Published : 29 Jul 2023 12:02 PM
Last Updated : 29 Jul 2023 12:02 PM

பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் யானை தாக்கி தாய் உயிரிழப்பு; மகள் படுகாயம்

புனிதா, அஸ்வதி

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால், சப்பந்தோடு, சுங்கம், கண்ணம்பள்ளி உட்பட பல பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி புனிதா (42). இவர்களுக்கு அஸ்வதி (20) என்ற மகள் உள்ளார்.

கூடலூரில் உள்ள அரசு கல்லூரியில் அஸ்வதி பி.காம் சி.ஏ. படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரி செல்வதற்காக தனது தாயாருடன் வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு அஸ்வதி நடந்து சென்றார். அப்போது, சாலையையொட்டிய மூங்கில் தோப்புக்குள் இருந்து காட்டு யானை குட்டியுடன் சாலையை கடக்க முயன்றது.

யானை வருவதை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அவர்களை யானை துரத்திச் சென்று, துதிக்கையால் பிடித்து இருவரையும் தூக்கி வீசியது. பலத்த காயமடைந்த இவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். யானை நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

யானையை அங்கிருந்து விரட்டி, இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் புனிதா அனுமதிக்கப்பட்டார். சுல்தான் பத்தேரியில் அஸ்வதி சிகிச்சை பெற்று வருகிறார்.

சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனக்காப்பாளர் குணசேகரன் ஆகியோர் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினர். காட்டு யானை புனிதாவின் இதயத்தில் தாக்கியுள்ளது.

இதனால் பாதிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் அறுவை சிகிச்சைக்காக கள்ளிக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x