Last Updated : 22 Feb, 2017 10:33 AM

 

Published : 22 Feb 2017 10:33 AM
Last Updated : 22 Feb 2017 10:33 AM

தினுசு தினுசா விளையாட்டு: ஏழாங்கல்..!

குழந்தைகள் ஓடியாடி விளையாடச் சில அம்மா, அப்பாக்கள் விடுவதில்லை. கீழே விழுந்து குழந்தைகளுக்கு அடிபட்டு விடும் என்ற பயத்தால் மறுத்துவிடுவார்கள். இதற்கென்றே குழந்தைகள் ஒரே இடத்தில் உட்கார்ந்து விளையாடும்படியான விளையாட்டுகளும் உள்ளன. இந்த விளையாட்டுகளை ஆண் - பெண் குழந்தைகள் சேர்ந்தே விளையாடுவார்கள். என்றாலும் பெண் குழந்தைகளே இந்த விளையாட்டுகளை அதிகம் விளையாடுவார்கள்.

அப்படி ஒரு விளையாட்டைத்தான் இந்த வாரம் விளையாடப் போகிறோம். அந்த விளையாட்டின் பெயர் ‘ஏழாங்கல்’. இந்த விளையாட்டை ‘ஏழாங்கல்’என்று தென்மாவட்டங்களில் அழைப்பதைப் போல கொங்கு மண்டலத்தில் ‘தட்டாங்கல்’என்று அழைப்பார்கள்.

இந்த விளையாட்டை அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு குழந்தைகள் வரைதான் சிறு குழுவாகச் சேர்ந்து விளையாட முடியும். இப்படியான சிறுசிறு குழுக்களாக, பல குழுக்கள் தனித்தனியே உட்கார்ந்தும் இந்த விளையாட்டை விளையாடலாம்.

இந்த விளையாட்டை ஆடச் சிறு அளவிலான ஏழு கூழாங்கற்கள் அல்லது கரடுமுரடாய் இல்லாத ஏழு சிறு கருங்கற்கள் வேண்டும்.

சரி, இப்போது யாராவது ஒருவர் முதலில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்.

> ஏழு கூழாங்கற்களில் ஒரு கல்லை மட்டும், ஆள்காட்டி மற்றும் கட்டை விரலுக்கு இடையே வைத்துக்கொண்டு, மற்ற ஆறு கூழாங்கற்களையும் தரையில் வீசுங்கள்.

> பிறகு, விரலில் பிடித்திருந்த ஒற்றைக் கல்லை மேல் நோக்கி எறியுங்கள். உடனே, தரையில் வீசிய கற்களில் ஒரு கல்லை மட்டும் சட்டெனக் கையில் எடுத்து, மேலே எறிந்த கல் கீழே வருவதற்குள் அந்தக் கல்லையும் சேர்த்துப் பிடியுங்கள்.

> அடுத்து, கையிலுள்ள இரு கற்களையும் மேலே எறியுங்கள். அடுத்து ஒரு கல்லைக் கையிலெடுத்து, மேலே எறிந்த இரு கற்களையும் அதனோடு சேர்த்துப் பிடியுங்கள்.

> இப்படியாக, முதல் சுற்றில் ஒவ்வொரு கல்லாக எடுங்கள். இரண்டாவது சுற்றில் இரண்டு இரண்டு கற்களாக எடுங்கள்.

> மூன்றாவது சுற்றில், மூன்று மூன்று கற்களாக எடுங்கள்.

> நான்காவது சுற்றில் முதலில் நான்கு கற்களையும் பிறகு, மீதமிருக்கும் இரண்டு கற்களையும் எடுங்கள்.

> ஐந்தாவது சுற்றில் முதலில் ஐந்து கற்களையும் பிறகு மீதமுள்ள ஒரு கல்லையும் எடுங்கள்.

> ஆறாவது சுற்றில், கீழே வீசிய ஆறு காய்களையும் ஒரே நேரத்தில் எடுங்கள். மேலே வீசிய கல்லையும் சேர்த்துப் பிடியுங்கள்.

> ஏழாவது சுற்றில், ஏழு கற்களையும் வலது உள்ளங்கையில் வைத்துக் குலுக்கியபடி, மேலே எறியுங்கள். மேலே எறிந்த கற்கள் கீழே வருவதற்குள், இடது கையால் அணைத்தபடி, வலது புறங்கையால் ஏழு கற்களையும் சிதறாமல் ஒன்றாகச் சேர்த்துப் பிடியுங்கள்.

> இந்த ஏழு சுற்றையும் ஒருவர் இடையில் ‘அவுட்’ ஆகாமல் தொடர்ந்து செய்துவிட்டால், இந்த விளையாட்டில் அவருக்கு ஒரு ‘பழம்’ கிடைக்கும். இப்படியாய் யார் அதிக ‘பழம்’ பெறுகிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்.

> விளையாட்டில் மேலே எறிந்த கல்லைப் பிடிக்கத் தவறினாலோ அல்லது கீழே இருக்கும் கல்லை எடுக்கத் தவறினாலோ விளையாடியவர் ‘அவுட்’. பிறகு, அடுத்தவர் விளையாட்டைத் தொடரலாம்.

> உட்கார்ந்தபடி ஒரே இடத்தில் விளையாடினாலும், வேகமாக விளையாடுவதால் மனசுக்கு உற்சாகமும், கற்களை வீசிவிட்டு, அவற்றை லாவகமாகப் பிடிப்பதால் கைகளுக்கு நல்ல பயிற்சியும் இந்த விளையாட்டால் கிடைக்கும்.

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x