Last Updated : 14 Jul, 2023 02:57 PM

 

Published : 14 Jul 2023 02:57 PM
Last Updated : 14 Jul 2023 02:57 PM

சிவகங்கையில் வீடு இல்லாமல் தவிக்கும் நரிக்குறவர்கள்

சிவகங்கை: சிவகங்கையில் பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் நரிக்குறவர் வீடுகள் கட்டி முடிக்காமல் பாதியில் விடப்பட்டன. சிவகங்கை பழமலை நகரில் 1985-ம் ஆண்டு 172 நரிக்குறவர் குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது 300 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றன. இந்த வீடுகள் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளன. 2016-ம் ஆண்டு மே மாதம் பெய்த மழையில் வீடு இடிந்து ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து வருவாய், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வீடுகள் முற்றிலும் சேதமடைந்து விட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுத்தனர். இதையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் மலர்விழி, 105 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் வீடுகள் கட்டி கொடுக்க உத்தரவிட்டார். மேலும் அப்போது ஒரு வீட்டுக்கு ரூ.1.70 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் அவரவர் வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்றாலும், ரூ.1.70 லட்சத்தில் நரிக்குறவர்களால் வீடு கட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் முயற்சியால் மதுரையைச் சேர்ந்த ஒப்பந்தாரர் மூலம் அனைவருக்கும் மொத்தமாக வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர் கட்டுப்படியாகவில்லை எனக் கூறி கட்டுமானப் பணியை பாதியில் நிறுத்தினார்.

அதன் பின்னர், 30-க்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த முயற்சியால் வீடுகளை கட்டிக் கொண்டனர். ஆனால் 70-க்கும் மேற்பட்டோர் வீடுகளை கட்ட முடியாமல் அப்படியே விட்டனர். அவர்கள் தற்போது சேதமடைந்த தொகுப்பு வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். சிலர் கொட்டகை அமைத்து வசித்து வருகின்றனர்.

இது குறித்து நரிக்குறவர்கள் சிலர் கூறுகையில் ‘‘ஒப்பந்ததாரர் வீடுகளை கட்டிக் கொடுக்காமல் பாதியிலேயே சென்றுவிட்டார். மேலும் சிமென்ட் மூட்டைகள், கம்பிகளையும் எடுத்துச் சென்று விட்டார். வீடு கட்டுவதற்கான பணத்தையும் அதிகாரிகள் முழுமையாக தரவில்லை. இதனால் நாங்கள் வீடுகளை கட்ட முடியாமல் அப்படியே விட்டுவிட்டோம்’’ என்று கூறினர்.

இது குறித்து சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் கூறுகையில் ‘‘நரிக்குறவர்கள் மனு கொடுத்துள்ளனர். இச்சம்பவம் ஏற்கெனவே நடந்தது. அவர்களது வீடுகள் தொடர்பான பழைய கோப்புகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார். இது குறித்து வருவாய்த் துறையினர் கூறுகையில் ‘‘ விடுபட்டவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட உள்ளது’’ என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x