Published : 08 Jan 2024 06:07 AM
Last Updated : 08 Jan 2024 06:07 AM

முதலீட்டாளர் மாநாட்டுக்கு தொழில் துறையினர் பாராட்டு:இன்று பல லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தம்

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சிக்கு உலக முதலீட்டாளர் மாநாடு உதவும் என்று முன்னணி தொழில் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மாநாட்டின் நிறைவு நாளான இன்று பல லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட உள்ளது.

தமிழக தொழில்துறை சார்பில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். வரவேற்புரையாற்றிய அமைச்சர்டி.ஆர்.பி.ராஜா, ‘‘ஆட்டோமொபைல், உதிரிபாகங்கள், டயர் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஏற்றுமதி 5.37 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்தது. இது நடப்பாண்டு 5.6 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்’’ என்றார்.

நிகழ்ச்சியில், இந்திய தொழில் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.தினேஷ், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால், ஹூண்டாய் நிறுவன மேலாண் இயக்குநர் உன்சோ கிம், ஏ.பி.மொலார் மெர்ஸ்க் பிரதிநிதி ரெனே பில் பெடர்சன், கோத்ரேஜ் நிறுவன செயல் தலைவர் நிஷாபா கோத்ரேஜ் உள்ளிட்டோர் பேசினர்.

ஜேஎஸ்டபிள்யு எனர்ஜி நிறுவனத் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் பேசும்போது, ‘‘கடந்த 20 ஆண்டுகளாக முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 34 சதவீதம் காற்றாலை மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான தனிக் கொள்கையும் உள்ளது. இவற்றால் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. தமிழகத்தில் நாங்கள் ரூ.15 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்துள்ளோம். இதை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் பேசும்போது, ‘‘நல்ல தலைவர்கள், அதிகாரிகள், சட்டம்-ஒழுங்கு அமைதி, திறன்வாய்ந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள்தான் தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழகத்தை முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக கருதுகின்றன. 2021 மே மாதம் முதல் தற்போதுவரை 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.70 லட்சம் கோடிக்கான முதலீடுகள் பெறப்பட்டதுடன், 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாடு தமிழகத்தின் திறன், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றைக் காட்சிப்படுத்தும் இடமாக மட்டுமின்றி, தமிழகம் சர்வதேச அளவுவளரும் என்பதை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது’’ என்றார். தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நன்றி கூறினார்.

தொடர்ந்து, பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்ற கருத்தரங்கங்கள், முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு, காலணி உற்பத்தி வளர்ச்சி, தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளித் தொழில், திறன் மேம்பாடு, செமிகண்டக்டர், வானவெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கான தனிவழித் தடங்கள், சர்வதேச திறன் மையங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சூழல், புத்தாக்க நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெற்றன.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற ‘வாங்குவோர்-விற்பனையாளர் சந்திப்பு’ நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், 500-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விற்பனையாளர்கள் கலந்துரையாடினர்.

இந்த மாநாட்டில் 90-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கல்லூரி, பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் நிறைவு நாளான இன்று கருத்தரங்கங்கள், முதலீட்டாளர்கள் சந்திப்புகள் நடைபெறுகின்றன. மாலையில் நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் பல லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் நிறைவேறுகின்றன.

அம்பானி பாராட்டு: மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய முகேஷ் அம்பானி, "ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளது. ஏ.ஐ., புதுப்பித்தல் எனர்ஜி துறைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் அடுத்த வாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது’’ என்றார்.

2 லட்சம் பேர் பார்வையிட்டனர்: உலக முதலீட்டாளர் மாநாட்டின் நேரடி ஒளிபரப்பை தமிழகம் முழுவதும் 1.60 லட்சம் மாணவர்கள் கல்லூரிகளில் இருந்தவாறும், 40 லட்சம்மாணவர்கள் செல்போன் மூலமாகவும் பார்வையிட்டுள்ளனர்.

தமிழக அரசு ‘யூடியூப்’ சேனல் இணைப்புகளை வழங்கியுள்ளது. https://youtube.com/live/gK28GA7rV68 மற்றும் https://bit.ly/41E2Dfq என்ற இணைப்புகளைப் பயன்படுத்தி கல்லூரிகளில் மாநாட்டை நேரடியாக ஒளிபரப்பு செய்யுமாறு, அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் ஆங்கிலத்தில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழில் உரையாற்றினார். இதையடுத்து, மாநாட்டில் பங்கேற்ற மத்தியஅமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோருக்கு ‘டிரான்ஸ் கிரிப்டர்’ வழங்கப்பட்டு, அதன்மூலம் அனைவரும் முதல்வர் உரையைக் கேட்டனர்.

எரிசக்தித் துறையில் ரூ.1.37 லட்சம் கோடி முதலீடு: இந்த மாநாட்டில் வின்பாஸ்ட் ரூ.16 ஆயிரம் கோடி, டாடா எலெக்ட்ரானிக்ஸ் ரூ.12,082 கோடி, ஜெஎஸ்டபிள்யூ ரூ.12 ஆயிரம் கோடி, டிவிஎஸ் ரூ.5 ஆயிரம் கோடி, பர்ஸ்ட் சோலார் ரூ.2,500 கோடி, ஹூண்டாய் ரூ.6,180 கோடி, பெகட்ரான் ரூ.1,000 கோடி, கோத்ரெஜ் ரூ.515 கோடி, மிட்சுபிஷி ரூ.200 கோடி, குவால்காம் ரூ.177 கோடி உட்பட ரூ.50,654 கோடி மதிப்பிலான முதலீடுகள் முதல்வர் முன்னிலையில் மேடையில் கையெழுத்தாகின. எரிசக்தித் துறையில் மட்டும் ரூ.1.37 லட்சம் கோடிக்கான முதலீடுகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கான ஒப்பந்தம் இன்று மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x