Published : 08 Jul 2023 07:57 AM
Last Updated : 08 Jul 2023 07:57 AM

காவல் துறையினருக்கு ஆண்டுக்கு இருமுறை 10 நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

பாஜக தலைவர் அண்ணாமலை

கோவை: காவல் துறையினருக்கு ஆண்டுக்கு இருமுறை 10 நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: காவல் துறையில், குறிப்பாக காவலர், தலைமைக் காவலர், உதவி ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு, வேறு எந்த துறையிலும் இல்லாத அளவுக்கு மனஅழுத்தம் உள்ளது. அதேபோல, அதிகாரிகளுக்கு நிர்வாக ரீதியிலான மனஅழுத்தம் உள்ளது. அவர்களுக்கும் வேலைப்பளு இருக்கும்.

எனவே, காவல் துறையை சீரமைக்க வேண்டும். காவல்துறையினரின் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். இதில், தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும்.

தமிழக காவல் துறையில் தற்போது 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பிவிட்டாலே, தற்போது காவலர்களுக்கு உள்ள பணி அழுத்தம் குறையும்.

எனவே, இரண்டு ஆண்டுகளில் காவல் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், இதற்காக முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை தற்போதுவரை வெளியாகவில்லை. அதை பொது வெளியில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும்.

காவல் துறையினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கூடாது. பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கழிப்பிட வசதிகூட இருப்பதில்லை. எனவே, காவலர்கள் பணிபுரியும் இடங்களில் உணவு, கழிப்பிடம், குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

கட்டாயமாக வாரத்துக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும். மேலும், ஆண்டுக்கு இருமுறை 10 அல்லது 15 நாட்கள் மொத்தமாக விடுப்பு அளிக்க வேண்டும்.

டிஐஜி விஜயகுமார் மரணம் குறித்து உயர் நீதிமன்ற மேற்பார்வையில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். இறப்புக்கான காரணங்கள் குறித்து, முழுமையாக ஆராயவேண்டும். விஜயகுமாரின் வாரிசுக்கு ‘குரூப் ஏ' தகுதியில் அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். அவரது தற்கொலை தூண்டப்பட்டதா எனவும், மன அழுத்தம் ஏன் என்பதற்கான காரணத்தையும் ஆராய வேண்டும்.

கோவையின் முன்னாள் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை விசாரணை நடந்து வருகிறது. அது தொடர்பான வழக்கு கோவையிலும் உள்ளது. இந்நிலையில், விஜயகுமாரின் தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. எதையும் தொடர்புபடுத்தி நாங்கள் பேசவில்லை. இருப்பினும், எல்லாவற்றையும் முழுமையாக ஆராய வேண்டும். வழக்கைக் கையாள்வதில் காவல் துறை அதிகாரிகளுக்கு உச்சபட்ச மன அழுத்தம் உள்ளது. எனவே, தற்கொலைக்கு தூண்டிய காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x