முருகனை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

நளினி (இடது) , முருகன் (வலது) | கோப்புப்படம்
நளினி (இடது) , முருகன் (வலது) | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகனை, அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதில் இலங்கையைச் சேர்ந்த முருகன், திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தனது கணவரை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி, நளினி, மத்திய அரசுக்கு மனு அனுப்பியிருந்தார். இந்நிலையில், தனது மனுவின் மீது முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ கணவர் முருகன் விரும்புகிறார். பாஸ்போர்ட் பெறுவது தொடர்பாக அவர் இலங்கை தூதரகத்தை தொடர்புகொள்ள வேண்டியுள்ளது. ஆனால், தற்போது அடைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமில் உள்ள அவரால் அங்கிருந்து வெளிவர முடியவில்லை. எனவே, திருவான்மியூரில் வசிக்கும் தன்னுடன் சேர்ந்து வாழ வகை செய்யும் வகையில் முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும். வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்த பல வெளிநாட்டவர்களை சில நிபந்தனைகளின் அடிப்படையில் உறவினர்களுடன் தங்க அரசு அனுமதித்துள்ளது. சிலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகவும் அரசு அனுமதித்துள்ளது" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in