Published : 26 Jun 2023 09:21 PM
Last Updated : 26 Jun 2023 09:21 PM

காலையில் ‘ராஜினாமா’ பேச்சு, மாலையில் மறுப்பு: மதுரை எம்எல்ஏ பூமிநாதனின் ‘அந்தர் பல்டி’ பின்னணி என்ன?

மதுரை மாநகராட்சி கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசும் மதிமுக எம்எல்ஏ பூமிநாதன்

மதுரை: மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் திங்கள்கிழமை காலை மாநகராட்சி கூட்டத்தில் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறியதால் ஏற்பட்ட அரசியல் அழுத்தம், நெருக்கடியால் மாலையில், தான் அப்படி கூறவில்லை. ஆதங்கம்தான் பட்டேன் என்று ‘அந்தர்பல்டி அடித்தார்.

சாலை, குடிநீர் பதிப்பு பணிகள்: மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் தற்போது பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிப்பு, புறநகரின் 28 வார்டுகளில் பாதாளச் சாக்கடை பணிகள் நடக்கிறது. இப்பணிகளில் குடியிருப்பு சாலைகள் முதல் முக்கிய சாலைகள் வரை அனைத்து சாலைகளையும் மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர்கள் தோண்டிப் போட்டுள்ளனர். இதனால், சாலைகள் புழுதிப்பறப்பதோடு குண்டும், குழியுமாக இருப்பதால் மக்களும், வாகன ஒட்டிகளும் மிகந்த சிரமப்படுகிறார்கள்.

குடிநீர் குழாய்களுக்கு குழி தோண்டும்போது அதிகாரிகள் மேற்பார்வை இல்லாமல் பணிகள் நடப்பதால் பாதாளசாக்கடை குழாய்களையும் சேர்த்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால், குடிநீரில் சாக்கடை நீர் கலக்கிறது. எம்எல்ஏ பூமிநாதனுடைய தெற்கு தொகுதி மக்கள், சாலையும் சரியில்லை, குடிநீரில் கழிவு நீரும் கலந்து வருகிறது என்று கடந்த சில மாதமாக அவரிடம் முறையிட்டுள்ளனர். பூமிநாதன் மீது, அரசியலை தாண்டி மாநகராட்சி மேயர் இந்திராணி, மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்துள்ளார். அதுபோல் உள்ளூர் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜனிடமும் பூமிநாதன் நல்ல நட்பிலே உள்ளார்.

பூமிநாதன் ஆதங்கம்: ஆனால், தன்னுடைய தொகுதிக்குட்பட்ட வார்டு மக்கள் பிரச்சினைகளை மாநகராட்சி அதிகாரிகள் காது கொடுத்து கேட்பதே இல்லை என்று அடிக்கடி எம்எல்ஏ பூமிநாதன் மாநகராட்சி கூட்டங்களில் ஆதங்கப்படுவார். மேயரிடமும் உரிமையோடு அதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார். மேயர் இந்திராணியும், தெற்கு தொகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்துவார்.

ஆனால், தெற்கு தொகுதி மட்டுமில்லை மற்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுளிலும் மேயர், அமைச்சர்கள் கூறியும் அதிகாரிகள், ஆட்கள் பற்றாக்குறை மற்றும் வாகனங்கள், நிதி பற்றாக்குறையை காரணம் சொல்லி மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் முக்கியத்துவமே கொடுப்பதில்லை. அமைச்சர் பி.மூர்த்தி கூட, தன்னுடைய கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் சரியாக பாதாளசாக்கடை, குடிநீர் திட்டப்பணிகள் நடப்பதில்லை என்று கடந்த வாரம் மேயரையும், அதிகாரிகளையும் அழைத்து கொந்தளித்தார்.

ராஜினாமா பேச்சு: ஆனால், தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன், தன்னுடைய தொகுதியில் மட்டும்தான் இப்படி சாலை, குடிநீரில் கழிவு நீர் கலப்பு பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு தீர்வே ஏற்படவில்லை. மக்கள் தொகுதிக்குள் போனாலே காரை மறித்து கேள்வி கேட்கின்றனர் என்ற ஆதங்கம், விரக்தியிலே மாநகராட்சி கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு மக்களுக்கு உதவதாக இந்த எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்யப்போகிறேன், என்று பேசிவிட்டு அமர்ந்தார்.அவர் இதை சாதாரணமாக சொல்லிவிட்டு மாநகராட்சி கூட்டரங்கை விட்ட வெளியே வந்தநிலையில்தான் தன்னுடய ராஜினமா பேச்சு, சொந்தக் கட்சியான மதிமுகவை தாண்டி திமுகவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது தெரியவந்தது.

மதிமுக கட்சி தலைமையில் இருந்தும், தமிழகம் முழுவதும் உள்ள அவரது கட்சி நிர்வாகிகளும் அவரிடம் பேசியுள்ளனர். திமுகவுடன் நல்ல அரசியல் உறவில் உள்ள மதிமுகவுக்கும், பூமிநாதன் எம்எல்ஏவுக்கும் அரசியல் அழுத்தமும், நெருக்கடியும் ஏற்படவே, கட்சி மேலிடத்தில் இருந்து உனடியாக மறுப்பு கொடுக்க கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

எம்எல்ஏ பதவியில் நீடிப்பேன்... - அதன் அடிப்படையிலே மாநகராட்சிக்கூட்டத்தில் காலையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறிய அவர், பகலில் செய்தியாளர்களை அழைத்து ‘‘நான் ராஜினாமா செய்யபோகிறேன் என்று சொல்லவில்லை. என்னுடைய வருத்தங்களைதான் பதிவு செய்தேன். தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வேறு மாதிரியாக வந்துவிட்டது. கட்சித் தலைவர் வைகோவும், தொகுதி மக்களும் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பதவியை வழங்கியுள்ளனர். எம்எல்ஏ பதவியில் தொடர்ந்து நீடித்து மக்களுக்கு சேவையாற்றுவேன்’’ என்றார்.

இதுகுறித்து எம்எல்ஏ பூமிநாதனிடம் “உங்கள் தொகுதியில் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? அதற்கு தீர்வு காண்பதில் ஏதாவது முட்டுக்கட்டை இருக்கிறதா?” என்று பேசி விளக்கம் கேட்கையில், அந்த விவகாரத்தை பற்றி தொடர்ந்து பேச மறுத்த நிலையில், “திமுக ஆட்சியில் சிறப்பாக திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. முதல்வர், அமைச்சர்கள், மேயர் அனைவரும் எனக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிறார்கள். அவர்களுடன் நல்ல நட்பிலே உள்ளேன். மாநகராட்சி அளவில் வார்டுகளில் மக்கள் பிரச்சினைகளை மேற்கொள்வதில் சில பிரச்சனைகள் உள்ளன. அதைதான் பேசினேன், எனக்கும் யாருக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சனைகள் இல்லை’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x