Last Updated : 01 Oct, 2017 10:34 AM

 

Published : 01 Oct 2017 10:34 AM
Last Updated : 01 Oct 2017 10:34 AM

வன உயிரின வாரத்தில் ஒலிபரப்பாகிறது ‘ஒரு வனவரின் பாடல்’ : கள பணியாளரின் திறமையை அங்கீகரித்த தமிழக வனத்துறை

உலக வன உயிரின வாரத்தை (அக்டோபர் முதல் வாரம்) கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழக வனத்துறை. அதில், அனைத்து வனத்துறை அலுவலகங்களில் வன உயிரின வார நிகழ்ச்சியில் ஒலிக்கத் தயாராகியுள்ளது கோவை மாவட்ட வனவர் ஒருவர் இயற்றிய பாடல்.

வனத்தின் மீது நேசம் கொண்ட ஒரு களப் பணியாளரின் திறமையை அங்கீகரித்து ஒலிபரப்ப உத்தரவிட்டுள்ளது வனத்துறை.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது அக்காமலை. தேசிய பூங்காவாக, பாதுகாக்கப்பட்ட வனமாக, புல்வெளி மலைகளாக மட்டுமே அறியப்பட்டது. உண்மையிலேயே நேரில் சென்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் அதுவும் ஒரு பூலோக சொர்க்கம் என்று. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை புற்களை போர்வையாய் போர்த்தியது போன்ற மலைப்பிரதேசமாய், வேர்களில் பிடித்து வைக்கும் நீரை, மக்களின் நீராதாரமாகவும் மாற்றிக் கொடுக்கும் அற்புத வனாந்திரம் அது. அப்படிப்பட்ட ஒரு சூழலில் வனவராகப் பணியாற்றுகிறார் பி.ராஜன் (41).

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட அக்காமலையில் பணியாற்றுகிறார். பணி நேரம் தவிர்த்து, தான் சார்ந்த வனப்பகுதியையே நேசித்து கவிதைகளாக, பாடல்களாக எழுதுவது இவரது வழக்கம். அப்படி உருவானதுதான் ‘பச்சை புல்மலையே’ எனத் தொடங்கும் பாடல். முகம்தெரியாத பல நண்பர்கள் உதவியால் தனது கலைப் படைப்பை உருவாக்கினார். அனைவராலும் கொண்டாடப்பட்ட அந்த பாடல் தற்போது தமிழக வனத்தின் பெருமைகளைக் கூறும் பாடலாக அடையாளம் பெற்றுள்ளது.

வனவர் பி.ராஜன் 'தி இந்து'விடம் கூறும்போது, ‘பிளஸ் 2 படிக்கும்போது சினிமா மெட்டில் பாடல் எழுதியிருக்கிறேன். காலப்போக்கில் எழுதுவதே நின்றுவிட்டது. 2014-ல் வால்பாறையில் பணி கிடைத்தபோது, எனக்கு கூடுதல் பணியாக அக்காமலை கண்காணிப்பு ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக காட்சி தரும் அந்த புல்வெளி மலை எனது எழுத்து 31cbkk01_forest (2) வனவர் பி.ராஜன்

ஆர்வத்தை அதிகப்படுத்தியது. பாடலாக்கும் எண்ணத்தில் இல்லாமல் எழுதினேன். கடந்த ஆண்டு வரை அதை எப்படி பாடலாக்குவது எனத் தெரியவில்லை. எதிர்பாராதவிதமாக பேருந்துப் பயணத்தில் சந்தித்த நண்பர்கள் மூலமாக தகுந்த இசைக் கோர்வையோடு பாடலாக்கத் தொடங்கினேன். எந்த விதத்திலும் பணி பாதிக்காதவாறு, கிடைத்த நேரத்தில் ஊதியத்தை செலவிட்டு இந்த பாடலை உருவாக்கினோம். இது என்னுடன் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பிடித்துப் போனது. ஆனைமலை புலிகள் காப்பக முன்னாள் கள இயக்குநர் கந்தசாமி இந்த பாடலை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்ல உதவினார்.

அட்டகட்டியில் நடந்த வேறொரு நிகழ்ச்சியில் புலிகள் திட்ட கூடுதல் தலைமை வனப் பாதுகாவலராக இருந்த ரகுராம்சிங் முன்னிலையில் பாடல் வெளியிடப்பட்டது. வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக இந்த பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர், சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கவனத்துக்கு அனுப்பப்பட்டது. அவர்களுக்கும் பிடித்துப் போனதால், வன உயிரின வாரத்தில் அதை ஒலிபரப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.

காடுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வழக்கமான வழிகளிலேயே வனத்துறை இதுவரை மக்களுக்கு உணர்த்தி வருகிறது. கடைநிலை ஊழியர்களின் திறமையை ஊக்குவித்தால், வனத்துறையின் நோக்கம் மேலும் வேகமாக இலக்கை எட்டும் என்பதே வனத்துறை ஊழியர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x