அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஓ.பி.ரவீந்திரநாத் | கோப்புப்படம்
ஓ.பி.ரவீந்திரநாத் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி தொகுதி வாக்காளர் மிலானி தொடர்ந்த தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "தனக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பணப்பட்டுவாடா புகாரின் பேரில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை" என்று கூறியிருந்தார். ஆனால் இந்தத் தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், ரவீந்திரநாத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்காக, மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்திருந்தார். தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தனர். இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் வழக்கு, நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு இன்று (ஜூலை 6) விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், "இதுவரை இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில், 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது" என்று தீர்ப்பளித்தார்.

முறையீடு: இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். எனவே, 30 நாட்களுக்கு இந்த தீர்ப்பு அமலுக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in