எம்.பி. ரவீந்திரநாத் வழக்கு தீர்ப்பு முதல் 3 மாநில அதி கனமழை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 6, 2023

எம்.பி. ரவீந்திரநாத் வழக்கு தீர்ப்பு முதல் 3 மாநில அதி கனமழை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 6, 2023
Updated on
2 min read

எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: உயர் நீதிமன்றம்: கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி தொகுதி வாக்காளர் மிலானி தொடர்ந்த தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேல்முறையீடு செய்ய ஏதுவாக இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

சட்ட அமைச்சர் கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம்: ஊழல் வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க இசைவு ஆணை வழங்க வேண்டும் என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி எழுதியுள்ள கடிதத்துக்கு, தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அந்த விளக்கத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாகவும், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்துள்ள வழக்கில், விசாரணை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது என்றும், முறையாக அங்கீகரிக்கப்பட்ட நகலை தமிழக அரசு அளிக்காததால் முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிப்பு: அமைச்சர் பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நில அபகரிப்பு வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

நளினி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகனை, அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரந்தூரில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் கைது: பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்யும் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகாவில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தக்காளி திருட்டு: கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தக்காளி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கோனி சோமனஹள்ளி கிராமத்தில் சோமசேகர் என்ற விவசாயியின் தோட்டத்திலிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தக்காளி திருடப்பட்டுள்ளது. சோமசேகர் கடந்த 3 ஆண்டுகளாக தக்காளி பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்குடியின இளைஞரின் பாதங்களைக் கழுவிய ம.பி. முதல்வர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியின தொழிலாளி ஒருவர் மீது சிறுநீர் கழிக்கப்பட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட வீடியோ வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட நபரின் பாதங்களைக் கழுவியதோடு தனது வருத்தங்களையும் தெரிவித்துள்ளார், அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்.

இதுகுறித்த வீடியோவை பகிர்ந்துள்ள அவர், "இந்த வீடியோவை நான் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். பொதுமக்கள் தான் கடவுள் என்பதை அனைவருக்கும் உணர்த்தவே இதனைப் பகிர்கிறேன். மக்களுக்கு எதிரான எவ்வித கொடுமைகளும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது. மாநிலத்தில் ஒவ்வொரு தனிநபருக்குமான மரியாதையில்தான் எனது மாண்பு அடங்கியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தச் சம்பவத்தில் பிரவேஷ் சுக்லா என்பவர் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கையின் கீழ் பிரவேஷ் சுக்லாவுக்கு சொந்தமான கட்டிடத்தை அதிகாரிகள் பொக்லைன் மூலம் இடித்து தள்ளினர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்சிபி விவகாரம் குறித்து கபில் சிபல் கருத்து: "மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் ஜனநாயகம் இல்லை, அது தமாஷ்" என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் சட்டம் அதை அனுமதிப்பதாகவும், அவை அதிகாரத்தின் ரொட்டித்துண்டுகளைப் பற்றியது. மக்களைப் பற்றியது இல்லை" அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு சரத் பவார் வியாழக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார். அவரை வரவேற்கவும் ஆதரவளிக்கும் விதமாக ராஷ்ட்ரவதி வித்யார்த்தி காங்கிரஸ் வைத்துள்ள பாகுபலி படக் காட்சியில் அமரேந்திர பாகுபலியை கட்டப்பா முதுகில் குத்தும் காட்சியைச் சித்தரித்து அஜித் பவாரை விமர்சித்து போஸ்டர் வைத்திருந்தது.

இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த மெட்டாவின் ‘த்ரெட்ஸ்’: ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்று என மெட்டாவின் ‘த்ரெட்ஸ்’ சமூக வலைதளம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ட்விட்டர் தளத்தில் எண்ணற்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட முதல் 4 மணி நேரத்தில் சுமார் 5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளதாக மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, த்ரெட்ஸ் செயலியின் இலச்சினை தமிழின் 'கு' எழுத்து போல் இருப்பதாகவும், மலையாளத்தில் த்ரெ என்ற ஒலி கொண்ட எழுத்தின் சாயலில் இருப்பதாகவும் இந்தியாவில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கேரளா, கடலோர கர்நாடகா, கோவாவில் கனமழை பாதிப்பு: கேரளா, கடலோர கர்நாடகா மற்றும் கோவாவுக்கு வியாழக்கிழமை ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. இம்மூன்று மாநிலங்களிலும் அதி கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in