Published : 26 Dec 2018 11:17 AM
Last Updated : 26 Dec 2018 11:17 AM

டிங்குவிடம் கேளுங்கள்: முட்டை கோள வடிவில் இருப்பது ஏன்?

உயிரோடு இருக்கும்போது தண்ணீரில் மூழ்கும் உடல், இறந்த பிறகு மிதப்பது ஏன், டிங்கு?

– அ.ரா. அன்புமதி, 5-ம் வகுப்பு, மைக்கேல் ஜாப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சூலூர், கோவை.

நல்ல கேள்வி, அன்புமதி. உயிரோடு இருக்கும்போது தண்ணீரின் அடர்த்தியைவிட உடலின் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. அதனால் உடல் மூழ்கிவிடுகிறது. அடியில் சென்ற உடலின் நுரையீரலுக்குள் தண்ணீர் அதிகமாகச் சென்றுவிடுவதால் மரணம் ஏற்படுகிறது. இரண்டு, மூன்று நாட்களில் உடல் அழுக ஆரம்பிக்கும்.

உடலின் மேல் பகுதியிலும் உட்பகுதியிலும் பெருகும் பாக்டீரியாக்கள் சர்க்கரையையும் புரதத்தையும் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன. இதனால் உடலில் இருந்து மீத்தேன், அமோனியா, கார்பன் டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன் வாயுக்கள் வெளியேறுகின்றன. உடல் அழுகி, வீங்க ஆரம்பிக்கும்.  உடலிலிருந்து புதிய வாயுக்கள் உருவாகி, உடலை மேல்நோக்கித் தள்ளும்.

இப்போது உடலின் அடர்த்தி தண்ணீரின் அடர்த்தியைவிடக் குறைவாக இருப்பதால், மேலே வந்து மிதக்கிறது. தலைப்பகுதி தண்ணீருக்குள்தான் இருக்கும். தலையின் எடையைவிட, குறைவான அளவு தண்ணீரை வெளியேற்றுவதால் தலை தண்ணீருக்குள் இருக்கிறது.

என் அண்ணன் முதல் மதிப்பெண் வாங்குபவன். நான் சராசரி மதிப்பெண் பெறுபவன். கட்டுரை, பேச்சு, ஓவியம், விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவித்திருக்கிறேன். என் அண்ணன் படிப்பபைத் தவிர, எதிலும் கலந்துகொண்டதில்லை. ஆனாலும் என் அண்ணனைத்தான் வீட்டில் உயர்வாகப் பேசுகிறார்கள். சில நேரத்தில் இது என்னைக் காயப்படுத்திவிடுகிறது. முதல் மதிப்பெண் எடுத்தால்தான் சிறந்தவனாக இருக்க முடியுமா, டிங்கு?

- எம். சந்தோஷ், கிருஷ்ணகிரி.

உங்கள் எதிர்காலம் குறித்த அக்கறையினால்தான் அவர்கள் உங்களை இப்படிச் சொல்லி, மேலும் மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், யாரையும் யாருடனும் ஒப்பிட்டுப் பேசுவது தவறு. ஒருவரைப்போல் இன்னொருவர் இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் கற்றல் திறனும் ஆர்வமும் வேறுபடும். ஒருவரால் அனைத்துத் திறமைகளும் பெற்ற மிகச் சிறந்த மனிதராக இருக்க முடியாது.

உங்கள் அண்ணன் அளவுக்கு உங்களால் மதிப்பெண் வாங்க முடியவில்லை. உங்கள் அண்ணனுக்கு உங்களைப்போல் மற்ற திறமைகள் இல்லை. நீங்கள் இருவருமே சிறந்தவர்கள்தான். அவரவர் துறைகளில் திறமையாளர்களாக இருக்கிறீர்கள். இதை உங்கள் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். இருவரையும் சமமாக நடத்த வேண்டும். பெற்றோரின் செயலால் வருத்தப்படுகிறீர்கள் என்பதை அவர்களிடம் தெரிவியுங்கள்.

நிச்சயம் புரிந்துகொள்வார்கள். கவலைப்படாதீர்கள். என்னைப் பொருத்தவரை, நான் மதிப்பெண்களை வைத்து ஒருவரை எடை போட மாட்டேன்.  பேச்சு, கட்டுரை, ஓவியம், விளையாட்டுகளில் உங்களுக்குத் திறமை இல்லாவிட்டாலும் உங்களையும் உங்கள் அண்ணனையும் சமமாகத்தான் நினைப்பேன். அப்படித்தான் உங்கள் பெற்றோரும் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

பறவைகளின் முட்டைகள் ஏன் கோள வடிவில் இருக்கின்றன, டிங்கு?

– பி. ஸ்ரீவர்ஷினி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

பறவைகளின் முட்டைகள் அனைத்தும் ஒரே வடிவத்தில் இல்லை. சில முட்டைகள் கோள வடிவத்திலும் சில முட்டைகள் நீள் உருளை வடிவத்திலும் காணப்படுகின்றன. முட்டை உருண்டையாக இருந்தால் உயரமான இடங்களிலும் கூடுகளிலும் இடும்போது, வேகமாக உருண்டு கீழே விழுந்துவிடலாம்.

அதனால் உருளும் வேகம் குறைவாக இருக்கும் கோளம், நீள் உருளை வடிவங்களில் முட்டைகள் பரிணாம வளர்ச்சியில் உருவாகிவிட்டன என்றும், இந்த வடிவங்களில் பறவைகள் முட்டை இடுவதும் எளிதாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுவந்தது.

ஆனால், 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வு இதழில் 50 ஆயிரம் முட்டைகளின் தகவல்களைத் திரட்டி வடிவம் பற்றிய கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது பறவைகளின் பறக்கும் திறனைப் பொருத்தே முட்டைகளின் வடிவம் கோளம் அல்லது நீள் உருளை வடிவத்தில் அமைவதாகவும், கூட்டுக்கும் முட்டையிடுவதற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

நீண்ட தூரம் பறக்கும் பறவைகளின் முட்டைகள் நீள் உருளை வடிவத்திலும் கோழி போன்று அதிகம் பறக்காத பறவைகளின் முட்டைகள் கிட்டத்தட்ட கோள வடிவத்திலும் இருக்கின்றன. அதாவது பறவைகளின் உடலமைப்புக்கு ஏற்றவாறு முட்டைகளின் வடிவம் அமைகிறது, ஸ்ரீவர்ஷினி.

மிகச் சிறிய பல்லி உணவில் விழுந்தவுடன் எப்படி விஷமாக மாறுகிறது, டிங்கு?

– சி. ஜெகத்ரக்‌ஷா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

நம் வீடுகளில் இருக்கும் பல்லிகள் பொதுவாக விஷமற்றவை. பல்லி உணவில் விழுந்துவிட்டால் உணவு விஷமாக மாறுவதில்லை. பல்லி விழுந்த விஷயம் கேட்டு, உணவைச் சாப்பிட்டவர்கள் அருவருப்பு அடைவதால்தான் வாந்தி, மயக்கம், தலைவலி வருகிறது. அவர்களுக்கு விஷயம் தெரியவில்லை என்றால் இயல்பாக இருந்திருப்பார்கள். அதே நேரம், பல்லி விழாதவாறு உணவைப் பாதுகாப்பாகச் சமைக்க வேண்டும், ஜெகத்ரக்‌ஷா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x