமாக கடந்த 22-ம் தேதி, மாநில நிவா ரண ஆணையர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் மற் றும் மாநில நிவாரண ஆணையர் தலைமையில் பல்துறை அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 24-ம் தேதி நடைபெறவுள்ள மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எவ்வாறு மேற்கொள்வது என விளக்கப்பட்டது.

சுனாமி வரும் பட்சத்தில், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக சுனாமி எச்சரிக்கை தொடர்பான முன்அறிவிப்புகள் பெறப்படும்போது, அத்தகவல் பரிமாற்றமானது அரசுத் துறைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களை எவ்வாறு சென்றடைகிறது என் பது இந்த ஒத்திகையின் மூலம் சோதிக்கப்படும்.

இம்மாதிரி பயிற்சி ஒத்திகையானது, நயினார்குப்பம், ஊரூக்குப்பம் (சென்னை), நாஞ்சலிங்கம்பேட்டை, சின்னூர் தெற்கு (கடலூர்), கோவளம், பரமன்கேனிக்குப்பம் (காஞ்சிபுரம்), நாக்கத்தரவு, மெத்திப்பாளையம் (திருவள்ளூர்), ராஜக்காமங்களம், கொளச் சல் (கன்னியாகுமரி), விழுந்தமாவடி, கீழையூர் (நாகப்பட்டினம்), பொன்னகரம், மீமிசல் (புதுக்கோட்டை), தேர்போகி, கீழமுந்தல் (ராமநாதபுரம்), குட்டம் (திருநெல்வேலி), தந்திராயன் குப்பம், நொச்சிக்குப்பம் (விழுப்புரம்), கொல்லுக்காடு, சேதுபவசத்திரம் (தஞ்சாவூர்), கற்பகநாதர்குளம், முனாங்காடு (திருவாரூர்), பழையகாயல், காயல்பட்டினம் தெற்கு (தூத்துக்குடி) ஆகிய கிராமங்களில் நடைபெறும்.

எனவே, சுனாமி எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பயிற்சியானது, ஒரு மாதிரி ஒத்திகை பயிற்சி மட்டுமே ஆகும். இதுகுறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x