Published : 13 Jun 2023 05:48 PM
Last Updated : 13 Jun 2023 05:48 PM

முரசொலி நில விவகாரம் | தேசிய எஸ்சி, எஸ்டி ஆணைய தலைவர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதாக அளித்த புகாரில் அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்த வழக்கில் தேசிய தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என குற்றம்சாட்டி, தமிழ்நாடு பாஜக செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டு கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 14 மற்றும் டிசம்பர் 13ம் தேதிகளில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரி முரசொலி அறக்கட்டளை சார்பில் 2020ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அனிதாசுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "அரசியல் உள்நோக்கத்தோடு இந்தப் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக புகார் அளித்துள்ள சீனிவாசனும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அப்போதைய துணை தலைவர் எல்.முருகனும் பாஜகவைச் சேர்ந்தவர்கள்.

தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக யாரேனும் புகாரளித்தால், இதுபோன்று விசாரணை நடத்துவார்களா? இந்த புகாரை விசாரிக்க தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை. மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆணையத்தின் தலைவர் சார்பில் இதுவரை பதில் மனுகூட தாக்கல் செய்யப்படவில்லை" என வாதிட்டார்.

அப்போது ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த விவகாரத்தை நாங்கள் அரசியலாக்கவில்லை. மனுதாரர் தரப்புதான் அரசியலாக்குவதாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் இதுவரை ஏன் பதில்மனு தாக்கல் செய்யவில்லை? என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஆணையத் தலைவர் இரண்டு வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x