Last Updated : 27 Aug, 2016 12:25 PM

 

Published : 27 Aug 2016 12:25 PM
Last Updated : 27 Aug 2016 12:25 PM

ஓய்வுக்காலத்துக்கு உகந்த குடியிருப்புத் திட்டங்கள்

குறுநகரங்களும், புறநகர்ப் பகுதிகளும் மூத்த குடிமக்களுக்கான வாழிடத் திட்டங்களுக்கான இடங்களாக மாறிவருகின்றன. இந்த மாதிரி, தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புத் திட்டங்களை முதியவர்கள் அதிகமாக நாடத் தொடங்கியிருக்கின்றனர். அதற்குப் பின்னால் நிறையக் காரணங்களும் இருக்கின்றன.

இஸ்ரோ விஞ்ஞானி எஸ். நாராயணன் ஓய்வுபெற்ற பிறகு, சென்னையில் வசிக்கும் குடும்பத்துடன் சேர வேண்டுமென்று முடிவெடுத்தார். இங்கே, அவருடைய நண்பர் ஓய்வுபெற்றவர்களுக்கான சமூகங்களைப் பற்றி அறிமுகப்படுத்தியிருக்கிறார். “ஹரிகோட்டாவில் வசிக்கும்போது, எல்லா விஷயங்களையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். ஆனால், ஆவடியில் ஓர் அடுக்குமாடி குடியிருப்புக்கு என் மனைவி, வயதான அம்மாவுடன் குடிபெயர்ந்தோம். அந்த இடத்தில் அடிப்படை வசதிகளைப் பெறுவது கடினமாக இருப்பதால், என் அம்மாவைப் பராமரிப்பது மிகவும் கடினமாக இருந்தது” என்கிறார் அவர்.

அவர் வண்டலூரில் மூத்த குடிமக்களுக்கு உகந்த வீட்டுத் திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டார். எழுபத்தைந்து வயதாகும் நாராயணனுக்கு, அந்த இடத்துக்குக் குடிபெயர்வது சரியான முடிவாகப்பட்டது. “இந்த மாதிரியான திட்டத்தில் வீடு வாங்குவது விலையுயர்ந்ததாக இருந்தது. ஆனால், அதில் கிடைக்கும் நன்மைகளை யோசிக்கும்போது, நம்முடைய பணத்துக்கு மதிப்பு இருப்பதாகவே தோன்றுகிறது. மருத்துவ வசதிகள், நல்ல உள்கட்டமைப்பு வசதிகள், பொழுதுபோக்குச் செயல்பாடுகள் என எல்லா வசதிகளும் இங்கே இருக்கின்றன. இந்த வீட்டுக்கான பராமரிப்புச் செலவு அதிகமாக இருந்தாலும், அதை நிர்வகிப்பதற்குத் தனியாக சேவையாளர் ஒருவரைத் திட்டக் குழு நியமித்திருக்கிறது. இதை ஒரு சாதாரண அடுக்குமாடிக் குடியிருப்பில் எதிர்பார்க்க முடியாது” என்கிறார் அவர்.

மூத்த குடிமக்களுக்கான இந்தத் திட்டங்களுக்கு இப்போது வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அதனால், கட்டுநர்கள் இதில் அதிகமாகக் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றனர். தற்போது, இந்தியாவின் மக்கள் தொகையில் 11.8 கோடி பேர் மூத்தோரே. இதனால் இந்தத் திட்டங்களுக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது.

சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்கள் மட்டுமல்லாமல் புனே, கோயம்புத்தூர், கோவா, டெஹ்ராதூன் போன்ற குறுநகரங்களும் முதியவர்கள் அதிகமாக வாழும் இடங்களாக இருக்கின்றன. தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில்தான், இந்தமாதிரி திட்டங்கள் அதிகமாக முறைப்படி நிறைவேறியிருக்கின்றன. சந்தையில் 52 சதவீதம் விநியோகத்தைக் கொண்டிருக்கின்றன. சென்னையில், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி, ஈசிஆர் போன்ற தெற்கு பகுதிகள் இந்தத் திட்டங்களுக்குப் பிரபலமானவை. மற்ற இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகரங்களான கோயம்புத்தூர், கொடைக்கானல், புதுச்சேரி போன்ற நகரங்களிலும் இந்தத் திட்டங்களை நோக்கி மக்கள் நகரத் தொடங்கியிருக்கின்றனர். சிரீன், ஏஷியானா, அதா, கோவை பிராபர்டீஸ் போன்றவர்களுடன் டாடா ஹவுசிங், பிரிகேட் குரூப், ஒசோன் குரூப், சாகேட் குரூப் போன்ற நிறுவனங்களும் இந்தத் திட்டங்களில் சமீபத்தில் இணைந்திருக்கிறார்கள்.

முதியோர் இல்லங்களுக்கும், முதியோர்களுக்கு உகந்த இந்த வீட்டுத் திட்டங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று சொல்கிறார் ‘சிரீன் சீனியர் லிவிங்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி. விஸ்வநாதன். “இந்தக் குடியிருப்புத் திட்டத்தின்மீது சமூகத்தில் பொதுவாகப் பரவியிருந்த ஒவ்வாமைக் கருத்துகள் பெரிய அளவில் மறையத் தொடங்கியிருக்கின்றன. இன்று 55-60 வயதில் இருக்கும் குழுவினர் தங்களுடைய ஓய்வுகாலத் திட்டமாக இதில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கின்றனர்” என்கிறார். மூத்த குடிமக்களின் தேவைகளுக்கேற்பக் கட்டப்பட்டிருக்கும் இந்த வீடுகள் 10 -15 சதவீதம் வரை கூடுதலாக விலை நிர்ணயிக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் அந்த வீடுகளில் இருக்கும் ஒன்றிணைந்த வசதிகள்.

“இந்த வீடுகளில் ஓய்வுகாலத்தில் வசிப்பதற்க வாங்க விரும்புபவர்கள், ஓய்வுபெறுவதற்கு எட்டிலிருந்து பத்து ஆண்டுகளுக்குமுன்பே திட்டமிட வேண்டும். எவ்வளவு சீக்கிரம் திட்டமிடுகிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் அது பொருளாதாரரீதியாகவும், வணிகரீதியாகவும் சாத்தியமானதாக மாறும்” என்கிறார் நைட் ஃபிராங்க்(இந்தியா)வின் சென்னை இயக்குநர் காஞ்சனா கிருஷ்ணன்.

கட்டுநர்கள் திட்டமிடலிலும், வடிவமைப்பிலும் நிறைய விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். உள்கட்டமைப்பு வசதிகளான பிடிமானங்கள் (grab rails), வழுக்காத டைல்ஸ், சக்கர நாற்காலிகளுக்கேற்ற பாதைகள் என எல்லாவற்றையும் ஒன்றிணைத்து இந்தக் கட்டிட வடிவமைப்பைத் திட்டமிடுகிறார்கள். பொது இடங்களான கலாச்சார, சமூக, ஆன்மிக நிகழ்வுகள், உணவகங்கள், கடைகள், நூலகங்கள், கிளப் பகுதிகள் போன்ற பகுதிகளிலும் இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. குடியிருப்பவர்களின் பன்முகத் தேவைகளை மனதில் வைத்து, புரோமோட்டர்கள் திரைப்படத் திரையிடல்கள், ஆன்மிகச் சொற்பொழிவுகள், திருவிழாக்கள் கொண்டாடும் இடங்கள் போன்ற வசதிகளையும் வழங்குகிறார்கள். “இந்தத் திட்டத்தில் மருத்துவப் பராமரிப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அவசர ஸ்விட்சுகள், அழைத்தவுடன் மருத்துவர்கள் வீட்டுக்கு வரும் வசதி, செவிலியர் வசதிகள் போன்றவையும் செய்துதரப்படுகின்றன” என்கிறார் நவீன்ஸ் வர்த்தக வளர்ச்சித் தலைவர் செஷாசாயீ.

இந்தக் காரணங்கள்தான் ஓய்வுபெற்றவர்களைப் புறநகர் பகுதிகளை நோக்கி நகருவதற்கு ஊக்கப்படுத்துகின்றன. உதாரணத்துக்கு, ஆர். வெங்கடேஸ்வரனும், அவர் மனைவி விஜய லக்ஷ்மியும் நகரத்தின் மையப்பகுதியில் இருந்த தங்களுடைய அடுக்குமாடிக் குடியிருப்பை வாடகைக்கு விட்டுவிட்டு இந்தத் திட்டக் குடியிருப்புக்கு மாறியிருக்கின்றனர். “நம் நகரங்களுக்கு இந்த மாதிரியான திட்டம் புதியது. இங்கே வழங்கப்படும் வசதிகளுக்காக மட்டும் நாங்கள் இடம்பெயரவில்லை. எங்களைப் போன்ற வயதினருடன் இணைந்து வசிப்பதும் ஒரு முக்கியமான விஷயம்” என்கிறார் வெங்கடேஸ்வரன். இவருடைய மனைவி விஜயலக்ஷ்மி தீவிர எழுத்தாளர். முதியோர் வாழ்க்கையைப் பற்றிப் புத்தகம் எழுதியிருக்கிறார். “நாங்கள் தோட்ட வேலை, பாட்டு, வழிபாடு கூட்டங்கள் போன்றவற்றில் ஒன்றாகக் கலந்துகொள்கிறோம். கடைசியாக, எது முக்கியமென்றால், எங்களுடைய மனநிம்மதிதான். அது இங்கே நிறையக் கிடைக்கிறது” என்று சொல்கிறார் விஜயலக்ஷ்மி.

இந்தப் பிரிவில் நாலாயிரத்துக்கும் அதிகமான யுனிட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனால், தேவைப்படுவதோ மூன்று லட்சம் யுனிட்கள் என்று சொல்கிறார் காஞ்சனா. தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் பதினேழு சதவீதம் மூத்தக்குடிமக்கள்தான். இது இன்னும் இரண்டு ஆண்டுகளில் மூன்று சதவீதம் அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்பு, சிறந்த மருத்துவ வசதிகள், பாதுகாப்பான சூழல் போன்ற முக்கியமான அம்சங்களைச் சென்னை நகரம் இதுபோன்ற திட்டங்களுக்கு வழங்குகிறது. “தெற்கில் முதியோர் வாழ்க்கைக்கேற்ற இடமாக கோயம்புத்தூர் விளங்குகிறது. சென்னை இதற்கு மாற்றாக உருவாகிவருகிறது” என்று சொல்கிறார் அக்ஷயாவின் தலைவர் டி.சிட்டிபாபு.

இந்தத் திட்டங்களில் பெரும்பாலும் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால், மலிவு விலைப் பிரிவுகளும், நடுத்தர விலைப் பிரிவுகளும்தான் திட்டமிடப்படுகின்றன. இந்த விலைக் குறைப்பு, கட்டுநர்களுக்கும் அதிகமான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது.

700-1400 சதுரஅடியில் திட்டமிடப்படும் வீடுகள் பெரும்பாலும் 1 ‘பிஎச்கே’ அல்லது 2 ‘பிஎச்கே’வாகக் கட்டப்படுகின்றன. சிறிய வீடுகள் வாங்குவதற்கும், பராமரிப்பதற்கும் எளிமையாக இருப்பதால் அதிகமாக விற்பனையாகின்றன.

“இதில் முற்போக்கான திட்டங்கள் மூன்று விதமான பராமரிப்பை முதியோர்களுக்கு வழங்குகின்றன. ஒரே இடத்தில் சுதந்திரமான வாழ்க்கை, உதவிபெறும் வசதி, திறமையான செவிலியர் வசதி போன்றவை கிடைக்கின்றன. மறதி நோய்க்கான பராமரிப்பு வசதிகளும் வழங்கப்படுகின்றன. இந்த வசதிகள் எல்லாம் இங்கே படிப்படியாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்” என்கிறார் ஜெஎல்எல் இந்தியாவின் தேசியத் தலைவர் மனிஷ் குமார்.

இதுபோன்ற தொடர்ச்சியான வசதிகள் எல்லாம் ஓய்வுபெற்ற சமூகத்துக்குத் தேவைப்படுபவை. 60-80 வயதுக்குள் இருப்பவர்களுக்குத் தேவைப்படும் வசதிகள் இந்தியாவில் இன்னும் வரவில்லை. சில நிறுவனங்கள் தற்போது இதில் கவனம்செலுத்தத் தொடங்கியிருக்கின்றன.

சுருக்கமாகத் தமிழில்: என். கௌரி

© தி இந்து (ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x