Published : 21 Jun 2023 08:15 AM
Last Updated : 21 Jun 2023 08:15 AM

திருவள்ளூரில் கனமழையால் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு வரத்து அதிகரிப்பு

மழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பால், கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி ஏரி.

திருவள்ளூர் / காஞ்சிபுரம்: சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி, ஜமீன் கொரட்டூர், செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது.

பூந்தமல்லி, திருத்தணியில் தலா 6 செ.மீ. ஆவடி, திருவாலங்காடு, திருவள்ளூரில் தலா 5 செ.மீ. தாமரைப்பாக்கம், செங்குன்றத்தில் தலா 4 செ.மீ. சோழவரம், ஆர்.கே.பேட்டை, ஜமீன் கொரட்டூர், பூண்டியில் தலா 3 செ.மீ. ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, பொன்னேரியில் தலா 2 செ.மீ. கும்மிடிப் பூண்டியில் ஒரு செ.மீ. என மழை அளவுகள் பதிவாகியுள்ளன. சராசரியாக் 3.6 செ.மீ. மழை பெய்துள்ளது.

இதேபோல் நேற்று பகலிலும் மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழையாக பெய்தது. இருப்பினும் திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கின. இம்மழையால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இதில், நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர், மழைநீர் என விநாடிக்கு 640 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர்இருப்பு 1,286 மில்லியன் கன அடியாக உள்ளது.

புழல் ஏரிக்கு, சோழவரம் ஏரி நீர் மற்றும் மழைநீர் என விநாடிக்கு 781 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு தற்போது 2,228 மில்லியன் கனஅடியாக இருக்கிறது.

சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 115 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு, கொண்ட சோழவரம் ஏரியின் நீர்இருப்பு 419 மில்லியன் கனஅடியாக உள்ளது. இதனை நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சி ஆட்சியர் ஆய்வு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியாகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி 19.7 அடி நீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 1,649 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

இந்த ஏரியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேற்று ஆய்வு செய்தார். நீர்வளத் துறை பொறியாளர்களிடம் ஏரிக்கு வரும் நீரின் அளவு மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவின் தன்மையை ஆய்வு செய்தார்.

மேலும் அப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தைப் பார்வையிட்டு, அங்கு பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். அவர்களுக்கு வழங்கப்படும் உணவையும் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து வாரணவாசி ஊராட்சி, வேண்பாக்கம் நியாயவிலை கடையை பார்வையிட்டு, அத்தியாவசிய பொருட்களின் இருப்பினை கேட்டறிந்தார். நியாய விலை கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் ஜா.சரவண கண்ணன், நீர்வளத் துறை பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். பூந்தமல்லி பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x