Published : 14 Jun 2023 10:07 AM
Last Updated : 14 Jun 2023 10:07 AM

மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கைது: கரூரில் பல்வேறு இடங்களில் போலீஸார் குவிப்பு

மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கைது காரணமாக கரூரில் பல்வேறு இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கரூர்: மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கரூரில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) காலை 8 மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.

சோதனையானது பல்வேறு குழுக்களாக பிரிந்து மத்திய போலீஸ் பாதுகாப்புப் படை உதவியுடன் நடைபெற்றது. 10 இடங்களில் நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து அமைச்சரின் சொந்த ஊரான கரூரில் பல்வேறு இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த காவல் நிலையங்களில் போலீஸார் தயார் நிலையில் இருக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும்,கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா, பாஜக அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு வருகிறார். கரூர் ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து கிராமங்களுக்கு ஊழியர்களை அழைத்துச் செல்லும் கரூர் நகரப் பகுதியில் செயல்படும் பெரும்பான்மையான வாகனங்கள் இன்று இயக்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x