Published : 12 Jun 2023 06:47 AM
Last Updated : 12 Jun 2023 06:47 AM
சென்னை: மத்திய அரசின் திட்டங்களை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்காதது முதல்வரின் தவறுஎன தேசிய மகளிர் ஆணையஉறுப்பினர் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தை பொருத்தவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை பாஜகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கூட்டணியில் இருந்தபோதும் கட்சிக்காக தனிப்பட்ட முறையில்பணியாற்றக் கூடாதா என்ன.கூட்டணி கட்சியினர் அவர்களுக்கான பணியை செய்வர். எங்களது கட்சியை வலுப்படுத்துவதற்காக, கட்சியினரை உற்சாகமாக வைத்திருப்பதற்கான பணிகளை நாங்கள் மேற்கொள்வோம்.
9 ஆண்டுகாலம் பாஜக தமிழகத்துக்கு என்ன செய்தது என கூறும் முதல்வர், எய்ம்ஸ் மட்டுமே கணக்கில் கொண்டு பேசி வருகிறார். கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் தமிழர்களுக்கு சென்று சேர்ந்திருக்க வேண்டும். அது அவ்வாறு சென்றடையவில்லை என்றால் நான் திமுக அரசைதான் குற்றம் சாட்டுவேன்.
அது முதல்வரின் தவறுதான். மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் குறித்து திமுக அரசுக்கு தெரியவில்லை, அப்படி தெரிந்திருந்தும் மக்களுக்கு அதனை அவர்கள் கொடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். முதல்வர் தமிழகத்துக்காக என்ன செய்திருக்கிறார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா வரும்போது மின்தடை போன்ற பிரச்சினை நடந்திருக்கிறது. அவர்பயண திட்டம் குறித்து மாநில அரசுக்கு ஏற்கெனவே தெரியும். பெரியளவு மழை இல்லாதபோதும் மின்தடை ஏற்பட்டது.
இதில் தங்களுக்கு தொடர்பில்லை என அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் நான் போட்டியிடுவது குறித்தும் கட்சி தலைமைதான் முடிவு செய்யும். நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவும் தயாராக இருக்கிறேன். மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை பலனளிக்குமா என்பது வரும் தேர்தலில் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT