Published : 22 Jul 2023 06:10 AM
Last Updated : 22 Jul 2023 06:10 AM

மதுரையில் தெருக்கள், வீதிகள்தோறும் பெருக்கெடுத்த கழிவுநீர்

மதுரை: மதுரையில் பாதாள சாக்கடை பராமரிப்பில் மாநகராட்சி கோட்டை விடுவதால் தெருக்கள், வீதிகள், சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மதுரை மாநகராட்சியில் பழைய 72 வார்டுகளில் பாதாள சாக்கடை பயன்பாடு உள்ளது. அதற்குப் பின் 1980-ல் மாநகராட்சியின் நகர்ப்புற வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. பழைய வார்டுகளில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடையின் கழிவுநீரோட்ட வழித்தடச் செயல்பாடுகள் இன்றைய மாநகராட்சி பொறியியல் துறை அதி காரிகளுக்குத் தெரியவில்லை.

பாதாள சாக்கடை தொட்டிகளில் கழிவுநீருடன் மணலும் சென்று அடைக்கிறது. இதை நீக்க அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு தொடர் பராமரிப்புப் பணி களைச் செய்ய வேண்டும். ஆனால், அதிகாரிகள் அடைப்பு ஏற்படும் தொட்டிகளில் செப்டிக் டேங்க் லாரிகளைக் கொண்டு கழிவுநீரை உறிஞ்சி எடுக்கின்றனர். அடைப்பு எங்கு ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்த்து சரி செய்வதில்லை. இதனால், சில மணி நேரத்திலேயே மீண்டும் கழிவு நீர் கசிந்து வழிகிறது.

ஒரு தொட்டியில் சேரும் மணல் அடுத்தடுத்த தொட்டிகளுக்குச் சென்று அடைப்பை ஏற்படுத்துவதால் குறிப்பிட்ட சாலை, தெருக்களில் அதிகாரிகளால் கழிவு நீர் அடைப்பை சரி செய்ய முடிவதில்லை. பாதுகாப்பு உபகரணங்களுடன் எங்கு கசிவு ஏற்படுகிறது, எதனால் ஏற்படுகிறது, என முயற்சி மேற்கொள்வதில்லை.

பழைய பாதாளசாக்கடை அமைப்பின் வரைபடமும், செயல் பாட்டைப் பெற்று பராமரிக்க எந்த ஓர் அதிகாரியும் முயற்சி செய்வதில்லை. அன்றைய கழிவு நீர் பிரச்சினையை அன்றைக்கு சமாளித்தால்போதும் என்ற நிலையில் பொறியியல் துறை அதிகாரிகள் செயல்படுவதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால், குடிநீருடன் பாதாள சாக்கடை நீர் கலக்கிறது. ஆங்காங்கே தெருக்கள், வீதிகள், சாலைகளில் பாதாள சாக்கடை நிரம்பி திறந்த வெளியில் ஓடைபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் கழிவு நீர் தேங்கி பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவுகின்றன.

தற்போது பொறியியல் துறை அதிகாரிகள் பெரியாறு குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகளில் மட்டுமே முழுக் கவனம் செலுத்துகின்றனர். இதுதவிர, பெரியாறு குடிநீர் குழாய் பதிக்கும் பணியின்போது ஒப்பந்த நிறுவனத் தொழிலாளர்கள், பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்களை உடைத்துச்சென்று விடுகின்றனர். அதனாலும் கழிவுநீர், குடிநீர் குழாய் உடைந்து தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த உடைப்புப் பணிகளை மட்டுமே பொறியியல் துறை அதிகாரிகள் சீர் செய்கின்றனர்.

ஆனால், பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்படும் கழிவுநீர் கசிவு, குடிநீருடன் கழிவுநீர் கலப்பது போன்ற பிரச்சினைகளை சரி செய்ய முடியவில்லை.

மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், கடந்த சில வாரங்களாக பாதாள சாக்கடை பிரச்சினைக்குத் தீர்வுகாண பொறியியல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய உத்தரவிட்டார். எத்தனை உத்தரவுகள் போட்டாலும் அதிகாரிகள் தற்காலிகமாக சரி செய்து ஆணை யரைத் திருப்திப்படுத்தவே முயற்சிக் கின்றனர்.

மாநகராட்சி ஆணையரையே அதிகாரிகள் ஏமாற்றுவதால் மதுரை நகரில் குடியிருப்புப் பகுதிகள், முக்கிய வீதிகள், சாலைகளில் பாதாள சாக்கடை உடைப்பு மதுரை மக்களுக்கு நிரந்தரத் தலைவலியாக மாறி சுகாதாரத்துக்கே கேட்டை விளைவித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x