

ஹசன்: கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தக்காளி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தக்காளி விலை நாடு முழுவதும் குறைந்தபாடில்லை. விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, நடுத்தர மக்களின் நலன் கருதி தமிழகம், மேற்குவங்கம் என பல்வேறு மாநில அரசுகள் தக்காளியை நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகின்றன.
இந்நிலையில் கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் கோனி சோமனஹள்ளி கிராமத்தில் சோமசேகர் என்ற விவசாயியின் தோட்டத்திலிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தக்காளி திருடப்பட்டுள்ளது. சோமசேகர் கடந்த 3 ஆண்டுகளாக தக்காளி பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். செவ்வாய்க் கிழமை இரவு அவரது தோட்டத்துக்குள் புகுந்த திருடர்கள் 60 மூடைகளில் தக்காளியை எடுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து சோமசேகரின் மனைவி பர்வதம்மா கூறுகையில், "கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் தக்காளி மட்டுமே பயிரிட்டு வருகிறோம். மழை, நோய் எனப் பல காரணங்களால் வேறு பயிர்களை நாங்கள் பயிரிடவில்லை. இருப்பதோ 2 ஏக்கர் நிலம். அதில் நாங்கள் பாடுபட்டு விவசாயம் செய்தோம். ஆனால் அதையும் திருடர்கள் மொத்தமாக திருடிச் சென்றுள்ளனர். எஞ்சிய பயிர்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளனர்" என்றார். தக்காளி திருட்டு தொடர்பாக சட்டப்பிரிவு 379-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பருவமழை பொய்த்ததாலும், தேவை அதிகரிப்பாலும் தக்காளியின் விலை நாடு முழுவதும் தொடர்ந்து உச்சம் கண்டு வருகிறது. சராசரியாக ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தான் ஹசன் மாவட்டத்தில் இந்தத் தக்காளி திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.