Published : 23 Jul 2023 04:03 AM
Last Updated : 23 Jul 2023 04:03 AM

ஜி-20 மாநாட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - சென்னை, மாமல்லபுரத்தில் ட்ரோன் பறக்க 4 நாட்கள் தடை

சென்னை / மாமல்லபுரம்: ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளர் மாமல்லபுரத்தில் ஆய்வு செய்தார். சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 4 நாட்கள் ட்ரோன் பறக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.

பெங்களூரு, ஜோத்பூர், லக்னோ, ஐதராபாத், விசாகப்பட்டினம், உதய்பூர், கஜுரஹோ, காந்திநகர், சண்டிகர், புவனேஸ்வர், கொச்சி, வாரணாசி, கோவா, சிலிகுரி, சென்னை, கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் பல்வேறு துறைகளின் சார்பாக பல்வேறு தலைப்புகளில் ஜி-20 மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, இங்கிலாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, வடகொரியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்கின்றனர்.

பல்லவர் சிற்பங்கள்: அந்த வகையில், சென்னையில் பேரிடர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 300 பேர் பங்கேற்கும் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு ஜூலை 24 (நாளை) முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, கிண்டியில் உள்ள ஓட்டல் ஐ.டி.சி கிராண்ட் சோழா மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஆகிய ஓட்டல்களில் பிரதிநிதிகள் தங்கி மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

வெளிநாட்டுப் பிரதிநிதிகள், 2 குழுக்களாக ஜூலை 26 மற்றும் 28-ம் தேதிமாமல்லபுரத்தில் உள்ள பல்லவ சிற்பங்களான சுற்றிப் பார்க்க உள்ளனர்.

தொல்லை தரக்கூடாது: இந்நிலையில், மாமல்லபுரம் வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பாதுகாப்புப் பிரிவு கண்காணிப்பாளர் ராஜேந்திரன், மாமல்லபுரம் கடற்கரை கோயில் நுழைவு பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, வெளி நாட்டுப் பிரதிநிதிகள் வரும் போது புராதன சின்னங்கள் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கவும்,

சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொல்லையும் கொடுக்காமல் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும் போலீஸாருக்கு அறிவுறுத்தினார். மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளைப் பாதுகாப்பாக அழைத்து வருவது தொடர்பாக தமிழ்நாடு பாதுகாப்புப் பிரிவு கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உள்ளூர் போலீஸாருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சிவப்பு மண்டலம்: இந்நிலையில், 23-ம் தேதி (இன்று) முதல் 26-ம் தேதிவரை சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, ஜி-20 பிரதிநிதிகள் தங்கும் இடங்கள், விழா நடைபெறும் இடங்கள், அவர்கள் பயணம் செய்யும் வழித் தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் மற்றும் வழித் தடத்தில் ட்ரோன்கள் ( ஆளில்லா விமானம் ) பறக்க விடத் தடை விதித்து, சென்னை மாநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x