Published : 14 Jul 2023 09:26 AM
Last Updated : 14 Jul 2023 09:26 AM

உடுமலையில் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து 2-வது நாளாக மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

உடுமலை: அடிப்படை வசதி கேட்டு, உடுமலை வனச்சரக அலுவலகம் முன்பு 2-வது நாளாக நேற்றும் மலைவாழ் மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் குளிப்பட்டி, குருமலை, மாவடப்பு, தளிஞ்சி, கோடந்தூர், காட்டுப்பட்டி உட்பட 18 மலை வாழ் கிராமங்கள் உள்ளன. இங்கு 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்கள் கல்வி, சாலை, மருத்துவம், குடிநீர்,உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல ஆண்டுகளாக தவிக்கின்றனர்.

இந்நிலையில், வனத்துறை அதிகாரிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த உடுமலை,அமராவதி வனச்சரகங்களில் வாழும் மலை கிராம மக்கள், மாநில அரசு பழங்குடியின மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தாலும், வனத்துறையினர் தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், மலை கிராமங்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகளும் செய்யவிடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், வனத்துறை அதிகாரிகளை கண்டித்து, உடுமலையில் அமைந்துள்ள வனச்சரக அலுவலகத்தின் முன்பாக மலை கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு சாலை, குடிநீர், மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் பல்வேறு நடைமுறைகளை காரணம்காட்டி, எங்களுக்கு வரும் சலுகைகளை வனத்துறை அதிகாரிகள் தடுக்கின்றனர் என குற்றம்சாட்டினர். 2006 வன உரிமைச் சட்டத்தில் உள்ளதுபோல, பழங்குடியின மக்களுக்கு சாலை, குடிநீர், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, வன அலுவலர்களிடம் நேற்று 4 கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, உடுமலையில் இருந்து பேரணியாக இன்று (ஜூலை 15) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்து முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x