Published : 24 Nov 2017 09:43 AM
Last Updated : 24 Nov 2017 09:43 AM

மாநில தலைமை தகவல் ஆணையராக எம்.ராஜாராமை நியமிக்க திமுக எதிர்ப்பு: நிர்வாக சீர்திருத்த துறை செயலாளருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராமிடம் இருந்து விண்ணப்பம் பெற்றிருப்பதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் சீ.சுவர்ணாவுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு தாங்கள் அனுப் பிய கடிதம் கிடைத்தது. அத்துடன் இணைக்கப்பட்ட பட்டியலையும் பார்த்தேன். தலைமை தகவல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. அவர்களது முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்ப நகல் கள் வழங்கப்படவில்லை.

மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம் விண்ணப்பித்துள்ளார். இவர் ஏற்கெனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, அதை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவரிடம் இருந்து தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பம் பெற்றிருப்பது தகவல் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு எதிரானது.

அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை பற்றி அறிந்துகொள்ள விரும்பும் மக்களுக்கு தகவல் அளிக்க வேண்டியது தலைமை தக வல் ஆணையரின் முக்கியப் பொறுப்பாகும். இதுபோன்ற பதவியில் பிழையான அணுகுமுறையை அரசு கடைபிடித்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. நவம்பர் 23-ம் தேதி நடக்கும் கூட்டத்துக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டு, கூட்டத்துக்கான தேதியும் இறுதி செய்யப்பட்ட பிறகு மீண்டும் நவம்பர் 21-ம் தேதி விண்ணப்பங்களை பெற்றிருக்கிறது. இது நேர்மையான தேர்வு முறைக்கு எதிராக அமைந் துள்ளது.

சட்டப்படி மிக முக்கியமான மாநில தலைமை தகவல் ஆணையர், தகவல் ஆணையர்களை தேர்வு செய்யும் தார்மீக உரிமையை, பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு இழந்துவிட்டது. எதிர்க்கட்சித் தலைவரான எனது கருத்தை நடுநிலையாளர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்.

எனவே, தேர்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்று முறைகேடுகளுக்கு துணைபோக முடி யாது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x