Published : 10 Jul 2023 06:40 AM
Last Updated : 10 Jul 2023 06:40 AM

கோவூர் சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு ரூ.1 கோடியில் புதிய தேர் கட்டும் பணி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

கோவூர், சுந்தரேஸ்வரர் கோயிலில் புதிய தேர் செய்யும் பணிகள் தொடக்க விழா பூஜையில் பங்கேற்ற அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன்.

காஞ்சிபுரம்: குன்றத்தூர் அடுத்த கோவூரில் சவுந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தேர் சிதிலமடைந்ததால் புதிய தேர் செய்ய அறநிலையத்துறை சார்பில் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது.

மேலும், உள்ளூர் மக்கள் மற்றும் உபயதாரர்கள் பங்களிப்பு நிதியாக ரூ.49 லட்சம் வந்தது. இதன்மூலம், புதிய தேர் அமைக்கும் பணிகளின் தொடக்க விழா நேற்று கோயிலில் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தேரின் கட்டுமான பணிகளை தொடங்கிவைத்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: புதிய தேர் அமைக்கும் பணி மட்டுமில்லாமல், விரைவில் கும்பாபிஷேக திருப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன. இதற்காக, ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குன்றத்தூரை சுற்றி நவக்கிரங்களுக்கும் தலங்கள் அமைந்துள்ளன.

நவக்கிரகங்களை தரிசிக்க தஞ்சாவூர், நாகப்பட்டினம் பகுதிகளுக்கு செல்ல இயலாதவர்கள் பயன்பெறும் வகையில், நமது பகுதியை சுற்றி அமைந்துள்ள கொளப்பாக்கம், சோமங்கலம், மாங்காடு, போரூர், குன்றத்தூர் திருநாகேஸ்வரம், கிருகம்பாக்கம் மற்றும் பூவிருந்தவல்லி பகுதிகளில் அமைந்துள்ள நவக்கிரக தலங்களுக்கான சுற்றுலா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது, பெரியபாளையம் பவானி அம்மன், நங்கநல்லூர் ஆஞ்சநேயர், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் ஆகிய 3 கோயில்களில் புதிய தங்கத் தேர்களும், சென்னை காளிகாம்பாள், இருக்கன்குடி, திருத்தணி, திருக்கருக்காவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய கோயில்களில் 5 புதிய வெள்ளித்தேர்கள் செய்யும் பணிகள் மற்றும் சுமார் ரூ.31 கோடி செலவில் 51 புதிய மரத்தேர்கள், ரூ.4.17 கோடி மதிப்பில் மரத்தேர் மராமத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, மண்டல இணை ஆணையர் வான்மதி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் பக்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x