Published : 08 Jan 2024 06:10 AM
Last Updated : 08 Jan 2024 06:10 AM

தொழில்முனைவு மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும்! - ‘கிஸ்ஃபுளோ’ நிறுவனர் & சிஇஓ சுரேஷ் சம்பந்தம் பேட்டி

ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி 07

வெளிநாடு போல் இருக்கிறது சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைந்திருக்கும் உலக வர்த்தக மையம் (WTC). 2021-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த மையம், இன்றுசென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது.18 லட்சம் சதுர அடியில் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்தமையத்தில், அமேசான், கேட்டர்பில்லர் என சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. சுரேஷ் சம்பந்தத்தின் ‘கிஸ்ஃபுளோ’(Kissflow) நிறுவனமும் இங்குதான் இருக்கிறது.

2003-ம் ஆண்டு சிறிய அளவில் தொடங்கப்பட்ட கிஸ்ஃபுளோ, தற்போது மென்பொருள் துறையில் இந்திய அளவில் கவனிக்கப்படும் நிறுவனமாக திகழ்கிறது. அதன் நிறுவனரும்தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) சுரேஷ் சம்பந்தம், இன்று தமிழ்நாட்டின் முக்கியமான தொழில்முனைவோர்களில் ஒருவராக அடையாளம் பெற்றிருக்கிறார். தன்னுடைய நிறுவனத்தை வளர்த்தெடுப்பதில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் சமூக,பொருளாதார மாற்றத்தை இலக்காகக் கொண்டு ‘கனவு தமிழ்நாடு’ என்ற அமைப்பையும் ஒருங்கிணைத்து வருகிறார்.

ஒரு காலை வேளையில் அவரது அலுவலகத்தில் அவரைச் சந்தித்தேன். அறையின் மூலையில் புத்தகங்கள் குவிந்திருந்தன. தொழில்முனைவு தொடர்பான புத்தகங்களைவிடவும் அண்ணா, பெரியார், காமராஜர், சமூக நீதி என அரசியல் புத்தகங்கள் அதிகம் காணப்பட்டன. அவரது மேஜையில் இருந்த இரண்டு புத்தகங்கள் கவனம் ஈர்த்தன. ஒன்று, ‘இந்து தமிழ் திசை’ வெளியீடான ‘மாபெரும் தமிழ்க் கனவு’. மற்றொன்றுஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘Journey of A Civilization’.

உரையாடல் தொடங்கியது... உங்கள் தொழில்முனைவுப் பயணம் எப்படி தொடங்கியது? - என்னுடைய தொழில்முனைவுப் பயணம் மிகவும் தற்செயலானது. என்னுடைய சொந்த ஊர் கடலூர். மேல் நடுத்தரவர்க்க குடும்பம். இதனால் பணம் சார்ந்து எனக்கு நெருக்கடிஇல்லை. என்னுடைய அப்பா தீவிர கம்யூனிஸ்ட். எல்ஐசியில் வேலை பார்த்தார். சில சொத்துப் பிரச்சினைகள் இருந்ததால், அது தொடர்பாக காவல் நிலையம், நீதிமன்றம் என்று பதின்ம வயதிலேயே நான் அலைய வேண்டி இருந்தது. இதனால், நான் கல்லூரிக்குச் செல்லவில்லை.

பள்ளி முடித்துவிட்டு, கடலூரில் இருந்த டைப் ரைட்டிங் வகுப்பில் சேர்ந்தேன்.1992-ம் ஆண்டு அது. அந்த டைப் ரைட்டிங் நிலையத்தில் ஒரு கணினியும் இருந்தது. 50 ரூபாய் கட்டணம் செலுத்தினால், கணினி கற்றுக்கொள்ளலாம். கணினி கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். கணினி என்னை மிகவும் ஈர்த்தது. இதனால், மிகுந்த ஆர்வமுடன் கோடிங் எழுதவும் கற்றேன்.

அதைத் தொடர்ந்து நண்பர்கள் 5 பேர் சேர்ந்து சொந்தமாக கணினி நிலையம் ஒன்றை ஆரம்பித்தோம். அப்போதுஎனக்கு வயது 19. மற்றவர்கள் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். இதனால், நான்தான் கணினி நிலையத்தை முழுநேரமாக கவனித்துக்கொண்டேன். கணினி தொழில்நுட்பம் சார்ந்து ஆழமாக கற்றுக்கொள்ள அது எனக்கு உதவியாக அமைந்தது. மூன்று ஆண்டுக்குப் பிறகு அந்நிலையத்தை மூடும் சூழல் ஏற்பட்டது.

இனி என்ன செய்வதென்று எனக்குள் குழப்பம்.பெங்களூர் செல்ல முடிவெடுத்தேன். அங்கு ஹெச்பி நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. நான் கணினி துறையில் கல்லூரிப் பட்டம் பெற்றிருக்கவில்லை. ஆனால், அனுபவப்பூர்வமாக ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தேன்.

இதனால், ஹெச்பியில் வேலைக்கு எடுக்கப்பட்டேன். அங்கு மூன்றாண்டு பணிபுரிந்த பிறகு செலக்டிகா என்ற அமெரிக்க நிறுவனத்துக்கு மாறினேன். அங்கு மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன். நான் வேலை பார்த்த பிரிவை, அக்செஞ்சர் நிறுவனம் வாங்கியது. என்னுடன் பணிபுரிந்த பெரும்பாலானோர் அக்செஞ்சருக்கு மாறினர்.

அப்போது என் முன் ஒரு கேள்வி எழுந்தது: இன்னும் எத்தனை நாள் ஒரு நிறுவனத்தின் கீழ் வேலை பார்ப்பது? நாமே சொந்தமாக நிறுவனம் தொடங்கலாம் என்று முடிவு செய்தேன். ‘Low code No code’ என்று ஒரு வகைமை உண்டு. இதன்படி, கோடிங் எழுதுவதில் பரிச்சயம் இல்லாதவர்கள் கூட தங்களுக்கான மென்பொருளை வடிவமைத்துக்கொள்ள முடியும். அந்த சமயத்தில் இப்பிரிவில் இந்தியாவில் பெரிய அளவில் நிறுவனங்கள் உருவாகவில்லை. இந்நிலையில், இதை மையப்படுத்தி 2003-ம் ஆண்டு கிஸ்ஃபுளோ நிறுவனத்தை தொடங்கினேன்.

உண்மையில் எனக்கு அப்போது தொழில்முனைவு குறித்துபோதிய அனுபவம் கிடையாது. நிதி திரட்டுதல், சந்தைப்படுத்துதல், விற்பனை குறித்து விவரங்கள் தெரியாது. தன்னம்பிக்கையும் துணிச்சலும் மட்டுமே என்வசம் இருந்தன. இப்போது யோசித்துப் பார்க்கையில், 100 சதவீதம் திட்டமிடலுடன் எந்தத் தொழிலையும் ஆரம்பிக்க முடியாது என்றேதோன்றுகிறது. ஓரளவு தெளிவுடன் களத்தில் இறங்கிவிட்டால் போதும், பாதை தானாக புலப்பட ஆரம்பிக்கும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழியாக தற்போது உலகம் அடுத்தகட்ட பரிணாமத்துக்குள் நுழைந்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தை எதிர்கொள்ள நம்மை எப்படி தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? - முதலில் இந்தக் காலகட்டத்தின் பொருளாதாரப் போக்கை நாம் வரையறுக்க முயல வேண்டும். அப்போதுதான், அதற்குத் தேவையான திறன்களைப் பற்றி நாம் பேச முடியும். இதுவரையிலான உலகின் பொருளாதார காலகட்டத்தை வேளாண்சார் பொருளாதாராம், தொழில்சார் பொருளாதாரம், அறிவுசார் பொருளாதாரம் என்று மூன்றாக வகைப்படுத்துவதுண்டு.

ஐடி துறை, நிதித் துறை ஆகியவை அறிவுசார் பொருளாதாரத்தின் கீழ் வருபவை. கடந்த 30 ஆண்டுகளாக அறிவுசார் பொருளாதாரமே உலகை முன்னகர்த்தி வருகிறது. எனவே, நாம் அறிவுசார் வேலைவாய்ப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அதேசமயம், தற்போது இன்னொரு மாற்றமும் நிகழத்தொடங்கி இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையின் நீட்சியாக, நாம் அறிவுசார் பொருளாதாரத்திலிருந்து பொழுதுபோக்குசார் பொருளாதாரத்துக்கு மாற ஆரம்பித்திருக்கிறோம்.

பொழுதுபோக்கு சார்ந்து மிகப் பெரும் பொருளாதார வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இதனால், பொழுதுபோக்கு விஷயங்களை உருவாக்குபவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். இந்தச் சூழலில், ஒவ்வொருவரும் தங்கள் துறைசார்ந்து கிரியேட்டிவாக செயல்படுவது அவசியமாக மாறியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்துத் தளங்களிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில்,அது குறித்த அச்சத்தை மக்களிடமும், அத்துறைசார் நிபுணர்களிடமும் பரவலாக பார்க்க முடிகிறது. உங்கள் பார்வை என்ன? - கணினி அறிமுகமான சமயத்தில், அது மக்களின் வேலையை பறித்துவிடும் என்று பிஎஸ்என்எல், எல்ஐசி உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் மத்தியில் கணினிக்கு கடும் எதிர்ப்பு இருந்தது.

தொழிற்சங்கவாதியான என்னுடைய அப்பா, பல்வேறு மேடைகளில் கணினிக்கு எதிராக பிரச்சாரம் செய்திருக்கிறார். ஆனால், இப்போது யோசித்துப் பாருங்கள். கணினி இல்லாமல் எந்த வேலையும் இல்லை. சொல்லப்போனால், கணினி வேலையைப் பறிக்கவில்லை. மாறாக வேலையின் தன்மையை மாற்றி அமைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கும் இது பொருந்தும். புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும்போது அது குறித்து மக்கள் அச்சத்தை வெளிப்படுத்துவது இயல்பு. ஆனால், தொழில்நுட்பங்களின் வருகையை நம்மால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. மனித குலத்தின் அடுத்தகட்ட நகர்வின் வெளிப்பாடு அது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், ஆபத்துகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அந்த ஆபத்தை எப்படி கையாளப்போகிறோம் என்பது குறித்துதான் சிந்திக்க வேண்டுமேயொழிய, அதை எதிரியாக பாவித்து செயல்படுவது சரியான அணுகுமுறை இல்லை.

தமிழ்நாடு குறித்து உங்கள் கனவு என்ன? - தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கைக் கொண்டு, 2018-ம் ஆண்டு ‘கனவு தமிழ்நாடு’ எனும் அமைப்பை உருவாக்கினேன். தற்போது தமிழக அரசும் இதை இலக்காகக் கொண்டு பயணிக்கிறது.

இந்தப் பயணத்தில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.வாகனம், மின்னணு, தோல்பொருள், ஆடை உள்ளிட்ட துறைகளில் சர்வதேச நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஆலையை கொண்டுள்ளன.

ஆனால், இது நாம் நிறைவடைந்துவிடக் கூடிய விஷயம் அல்ல. காரணம், இந்தத் துறைகளில் நாம் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்த உற்பத்தியாளராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு உழைப்புக்கான கூலி மட்டுமே கிடைக்கிறது. இத்துறைகளில் நாம் சொல்லிக்கொள்ளும் வகையில் பிராண்டுகளை உருவாக்கவில்லை. இனி நம்முடைய உற்பத்திப் பொருட்களை உலகளவில் எடுத்துச்செல்லும் வகையில், சர்வதேச பிராண்டுகளை உருவாக்கவேண்டும்.

நாம் தற்போது ஸ்டார்ட்அப் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் தொழில்முனைவு ஆர்வம் குறைவாக இருக்கிறது. 1,000 பேரில் 2 இளைஞர்களே தொழில்முனைவுக்கு தயாராக இருக்கின்றனர். நன்றாக படித்து, நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலைக்குச் சென்று கைநிறைய சம்பாதித்தால் மட்டும் போதும் என்பதே நம் சமூகத்தின் மனநிலையாக இருக்கிறது.

தொழில்முனைவு இல்லாமல் சமூகம் முன்னகராது. பொதுவாக, தொழில்முனைவு என்பது பணத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. ஆனால், தொழில்முனைவு பணம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நம்முடைய ஐடியா வழியாகவும் கண்டுபிடிப்பு வழியாகவும் தீர்க்கும் செயல்பாடு அது. தொழில்முனைவு சிந்தனை மிகுந்த சமூகமாக தமிழ்நாட்டை நாம் மாற்ற வேண்டும்.

- riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x