Published : 29 Jul 2023 06:07 AM
Last Updated : 29 Jul 2023 06:07 AM
சென்னை: மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பால்வளத் துறை அமைச்சரிடம் தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ளனர்.
சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியளார்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரிந்துவரும் பதிவுபெற்ற பணியாளர் தொழிற்சங்கங்களுடன் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று முன்தினம் கலந்துரையாடினார்.
இதில், தமிழ்நாடு பால்வள நிறுவன தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பால்வள அனைத்து ஊழியர் சங்கம் உள்ளிட்ட 7 சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பெண்களுக்கு கழிப்பறை: அவர்கள் அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு: அனைத்து நோய்களுக்கும் பொருந்துமாறு மருத்துவ காப்பீடு வசதி செய்து தர வேண்டும். கனரக வாகன ஓட்டுநர்களுக்கு பால்பரிசோதனை மேற்கொள்ள தகுந்தபயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து பால் பண்ணைகளிலும் பெண் பணியாளர்களுக்கு பயன்படும் வகையில் கழிப்பறை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
அம்பத்தூர், சோழிங்கநல்லூர் மற்றும் மத்திய பால்பண்ணைகளில் உள்ளது போன்று சிற்றுண்டி சாலைமற்றும் பெண்களுக்கு ஓய்வு அறைதலைமை அலுவலகத்திலும் அமைத்து தர வேண்டும். அனைத்து பால் பண்ணைகளிலும் ஒரு மருத்துவ அவசர ஊர்தி அமைத்து தர வேண்டும். இவ்வாறு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
முன்னதாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கால்நடை பொருளாதார வல்லுநர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
அப்போது, ``பால் பண்ணைகள் அமைக்க விரும்பும் பால் உற்பத்தியாளர்கள், வங்கி கடனுதவி பெறுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வங்கிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அரசு திட்டங்களின் மூலம் கடனுதவி, மானியம் பெறுவதற்கு முழுமையான மற்றும் சரியான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். எனவேஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு சரியான திட்ட அறிக்கைகள் தயாரித்து வழங்கவேண்டும்'' என அமைச்சர் மனோ தங்கராஜ் வல்லுநர்களுக்கு அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT