Published : 09 Jun 2023 05:59 AM
Last Updated : 09 Jun 2023 05:59 AM
சென்னை: தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன், ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி: வீடு மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேநேரம், வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. இதனால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும். இதை திரும்பப் பெற வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 காசு முதல் 21 காசு வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை பெரு நிறுவனங்களால் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் கண்டிப்பாக தாங்கிக் கொள்ள முடியாது.
எனவே, தொழில் மற்றும் வணிகநிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டண உயர்வையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பாக மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த செப்டம்பரில் மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது.
ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் சிரமத்தில் இருக்கும் பொதுமக்களுக்கு மின் கட்டணம் உயர்ந்தால் பெரும் சுமையாக இருக்கும். எனவே தமிழக அரசு, இந்த ஆட்சி முடியும் வரையிலாவது மின் கட்டண உயர்வு குறித்த பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலையில் செயல்பட வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்.
மின் கொள்முதல், நிலக்கரி கொள்முதல், வீடு, தொழிலக மின் இணைப்பு வழங்குதல் போன்றவற்றில் நிலவுதாக சொல்லப்படும் முறைகேடுகளை களைந்து சீர்திருத்தம் செய்தாலே மின்வாரியம் லாபத்தை நோக்கி செயல்பட முடியும். அதை விடுத்து அவ்வப்போது மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வாழ்வை இருளில் தள்ளுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தற்போது அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: வீடுகளுடைய மின் கட்டண உயர்வை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்ற முதல்வரின் உத்தரவு வீட்டு மின் உபயோகிப்பாளருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தொழிற்சாலைகள் தாங்கி கொள்வார்கள் என்று நினைத்து சிறு தொழில்களுக்கான மின் கட்டண உயர்த்துவது எதிர்வினைகளை உருவாக்கும்.
இன்றைய சூழலில் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்ற சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு மின் கட்டண உயர்வு மேலும் நஷ்டத்தை அதிகரிக்கும். எனவே, தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்து முதல்வர் உத்தரவிட வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார இழப்பையும், வேலை இழப்புகளையும் தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT