Published : 19 Jun 2023 09:41 AM
Last Updated : 19 Jun 2023 09:41 AM

காவிரி நீர் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி: பாசன சங்க தலைவர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் அருகே காவிரி நீரைப் பாசனத்துக்குப் பெற்றுத் தருவதாககூறி, பண மோசடியில் ஈடுபட்டதாக நீரேற்றுப் பாசன சங்கத் தலைவர் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் அருகே உள்ள சுண்ணாம்புக் கரட்டை தலைமையிடமாகக் கொண்டு தனியார் நீரேற்றுப் பாசன சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் தலைவராக நாமக்கல் அருகே கீரம்பூரைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர் இருந்து வருகிறார்.

இச்சங்கம் மூலம் 2020-ம் ஆண்டு ஜேடர்பாளையம் அருகே சோழசிராமணியில் உள்ள காவிரி ஆற்றிலிருந்து குழாய் மூலம் காவிரி நீரைப் பாசனத்துக்குக் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் குச்சிபாளையம், கீரம்பூர், வரப்பாளையம், வில்லிபாளையம், பிள்ளைகளத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களின் பாசனத்துக்கு காவிரி நீர் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதை நம்பிய விவசாயிகள் சுமார் 300 ஏக்கர் பரப்பளவுக்கு காவிரி நீர் கோரி, ஏக்கருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் சுமார் ரூ.3 கோடி வரை வசூலித்து வழங்கினர். இந்நிலையில், பணம் கொடுத்து 3 ஆண்டுகளாகியும் பாசனத்துக்கு காவிரி நீரை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாங்கள் கொடுத்த பணத்தைத் திரும்ப வழங்க பாசன சங்கத் தலைவர் கோபால கிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், பணத்தையும் கோபாலகிருஷ்ணன் கொடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை நாமக்கல் அருகே கீரம்பூரில் உள்ள கோபாலகிருஷ்ணனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பரமத்தி போலீஸார் அவர்களிடம் பேச்சு நடத்தினர். ஆனால், பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x