Published : 13 Jul 2023 06:45 AM
Last Updated : 13 Jul 2023 06:45 AM
சென்னை: மதுரையில் ஆக. 20-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொன்விழா மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மூத்த தலைவர் சி.பொன்னையன் தலைமையில் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
பின்னர், முன்னாள் அமைச்சர்டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில், புதிய வரலாற்றை உருவாக்கும் வகையில், இதுவரை தமிழகமே கண்டிராத எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதுகுறித்து இக்கூட்டத்தில் ஆலோசித்தோம்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதை சரி செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் போராட்டம் செய்ததைத் தொடர்ந்து, முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். இந்தக் கூட்டத்தால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
ராயபுரத்தில் ரூ.134 கோடியில், 1,044 வீடுகள் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டன. இவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்துள்ளார். இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வாடகை அடிப்படையில் கொடுப்பதாகத்தான் நாங்கள் உறுதி அளித்திருந்தோம். ஆனால், திமுக அரசு பயனாளிகளிடம் ரூ.5 லட்சம் கேட்கிறது. இதை தவிர்த்து, வாடகை அடிப்படையிலேயே வீடு ஒதுக்க வேண்டும்.
அதிமுகவில் இருந்து சென்றவர்கள் மன்னிப்புக் கடிதம் அளித்தால், மீண்டும் கட்சியில் சேர்க்கும் நடைமுறை ஜெயலலிதா காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால், இது ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்குப் பொருந்தாது. செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால், மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளன. எது வேண்டுமானாலும் நடக்கலாம். கண்டிப்பாக பல கட்சிகள், திமுக கூட்டணியிலிருந்து விலகி, அதிமுகவுடன் சேர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, பெஞ்சமின் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT