Published : 26 Oct 2015 11:20 AM
Last Updated : 26 Oct 2015 11:20 AM

கப்பல் உடைக்கும் தொழில் கரையேறுமா?

கட்டுரையின் தலைப்பே இத்தொழி லின் அவல நிலையை பறை சாற்ற போதுமானது. பழைய கப்பல்களை உடைத்து அதிலிருந்து இரும்பு உள்ளிட்டவற்றை மறு உபயோகம் செய்வது என்பது மிகப் பெரிய தொழிலாகும்.

குஜராத் மாநிலம் அலாங்கில் உள்ளதுதான் இந்தியாவிலேயே மிகப் பெரிய கப்பல் உடைக்கும் தளமாகும். கடந்த 2 ஆண்டுகளாக இத்தொழில் தள்ளாட்டத்தை சந்தித்துள்ளது.

குஜராத் மாநிலம் பவ நகரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அலாங். 1982-ம் ஆண்டு குஜராத் மாநில அரசு இங்கு கப்பல் உடைக்கும் தளத்தை உருவாக்கியது. முதலில் 46 பிளாட்டுகளில் கப்பல் உடைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 170 பிளாட்டுகளில் கப்பல் உடைக்கும் நிலையை எட்டியது. இதில் 135 பிளாட்டுகள் தனியார் வசமும், 35 பிளாட்டுகள் குஜராத் மாநில கடல்சார் ஆணையம் (ஜிஎம்பி) வசமும் இருந்தன. இங்கு 3 ஆயிரம் டன் எடையுடைய கப்பல் முதல் அதிகபட்சம் 85 ஆயிரம் டன் எடையுடைய கப்பல் வரை உடைக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் வசந்த கால நிகழ்வுகள். ஆனால் நிலைமை இப்போது படு மோசம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட கப்பல் உடைக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இந்தத் தொழிலில் மட்டும் 35 ஆயிரம் பணியாளர்கள் இருந்தனர். உத்தரப் பிரதேசம், ஒடிசா, பிஹார், ஜார்க்கண்ட் என பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வேலை கிடைத்தது.

ஆனால் இப்போது 25,000 பேருக்கு மேல் வேலையிழந்துவிட்டனர். இருக்கும் 10,000 பேருக்கும் தினசரி அரை நாள் மட்டுமே வேலை கிடைக்கிறது, அதுவும் ஒருசிலருக்கு. மற்றவர்கள் கப்பல் வராதா, தங்களுக்கு வேலை கிடைக்காதா என்று தினமும் கடலை வெறித்தபடி பார்த்திருக்கின்றனர்.

ஏன் இந்த நிலை?

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் சரிந்ததும் இதற்கு முக்கியக் காரண மாகும். இதனால் சர்வதேச நாடுகளுடன் போட்டி போடுவது கடினமாகிவிட்டது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த கப்பல் உடைக்கும் நிறுவனங்கள் மிக எளிதாக கப்பல்களை உடைக்கும் ஒப்பந்தத்தை பெற்று விடுகின்றன.

வரத்து குறைந்தது

ஒரு மாதத்துக்கு 40 முதல் 45 கப்பல்கள் வரை இங்கு உடைப்பதற்குக் கொண்டு வரப்பட்டன. தற்போது இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்து விட்டது. ஆகஸ்ட் மாதத்தில் 9 கப்பல்களே வந்துள்ளன. 2012-ம் நிதி ஆண்டில் இங்குள்ள நிறுவனங்கள் மொத்தம் 414 கப்பல்களை உடைத்துள்ளன. அடுத்த ஆண்டில் (2013) 394 ஆகக் குறைந்தது. கடந்த ஆண்டு 275 ஆகக் குறைந்துவிட்டது. இந்த ஆண்டு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இங்கு உடைக்கப்பட்ட கப்பல்களின் எண்ணிக்கை வெறும் 143 தான்.

ஸ்டீல் விலை சரிவு

டாலருக்கு நிகரான மதிப்பு சரிந்தது ஒருபுறம் என்றாலும் கப்பல்களிலிருந்து உடைத்து எடுக்கும் பழைய இரும்புகளை பயன்படுத்தும் உள்ளூர் ஸ்டீல் ரோலிங் மில்கள், இந்த பழைய இரும்பை வாங்க முன்வரவில்லை. சீனாவிலிருந்து இரும்புத் தகடுகள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் மில்களும் இரும்பை வாங்க தயக்கம் காட்டுகின்றன. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு ஒரு டன் ரூ. 26 ஆயிரமாகும். இந்தியாவில் உற்பத்தியாகும் இரும்பு தகடு ஒரு டன் விலை ரூ. 32 ஆயிரம். இதுவும் கப்பல் உடைக்கும் தொழிலை கடுமையாக பாதித்துள்ளது.

கூலி குறைந்தது

வேலையில்லாத காரணத்தால் தொழிலாளிகள் குறைந்த கூலிக்கு வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒருநாள் கூலி ரூ.350 பெற்று வந்தவர்கள் இப்போது ரூ.250 கூலிக்கு வேலை செய்யக் காத்திருக்கின்றனர். கப்பல் உடைக்கும் தொழில் அபாயகரமானது. ஆனால் அதையே வாழ்வாதாரமாக நம்பியிருந்த 35 ஆயிரம் தொழிலாளிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இங்குள்ள தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு பணம் அனுப்புவதற்காக பல பொதுத்துறை வங்கிகளின் கிளைகள் தொடங்கப்பட்டன. ஆனால் இப்போது அவற்றில் எவ்வித பண பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. ஊழியர்களுக்கு தினசரி அரை நாள் விடுமுறை தருவதற்குத்தான் வங்கிக்கு வர வேண்டியிருக்கிறது என்று அங்குள்ள வங்கி மேலாளர்கள் புலம்பும் நிலை மையில் ஊர் உள்ளது.

இந்த நிலைமை சீராக வேண்டும் என்றால், டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ஸ்திரமடைய வேண்டும், சீனாவிலிருந்து இரும்பு இறக்குமதியைக் குறைக்க வேண்டும். இவையெல்லாம் நடந்தால்தான் கப்பல் உடைக்கும் தொழில் கரையேறும். நடக்குமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x