

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்யும் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்துக்கு 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபைக் கூட்டங்களில் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதுவரை, 5 முறை கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஆய்வு செய்ய அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ள போராசிரியர் மச்ச நாதன் தலைமையிலான ஆய்வு குழு ஓரிரு நாள்களில் பரந்தூர் விமான நிலைய திட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வருவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, இந்த கள ஆய்வை நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இன்று ஏகனாபுரம் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து ஸ்ரீபெருமந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி பொதுமக்கள் பேரணியாக செல்ல முயன்றனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களை தடுத்தி நிறுத்திய போலீசார், அவர்களை கைது செய்தனர்.