Published : 29 Jul 2023 05:34 AM
Last Updated : 29 Jul 2023 05:34 AM
மதுரை: தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
என்எல்சி நிறுவனம் சார்பில் பரவனாறு பகுதியில் மாற்றுப் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக என்எல்சி நிறுவனம் 6 கிராமங்களில் நிலம் எடுக்கிறது. ஏற்கெனவே 304 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 273 ஹெக்டேர்ஏக்கர் நிலங்கள் என்எல்சி நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டவை. 30 ஹெக்டேரை மட்டும்தான் நில உரிமையாளர்கள் இன்னும் ஒப்படைக்கவில்லை.
2006-2013 வரையிலான காலகட்டத்தில் கையகப்படுத்திய 104 ஹெக்டேருக்குரிய 382 நிலஉரிமையாளர்களுக்கு ஏற்கெனவே, ஏக்கருக்கு ரூ.6 லட்சம்வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக ரூ.10 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படுகிறது.
பரவனாறு மாற்றுப் பாதைப் பகுதிகளில் பயிர் செய்யக்கூடிய விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் என்எல்சி நிறுவனம் சார்பில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இந்நிலையில், என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அரசியல் கட்சி நடத்தியபோது, அறவழிப் போராட்டம் வன்முறைக் களமாக மாறியிருப்பது கண்டனத்துக்குரியது.
விவசாயிகளும், நில உரிமையாளர்களும் இந்த விவகாரத்தை அமைதியாகக் கையாண்டாலும், வெளியிலிருந்து வந்த நபர்கள், அரசியல் உள்நோக்கத்துடன் தூண்டி விட்டதால்தான் வன்முறை அரங்கேறியுள்ளது. வன்முறையில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
விவசாயிகளை கேடயமாகப் பயன்படுத்தி, அரசியல் சுயலாபம் அடையப் பார்க்கின்றனர். தமிழகஅரசு வன்முறையை ஒருபோதும்அனுமதிக்காது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும், அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT