செந்தில்பாலாஜி வழக்கு அப்டேட் முதல் ஸ்டாலின் எச்சரிக்கை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 15, 2023

செந்தில்பாலாஜி வழக்கு அப்டேட் முதல் ஸ்டாலின் எச்சரிக்கை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 15, 2023
Updated on
3 min read

செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி: ஒமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியை மருத்துவ சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அமலாக்கத் துறை விரும்பினால், அவர்கள் தரப்பு நியமிக்கும் மருத்துவக் குழுவினர், தனியார் மருத்துவமனையில் செந்தில்பாலாஜியின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து பரிசோதனை செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அத்துடன், அமலாக்கத் துறை தரப்பு கோரிக்கையை ஏற்று, நீதிமன்ற காவலில் செந்தில்பாலாஜி இருக்கும்போது, அவர் சிகிச்சைப் பெற்ற நாட்களை கணக்கில் கொள்ளக் கூடாது. சிகிச்சைக்குப் பிறகு வரும் நாட்களை நீதிமன்ற காவல் என்று கணக்கில் கொள்ள வேண்டும்’ என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

செந்தில்பாலாஜி வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மற்றும் இடைக்கால ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

‘திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம்’- ஸ்டாலின் எச்சரிக்கை: திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம் என்றும், தங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும், இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பாஜக தலைமை, அமலாக்கத்துறை மூலமாக அவர்களது அரசியலைச் செய்ய நினைக்கிறது. மக்களைச் சந்தித்து அரசியல் செய்ய பாஜக தயாராக இல்லை. பாஜகவை நம்ப மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால்தான் மக்கள் பாஜகவை நம்புவார்கள். பாஜகவின் அரசியலே மக்கள் விரோத அரசியல்தான்!

கருத்தியல் ரீதியாக, அரசியல் ரீதியாக, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பாஜகவின் பாணி! அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி! இந்த ஜனநாயக விரோத பாணியைத்தான் இந்தியா முழுமைக்கும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஒரே ஸ்கிரிப்ட்டைத்தான் வேறு வேறு மாநிலங்களில் டப்பிங் செய்து வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே “உச்ச நீதிமன்றத்தையே எச்சரிக்கும் அளவுக்கு அப்படியென்ன செந்தில்பாலாஜி மீது பாசம்?” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

செந்தில்பாலாஜியை நீக்க ஆளுநரிடம் அதிமுக மனு: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக சார்பில் வியாழக்கிழமை நேரில் மனு அளிக்கப்பட்டது.

“அவை நாங்கள் உருவாக்கிய பாடப் புத்தகங்கள் அல்ல”: பாடநூல் மேம்பாட்டுக் குழுவில் அங்கம் வகித்து வரும் 33 கல்வியாளர்கள், பாடப் புத்தகங்களில் இருந்து தங்களின் பெயர்களை நீக்கக் கோரி என்சிஆர்டி-க்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில் தங்களுடைய கூட்டு முயற்சி ஆபத்தில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ் சக்லானிக்கு எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், "மூல புத்தகத்தில் இருந்து தற்போது உள்ள புத்தகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திருத்தங்கள், அப்புத்தகங்களை வேறு ஒன்றாக உருவாக்கிக் காட்டுகின்றன. இதனால் அவை நாங்கள் உருவாக்கிய புத்தகம் என்று கூறுவதும், அவற்றை எங்களின் பெயருடன் இணைப்பது கடினம் என்றும் நாங்கள் உணருகிறோம். எங்களுடைய ஆக்கபூர்வமான கூட்டு முயற்சி ஆபத்தில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

பிப்பர்ஜாய் புயல் - 74,000 பேர் வெளியேற்றம்: பிப்பர்ஜாய் புயல் கரையைக் கடப்பதையொட்டி, குஜராத் கடற்கரையோர மக்கள் 74 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு: சென்னை - கிண்டியில் ரூ.230 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தரை தளம் மற்றும் ஆறு மேல் தளங்களுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதயம், நுரையீல், நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்ட பல்துறை சிகிச்சைகள் வழங்கப்படும் இம்மருத்துவமனையில் 1,000 படுக்கை வசதிகள் உள்ளன.

பொது சிவில் சட்டம்: கருத்துக் கேட்கும் சட்ட ஆணையம்: நாடு முழுமைக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் தம் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று 22-வது சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே கருத்துக் கேட்பு நடந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், புதிதாக கருத்துகள் கேட்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போது மீண்டும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர முயல்வது, தேர்தல் தோல்விகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

அண்ணாமலை ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜூலை 14-ம் தேதி ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் மதமாற்ற தடைச் சட்டம் வாபஸ்: கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கர்நாடக மாநில பாடத் திட்டத்தில் கடந்த ஆட்சியாளர்களால் சேர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவார் குறித்த பாடம் நீக்கப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in