Last Updated : 12 Jan, 2018 11:15 AM

 

Published : 12 Jan 2018 11:15 AM
Last Updated : 12 Jan 2018 11:15 AM

குரு - சிஷ்யன்: வந்த நாள் முதல்...

 

ப்போது நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கு மாணவர்களை வழிகாட்டுவதற்கான ஏற்பை முறைப்படியாகப் பெற்ற சமயம். எஸ். ஸ்ரீகுமார் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு நல்ல வழிகாட்டியைத் தேடிக்கொண்டிருந்தார். நூலகத்தில் பணியாற்றும் சோமராஜ் ஒருநாள் என்னிடம் வந்து, “என் உறவினர் ஒருவர், உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறார்; உங்கள் எழுத்துகளையும் படித்திருக்கிறார். உங்கள் மேற்பார்வையில் முனைவர் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். உங்களிடம் பரிந்துரை செய்யுமாறு என்னைக் கேட்டார்” என்று கூறினார்.

“ என்னிடம் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள வருபவர் என் ஆசிரியர் கவிஞர் முடியரசனின் படைப்புகளைத் தலைப்பாகத் தருவது என்ற முடிவில் இருக்கிறேன். வேண்டுமானால் கவிஞர் முடியரசனின் படைப்புகளைப் படித்துப் பார்க்கட்டும்; அவருக்குப் பிடித்தால், நேரில் வரச் சொல்லுங்கள்” என்று சொன்னேன். ஸ்ரீகுமாரும் முடியரசன் கவிதைகளைப் படித்தார். மகிழ்ச்சியோடு என்னிடம் வந்தார்.

ஆய்வு மாணவராக என்னிடம் பதிவுசெய்த நாள் முதற்கொண்டு எனக்கும் ஸ்ரீகுமாருக்கும் இடையேயான உறவு நெருக்கமானது. நாகர்கோவிலிலிருந்து ஸ்ரீகுமார் ஆய்வு தொடர்பாக என்னிடம் விவாதிப்பதற்காக அடிக்கடி மதுரைக்கு வருவார். என்னுடன் மணிக்கணக்கில் கலந்துரையாடுவார். ஆய்வை முடிக்கும் தருவாயில் இரண்டு மாதங்கள் ஸ்ரீகுமார் மதுரைக்கே வந்து ஒரு தனி வீடு எடுத்துத் தங்கினார். நல்லபடியாக ஆய்வை நிறைவு செய்து, முனைவர் பட்டம் பெற்றார். அவர் முனைவர் பட்டம் பெற்று 30 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. திருமூலர் கூறுவதைப்போல், ‘நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே…’ என்று இல்லாமல், இன்றளவும் என்னுடன் தொடர்பில் இருப்பது ஸ்ரீகுமார் ஒருவர்தான்!

அது மட்டுமல்ல! “ நான் வாழ்வில் முன்னேற வழிகாட்டியவர் பேராசிரியர் மோகன்தான்! நான் எழுத்துலகிலும் தடம் பதிக்க அவரே தூண்டுகோலாக இருந்தார்” என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என்னைப் பற்றி பேசாமல் இருக்கமாட்டார். நாகர்கோவிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் ‘பேராசிரியர் ஸ்ரீகுமார்’ என்றால், ஆயிரக்கணக்கான இளைய தலைமுறையினர் ‘நான் பேராசிரியர் எஸ். ஸ்ரீகுமாரிடம் படித்த மாணவன் சார்!’ என்று இன்று பெருமையாகக் கூறுகிறார்கள். இதைக் கேட்கவே அத்தனை பெருமையாக இருக்கிறது.

proffright

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறை ஆய்வு மையத்தில் 34 ஆண்டுக் காலம் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் ஸ்ரீகுமாருக்கு இப்போது வயது 64. ‘மக்கள் தகவல் தொடர்பியல்’, ‘இதழியல் நுணுக்கங்கள்’, ‘நாவலும் சமுதாயமும்’, ‘மொழியும் சமூகமும்’, ‘செம்மொழிச் சிந்தனை’, ‘தமிழில் திணைக்கோட்பாடு’ உள்ளிட்ட 24 நூல்களை அவர் வெளியிட்டுள்ளார். பல்வேறு உயரிய பொறுப்புக்களில் திறம்படப் பணியாற்றியுள்ளார் ஸ்ரீகுமார். சுனாமியின் கொடிய தாக்குதலுக்கு ஆளான மக்களுக்கு உதவியதில் அவரது பங்களிப்பு அளப்பரியது. அவர் பெறாத விருதுகளே இல்லை.

புகழேணியின் உச்சத்துக்கு சென்ற பிறகும், தம் வழிகாட்டியை மறக்காத ஸ்ரீகுமாரின் பண்பை நினைக்கும்போதெல்லாம் என் உள்ளம் திருவாசகத்தைப் படித்ததுபோல் உருகும். புறநானூற்றுப் பாடல் ஒன்று குறிப்பிடுவதுபோல், ‘தலைநாள் விருப்போடு’ – முதல் நாள் சந்தித்த போது கொண்டிருந்த மதிப்போடும் மரியாதையோடும் – இன்றளவும் என் நினைவில் பசுமையாக இருக்கும் எஸ்.ஸ்ரீகுமாரை இப்படிப் பாராட்டலாம்போலத் தோன்றுகிறது:

“பயிற்றுவித்த பொழுதின் பெரிது உவக்கும் தன் மாணவனைச்

சான்றோன் எனக் கேட்ட ஆசான்!”.

கட்டுரையாளர்
முன்னாள் தகைசால் பேராசிரியர்,
தமிழியற்புலம், காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x