Published : 12 Jun 2023 06:26 AM
Last Updated : 12 Jun 2023 06:26 AM
மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு தேவையான நீர், மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு குறுவை, தாளடி, சம்பா என 3 பருவங்களில் நடக்கும் சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். உரிய நாளான ஜூன் 12-ம் தேதியன்று இதுவரை 18 முறை மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக சேலத்தில் முகாமிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை மேட்டூர் வந்தார். நீர்வளத்துறை ஆய்வு மாளிகையில் தங்கினார்.
தொடர்ந்து, மேட்டூர் அணையில் இன்று (ஜூன் 12) காலை 9 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, வலது கரையில் மேல்மட்ட மதகுகளை மின் விசையால் இயக்கி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கிறார். இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன. லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைவர். தொடக்கத்தில் விநாடிக்கு 3,000 கனஅடியாக திறக்கப்படும் தண்ணீர் மாலைக்குள் 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் மூன்றரை நாட்களில் கல்லணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து அடுத்த ஆண்டு ஜன. 28 வரை தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு உரிய நாளான ஜூன் 12-ம் தேதி 18 முறையும், அதற்கு முன்னதாக 11 முறையும், காலதாமதமாக 60 முறையும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது 19-வது முறையாகும்.
அணை நிலவரம்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 865 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 727 கனஅடியாக சரிந்தது. அணையின் நீர்மட்டம் 103.41 அடியாகவும், நீர்இருப்பு 69.33 டிஎம்சியாகவும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT