Published : 26 Dec 2022 06:36 AM
Last Updated : 26 Dec 2022 06:36 AM

“அதீத நுகர்வு வேண்டாம்... ஜீவ பொருளாதாரத்துக்கு மாறுவோம்!” - ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ நூலின் ஆசிரியர் ஜான் பெர்க்கின்ஸ் சிறப்புப் பேட்டி

சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியபுத்தகங்களில் ஒன்று ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ (Confessions of an Economic Hit Man). 2004-ல் இந்தப் புத்தகம் வெளிவந்தபோது, அமெரிக்க அரசியல் தலைவர்களும், பெருநிறுவன முதலாளிகளும் கொந்தளித்தனர்.

சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) உலக வங்கி போன்ற அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச நிதி அமைப்புகள், வளர்ந்துவரும் நாடுகளை எப்படி கடன் வலைக்குள் சிக்கச் செய்து நிரந்தரமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றன என்பதை அமெரிக்காவின் பொருளாதார அடியாளாக இருந்துவந்த ஜான் பெர்க்கின்ஸ் (John Perkins) இந்தப் புத்தகத்தில் விரிவாக முன்வைத்துள்ளார்.

வளர்ந்துவரும் நாடுகளை கடன் வலைக்குள் வீழச் செய்வதற்கு அமெரிக்க பெருநிறுவனங்கள் நியமித்திருக்கும் நபர்கள்தான் பொருளாதார அடியாட்கள். 1971 முதல் அமெரிக்காவுக்காக பத்து ஆண்டுகளுக்கு மேலாக பொருளாதார அடியாளாக வேலை பார்த்துவந்த ஜான் பெர்க்கின்ஸ், ஒரு கட்டத்தில் தனது வேலை சார்ந்து பெரும் குற்ற உணர்வுக்கு உள்ளாகிறார். அமெரிக்காவின் சதியை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில், பொருளாதார அடியாளாக தன்னுடைய அனுபவத்தை புத்தகமாக எழுதத் தொடங்குகிறார். இந்த விவரம் வெளியில் கசிய, அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது. புத்தகம் எழுதுவதை கைவிடுகிறார். குற்ற உணர்வு அவரை வதைக்கிறது. என்ன ஆனாலும் பரவாயில்லை என்று புத்தகத்தை எழுதி வெளியிட முடிவெடுக்கிறார். 1980-களின்முற்பகுதியில் இந்தப் புத்தகத்தை எழுத திட்டமிட்ட அவர், 2000-களின் முற்பகுதியில் முடிக்கிறார்.

இதுவரையில் இந்தப் புத்தகம் 30 மொழிகளில் வெளிவந்திருக்கிறது. தமிழில் ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும், தற்போதுதான் அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பு வெளிவருகிறது. பி.எஸ்.வி குமாரசாமி மொழிபெயர்ப்பில் மஞ்சுள் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை ‘ஒரு பொருளாதார அடியாளின் கூடுதல் வாக்குமூலம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

2015-ல் இந்தப் புத்தகத்தை ஜான் பெர்க்கின்ஸ் விரிவாக்கி எழுதினார். 2004-க்குப் பிறகான பத்து ஆண்டுகளில் பொருளாதார அடியாட்களின் செயல்முறை எப்படி மாற்றம் அடைந்துள்ளது, உலகை மீட்டெடுக்க மக்கள் செய்யக்கூடியவை என்ன உள்ளிட்ட விவரங்களை அவர் இந்தப் புதிய பதிப்பில் சேர்த்தார். தற்போது மஞ்சுள் பதிப்பகம் வெளியிட்டிருப்பது இந்த விரிவாக்கப்பட்டப் பதிப்புதான்.

ஜான் பெர்க்கின்ஸுக்கு 77 வயதாகிறது. பழங்குடி கலாச்சாரம், சூழலியல் என பல்வேறு தளங்களில் அவர் தொடர்ந்து இயங்கி வருகிறார். தமிழில் அவரது புத்தகத்தின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு வெளிவந்திருக்கும் இந்தத் தருணத்தில், அவருடன் உரையாடும் வாய்ப்பு அமைந்தது…

ஐஎம்எஃப், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளை முற்றிலுமாக புறக்கணிப்பது சாத்தியமா? வெளிநாட்டு கடன் அதிகமானதால் இலங்கை திவால் நிலைக்கு சென்றுள்ளது. சீனாவிடம் மேலும் கடன் வாங்கி அந்நாட்டிடம் அடமானமாவது அல்லது சர்வதேச அமைப்புகளிடம் நிதி உதவி கோருவது என இலங்கை முன் இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தன. முதல் தேர்வைப் போலவே இரண்டாவது தேர்வும் சிக்கலானது. இலங்கையைப் போல் கடன் நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு வேறு என்னதான் தீர்வு?

ஐஎம்எஃப் போன்ற சர்வதேச அமைப்புகளிடமிருந்து கடன் பெற்ற நாடுகள் ஒன்றாக இணைந்து போராடுவதன் மூலம் இந்தப் பிரச்சினையை சமாளிக்க முடியும். கடனை திருப்பிச் செலுத்த முடியாது என்று அந்நாடுகள் கூற வேண்டும். இப்படி ஒரு சூழல் உருவாகும்பட்சத்தில் ஐஎம்எஃப் சமரசத்துக்கு இறங்கிவரும். நான் சொல்வது சாத்தியமற்றதல்ல. ஏற்கெனவே இப்படி நடந்திருக்கிறது. ஈகுவடார், அர்ஜென்டினா உள்ளிட்ட சில நாடுகள் இப்படி கூட்டாக இணைந்து செயல்பட்டு, தங்கள் கடன் தொகையில் தள்ளுபடியை பெற்றிருக்கின்றன

பொருளாதார காலனியாதிக்கம் தொடர்வதற்கு நாமும் உடந்தைதான் என்கிறீர்கள். இதில் மக்கள் செய்ய என்ன இருக்கிறது? இந்தப் புத்தகத்தில் “தேவையற்றதை வாங்குவதைக் குறையுங்கள், பூங்காக்களை உருவாக்குங்கள், நல்ல காரியத்தைத் செய்யுங்கள்..”என சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறீர்கள். உண்மையில், இந்த நடத்தைசார் மாற்றங்கள் பிரச்சினையை தீர்க்கும் என்று நம்புகிறீர்களா?

நாம் சவப் பொருளாதாரத்திலிருந்து ஜீவப் பொருளாதாரத்துக்கு மாறினால், உலகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தீரும். அதீத நுகர்வு, இயற்கை வளங்களைச் சுரண்டுதல், குறைந்த காலத்தில் அதிகம் லாபம் ஈட்டுதல் இவற்றை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கட்டமைப்புதான் சவப் பொருளாதாரம் (Death Economy). அனைத்து உயிரினங்களின் நலனையும் கருத்தில் கொண்டு, சமத்துவமிக்கசமூகத்தை உருவாக்க உதவும் பொருளாதாரக் கட்டமைப்புஜீவப் பொருளாதாரம் (Life Economy). நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் சவப் பொருளாதாரத்தை ஜீவப் பொருளாதாரமாக மாற்ற முடியும். இதற்கு நாம் ஒவ்வொருவரும் சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் நம்முடைய இலக்கு என்ன, எந்த விஷயம் நமக்கு மிகுந்த மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தரும் என்ற கேள்விகளை நாம் ஆழமாகக் கேட்டுக்கொள்வது அவசியம். நமக்கு விருப்பமான விஷயத்தை செய்வதன்மூலம் சவப் பொருளாதாரத்தை ஜீவப் பொருளாதாரமாகமாற்ற முடியுமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.மாற்ற முடியுமெனில், நாம் செயல்படுவதை எது தடுக்கிறது என்று கேட்டுக்கொள்ள வேண்டும். அந்தத் தடையை எதிர்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்என்பதை முடிவு செய்ய வேண்டும். இப்படிஒவ்வொரு தனி மனிதனும் தன்னைத் தானேகேட்டுக்கொள்வதன் வழியே ஒட்டுமொத்த மனிதகுலமே முன்னகர்ந்து செல்லும்.

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு கடன் வழங்கி அந்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அமெரிக்காவின் வழிமுறையை தற்போது சீனாவும் கைகொண்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் சீனா மிகப் பெருமளவில் உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. பல நாடுகள் சீனாவுக்கு கடன்பட்டுள்ளன. ஆனால், இந்தப் புத்தகத்தில் சீனா மீதான உங்கள் விமர்சனம் மென்மையானதாக இருக்கிறது ஏன்?

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பகைமை உலகை பேரழிவுக்குத் தள்ளுகிறது. அது மறுப்பதற்கில்லை. ஆனால், தற்போது அதைவிட மிகப் பெரிய பிரச்சினை நம்முன் இருக்கிறது. காலநிலை மாற்றம். நாம் பிழைத்திருக்க வேண்டுமென்றால், உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். சவப் பொருளாதாரத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

“ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும் இன்னொரு கதை உண்டு என்பதை பொருளாதார அடியாளாக நான் கற்றுக்கொண்ட பாடம். கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் கதைகளை தீவிரமாகப் பரப்பும் வல்லமை படைத்தவை.” இது ஒரு நேர்காணலில் நீங்கள் கூறியது. உங்களது இந்தக் கூற்றை சுற்றுச்சூழல் சார்ந்து தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கும் பிரச்சாரத்துடன் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது.

காலநிலை மாற்றம் சார்ந்து சர்வதேச அளவில் மிகப் பெரும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல் மறுக்கப்படக்கூடியது இல்லை. ஆனால், அது குறித்து சர்வதேச அளவில் உருவாகி இருக்கும் கதையாடல் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால், உலகை அச்சுற்றுத்தும் மாபெரும் பிரச்சினையான பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆண்டுக்கு ஆண்டு தீவிரமடைகிறது. ஆனால், பொருளாதார ஏற்றத்தாழ்வு பொதுக் கதையாடலாக மாறவில்லை. மாறாக, காலநிலை மாற்றம் பொதுக் கதையாடலாக மாறி இருக்கிறது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,பெருநிறுவனங்கள் அந்தக் கதையாடலை முன்னெடுத்துச் செல்கின்றன.

புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டிலிருந்து மாற்று எரிபொருளை நோக்கி நகர்வது என்பது பெரும் பொருளாதார வாய்ப்பை உருவாக்கக்கூடியது. பெருநிறுவனங்கள் காலநிலை மாற்றக் கதையாடலை முன்னெடுத்துச் செல்வதற்கு இதுஒரு காரணமாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இது ஒரு பக்கம் என்றால், காலநிலை மாற்றம் சார்ந்த அரசின் அக்கறையையும் நாம் முழுதாக நம்பக்கூடியதாக இல்லை. மக்கள் குறித்தும் சுற்றுச்சூழல் குறித்தும் கவலைப்படும் அளவுக்கு நம்முடைய அரசுகள் நல்ல மனம் கொண்டவையெனில், அவை இன்று பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவை நிறுவனங்களுக்குச் சாதகமாக வரிச் சலுகை அளித்துக் கொண்டிருக்கின்றன. ஆக, காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பிரச்சாரத்தில் பெருநிறுவனங்களின் லாபமும் உள்ளடங்கி இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பொருளாதார ஏற்றத்தாழ்வு, காலநிலை மாற்றம் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இவை இரண்டும் சவப் பொருளாதாரத்தின் விளைவுகள்தாம். தற்போதைய பொருளாதாரக் கட்டமைப்பு நுகர்வை மையப்படுத்தியதாக, குறுகிய காலத்தில் பெரும் லாபம் ஈட்டுவதை இலக்காகக்கொண்டுள்ளது. இந்தக் கட்டைமைப்பு தன்னையும் நம்மையும்அழிவுக்கு இட்டுச் செல்கிறது. எல்லா உயிர்களின் நலனையும் கருத்தில் கொள்ளும் ஜீவப் பொருளாதாரம்தான் நமக்குஇப்போது தேவை. காலநிலை மாற்றத்தையும் வருவாய் ஏற்றத்தாழ்வையும் மற்ற நெருக்கடிகளையும் நாம் ஜீவப் பொருளாதாரம் வழியாகத்தான் முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

கார்ப்பரேட் நிறுவனத்தில் உயர்பதவி, வெளிநாட்டுப் பயணங்கள், வருடத்தில் பல நாட்கள் நட்சத்திர விடுதியில் தங்குவது என சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்த நீங்கள், பழங்குடி மக்களின் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு அதில் அக்கறை செலுத்த ஆரம்பித்ததற்கு என்ன காரணம்?

ஒரே காரணம்தான். நான் சவப் பொருளாதாரத்தில் ஊறித் திளைத்து வெறுமையில் இருந்தேன். பழங்குடி மக்கள் ஜீவப் பொருளாதாரத்தை முன்னெடுப்பவர்கள். இதனால், அவர்கள்பால் ஈர்க்கப்பட்டு, அந்த வாழ்வியலில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

தற்போது உங்கள் அன்றாடம் என்ன?

எழுத அமர்வது, உடற்பயிற்சி செய்வது, வாழ்க்கையைஅனுபவிப்பது. இவைதான் தற்போது என் அன்றாடமாக உள்ளது. ஒரு எழுத்தாளன் தன் எழுத்தை கூர்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஒரு நல்ல பாடகன் 1 மணி நேரம் மேடையில் பாட வேண்டுமென்றால் 1000 மணி நேரம் பயிற்சி எடுக்க வேண்டும். எதிலாவது நாம் சிறந்து விளங்க வேண்டுமென்றால், அதை நாம் தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்க வேண்டும்.

உங்கள் புத்தகம் பெரும் தாக்கம் ஏற்படுத்தி இருந்தபோதிலும், ஐஎம்எஃப், உலக வங்கியின் ஆதிக்கம் இன்னமும் புதுப்புது வடிவில் தொடரவே செய்கிறது. இது உங்களுக்கு மனச்சோர்வை அளிக்கவில்லையா?

‘‘சட்டையை ஏற்றி மடித்து செயலில் இறங்குவதுதான் ஊக்கமின்மைக்கான தீர்வு’’ என்று என் தந்தை எனக்குக் கற்றுத் தந்து இருக்கிறார். அதனால் மனச் சோர்வடைய எனக்கு நேரமில்லை. - முகம்மது ரியாஸ், riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x