இயக்குநர் இமயம்: பாரதிராஜா எனும் பள்ளிக்கூடம் | புகழஞ்சலி

இயக்குநர் இமயம்: பாரதிராஜா எனும் பள்ளிக்கூடம் | புகழஞ்சலி
Updated on
5 min read

நூறாண்டுகளைக் கடந்து வணிகப் பெரும் பரப்பாக மாறி நிற்கும் தமிழ் சினிமா, இன்று தொடாத 'ஜானர்'களே இல்லை. அறிவியல்புனைவிலும் வரலாற்றுப் புனைவிலும்கூட அபாரமான கதைக்களங்களை எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட மான பாய்ச்சல்களை நிகழ்த்திக் காட்டிவிட்டது.

ஆனால், எளிய கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை, அந்த நிலத்தின் ஈரமும் வாசமும் உலர்ந்துவிடாத யதார்த்தத்துடன் இன்றைக்கும் ஆகச்சிறந்த படங்களைத் தந்துகொண்டேயிருக்கும் இயக்குநர்களின் பரம்பரை ஒன்று, கடந்த ஐம்பது ஆண்டுகளாக அமைதியாக, ஆரவாரம் இல்லாத வெற்றிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

அதற்குப் பாதை அமைத்துக் கொடுத்து, அந்த இயக்குநர்களின் இதயமாகத் துடித்துக்கொண்டிருப்பவர் பாரதிராஜா. திரையுலகில் தனியோர் ஆளுமை யாகப் புகழடைந்து, தன்னைச் சுற்றி ஓர் இரும்புக்கோட்டையை அமைத்துக் கொண்டு, குறுகிய வட்டத்துக்குள் இயங்கும் இயக்குநர்கள் ஒரு ரகம்.

ஆனால், தான் தேர்ந்தெடுத்த திரைமொழியைப் பலரும் தொட்டுத் தொடரும்படி பெரும் தாக்கம் தந்து, அதை ஒரு பொதுப் பாதையாக்கி, அதில் வந்து இணைந்து நடந்த தன் மாணவர்களுக்கெல்லாம் தானே பள்ளிக்கூடமாக மாறி நின்றார் பாரதிராஜா! அவர்களையெல்லாம் கதாசிரி யர்களாகவும் கதாநாயகர்க ளாகவும் உயர்த்தி மகிழ்ந்தார்.

அவரு டைய ‘மாணவர்களின் மாணவர்களும்’ பாரதிராஜாவையே தங்கள் கலைப் பிதாமகனாகக் கருதி அவரை ‘அப்பா’ என அழைக்கத் தொடங்கிய அதிசயம் பாரதிராஜாவுக்கு மட்டுமே நிகழ்ந்தது.

பாரதிராஜா தாமறிந்த தமிழ்நாட்டுத் தெற்கத்தி மனிதர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து அதைத் திரைவெளிக்குள் துலக்கிக் காட்டினார் என்றால், அவருடைய மாணவர்களும் மாணவர் களின் மாணவர்களும் தாம் பிறந்து வளர்ந்த தமிழ்நாட்டின் வெவ்வேறு நிலப்பரப்புகளின் கதைகளை அவரது திரைமொழி தொட்டுப் படையல் வைத்துவருகிறார்கள்.

அதுமட்டுமல்ல; இயக்குநர் என்பவன் நடிகர்களைச் செதுக்கும் சிறந்த நடிப்புக் கலைஞன், அவன் நட்சத்திர நடிகர்களைச் சார்ந்து நின்று அவர்களைப் போற்றிப் படமெடுக்க வேண்டிய சிக்கலுக்குள் சிக்காமல், தான் தேர்ந்தெடுக்கும் கதை யில் முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்று நடிகனாகவும் புகழ்பெறலாம் என்பதற்கும் பாரதிராஜாவே (கல்லுக் குள் ஈரம்) பாதை போட்டுக் காட்டினார்.

நிலத்தோடு பிணைக்கப்பட்ட வாழ்க்கை

எழுபதுகளுக்கு முன்பும் தமிழ் சினிமாவில் கிராமிய வாழ்க்கை இருந்தது. ஆனால், அதைக் காட்சிமொழியில் கொண்டுவரப் பல கட்டுப்பாடுகளுடன் பம்மிக் கிடந்தது. அதையெல்லாம் சட்டைச் செய்யாமல் ஊடறுத்துப்பாய்ந்தது பாரதிராஜாவின் திரை மொழி.

வயல் வரப்புகளையும் களத்து மேடுகளையும் மணல் தேரிகளையும் கள்ளிப் புதர்களையும் கருவேலங்காடுகளையும் அசலான குடிசைகளின் அடுக்களை வரை போய் அங்கே கொதித்துக்கொண்டிருந்த அரிசிக்கஞ்சி வரையிலும் காட்சிப்படுத்தியது.

ஆனால், இதை மட்டுமே பாரதிராஜாவின் சாதனை என்று குறுக்குவது அறியாமை. மிக எளிய, விளிம்புநிலை மனிதர்களின் பிரதிகளாக இருந்த அவருடைய பெரும்பாலான கதாபாத்திரங்கள், தாம் வாழும் நிலத்தோடு நெருங்கிய குணத் தொடர்பு கொண்டிருந்தன.

தென் தமிழ்நாட்டு மக்களின் அசலான வாழ்க்கையில் கொட்டிக்கிடக்கும் பண்பாட்டுக் கதைகளைப் பிரதி யெடுத்து, களைய வேண்டிய பழமைகளைத் தனது படைப்புகளின் உள்ளுறையாக வைத்தார் பாரதிராஜா.

சாதிப் பெருமை பேசும் தெற்கத்தி மண்ணில், காலங்காலமாக உறைந்து கிடக்கும் பிற்போக்குத்தனங்களையும் சாதிய வன்மங்களையும் காட்சிப் படுத்தித் துணிச்சலாகத் தலையில் குட்டினார்.

‘ஜாதி இல்ல.. ஜாதி இல்லனு சொல்ற நீங்களே மூச்சுக்கு முந்நூறு தடவ பாலுத் தேவர் பாலுத் தேவர்னு சொல்றீங்களே பாலுன்றது உங்க பேரு... தேவர்ன்றது நீங்க படிச்சி வாங்குன பட்டமா?’ என்று ஒரு சிறுவன் கதாபாத்திரத்தின் வழியாகத் தன்னுடைய சொந்த சாதியை விமர்சனம் செய்து, சாதிக்கு வெளியே நின்ற மகா கலைஞன் பாரதிராஜா.

அதேபோல், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சாதிகளுக்கும் உரிய, அவர்களுடைய நிலவுடைமை பண்பாட்டில் ஆழ வேரோடிக் கிடக்கும் அண்ணன் - தம்பி உறவு, அக்காள் - தங்கை உறவு, தாய் மாமன் உறவு, முறைப்பெண் உறவு உள்ளிட்ட பல உறவு நிலைகளையும் அவற்றில் ஊடாடும் வெக்கை மனிதர்களையும் வீழ்ந்து நொறுங்கியவர் களையும் உணர்வின் மிகையின்றிச் சித்தரித்தார்.

சாதி, வர்க்கம், வன்மம், உறவு, பிரிவு ஆகியவற்றுள் சிக்கிச் சிதையும் காதலின் ஆன்மாவைப் புனிதப்படுத்தும் ‘நாடகத் தன்மை’க்குள் புகுத்திவிடாமல், தமிழ் மனசாட்சியின் முன் தன்னுடைய தனித்த திரைமொழியைக் கொண்டு காப்பாற்றி நிறுத்திய முதல் திரைக்கலைஞனும் அவரே!

காலத்தை மீறிய கலைப் பயணம்

தெற்கத்தி நிலப்பரப்பின் புழுதியிலிருந்து தொடங்கிய அவரது இந்தத் திரைப் பயணம் வெறும் பிராந்தியக் கதைகளாகச் சுருங்கிவிடவில்லை. அங்கிருந்து கிளைத்து ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் தன்னுடைய பண்பாட்டுப் பரப்பில் எதிர்கொண்ட சமகாலச் சிக்கல்கள் மீது தன் பார்வையை விரித்தார்.

பாரதிராஜா தன்னுடைய பெண் கதாபாத்திரங்களை வெறும் அழகுப் பதுமைகளாக அல்ல; அசாத்திய முதிர்ச்சியும் துணிச்சலும் கொண்டவையாக, ஆண் மைய உலகின் நெருக்கடிகளுக்கு நடுவே உடைப்பு கொண்டவையாக, காதலில் உறுதியும் தீவிரமும் கொண்டவை யாகப் படைத்தார்.

‘16 வயதினிலே’ மயில் தன்னை ஏமாற்றிய நகரத்து மருத்துவரைத் துணிச்சலாக நிராகரித்தாள். ரவுடி பரட்டையின் முகத்தில் காறித் துப்பினாள்.

மூடநம்பிக்கையின் பெயரால் ஊர் மொத்தமும் தன் மீது நிர்வாணத்தைத் திணித்து அவமானப்படுத்தும் போது, அதை எதிர்த்துப் போராடித் தப்பிப்பாள் ‘கிழக்கே போகும் ரயிலி’ல் ஏறிய பாஞ்சாலி.

‘புதிய வார்ப்பு’களில் தாலியைக் கழற்றித் தூக்கி எறிந்தாள் ஜோதி. ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் சிலுவைச் சங்கிலியைக் கழுத்திலிருந்து கழற்றிப் போட்டுவிட்டுப் போனாள் மேரி. சிறையிலிருந்து வெளியே வரும் கணவன், தன் ஒழுக்கத்தைச் சந்தேகிக்கும்போது வெகுண்டெழும் ‘புதுமைப் பெண்’ சீதா, வீட்டின் பூஜை

அறையில் அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீதை, சத்திய வான் சாவித்திரி, நளாயினி, கண்ணகி போன்ற பத்தினிப் பெண்களைப் பற்றிய புராண நூல்களை அள்ளிக் கொண்டுபோய் தன் வீட்டுத் தோட்டத் தில் ஒரு குழிவெட்டி, அதற்குள் அந்த நூல்களைப் போட்டுப் புதைத்துவிட்டு, வீட்டை விட்டு விடுதலை உணர்வோடு நடைபோட்டாள்.

கள்ளிப்பால் விஷத்தி லிருந்து தப்பிப் பிழைத்து மருத்துவராக உயர்ந்து தந்தைக்கு மருத்துவம் செய்துகாப்பாற்றினாள் ‘கருத்தம்மா’. கல்வியைத் தூய காதலுக் கான தகுதியாகக் கொள்ளாத வள் ஜெனிஃபர் டீச்சர். அண்ணனுக்காகத் தன் உயிரையே கொடுத்துவிட்டுப் போனாள் ‘கிழக்குச் சீமை யிலே’ விருமாயி.

மலைச்சாமிக்கு வீட்டில் கிடைக்காத மாண்பையும் மரியாதையையும் தன்னுடைய தூய்மையான அன்பின் மூலம் இட்டு நிரப்பினாள் ‘முதல் மரியாதை’ குயிலு.

இப்படி பாரதிராஜா படைத்த பெண் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல; ஆண், துணைக் கதாபாத்திரங்கள்வரை, அத்தனையும் அதுவரை தமிழரின் வாழ்வாகச் சித்தரிக்கப்பட்ட களங் களில் உலவிய மேட்டிமைக் கதாபாத்திரங்களை மீறி எழுந்து நடந்த எளிய மனிதர்கள்.

<div class="paragraphs"><p>மூவர் கூட்டணி</p></div>

மூவர் கூட்டணி

பாரதிராஜாவின் காலக்கட்டத்தை மீறிய இந்தக் கலைப் பயணத்தில் அவரது வெற்றிக்கான அடிப்படை அம்சம், சினிமாவை ‘டீம் ஒர்க்’ ஆகப் பார்த்த அவரின் நெகிழ்வுத்தன்மை.

எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என்கிற ‘சுய முனைப்பு' இல்லாதவராக, திரைக்கதை, இயக்கம் இரண்டும்தான் திரைமொழியில் முதன்மையான கலைகள் என்பதைத் தன் திரைமொழியின் வழியே காட்டிக்கொண்டேயிருந்தார்.

ஓர் இயக்குந ராகத் தனக்குக் கதை எழுதத் தெரியும் என்றாலும், தனக்கு நடுவில் உலவும் கதாசிரியர்களைக் கண்டறிந்து பயன்படுத்தும் பேராளுமையாக அவர் திகழ்ந்தார்.

பாக்யராஜ், ஆர்.செல்வராஜ், மணிவண்ணன், ரத்னகுமார் எனப் பலரைத் தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டி னார். கதாசிரியர்கள் எழுதிக் குவித்த காட்சிகளையெல்லாம் எடுக்காமல், தனக்கும் தன் கதாபாத்திரங்களுக் கும் என்ன தேவையோ அதைக் காட்சியில் வெட்டிச் செதுக்கிய அவரின் திறமையை அவருடைய எல்லாக் கதாசிரியர்களும் வியந்து போற்றியிருக்கிறார்கள்.

கலையும் வாழ்வும்

எழுபதுகளிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களின் மீது ஆர்வம் குன்றியிருந்த தலைமுறையைத் திரையரங்கு நோக்கி இழுத்தன பாரதிராஜாவின் திரைமொழியும் அதனோடு இணைந்த இளையராஜாவின் இசைமொழியும்.

இந்தக் கூட்டணியோடு ‘நிழல்கள்’ படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கியத் தமிழும் இணைந்தது. திரையிசைப் பாடல்களின் வழியாகவும் பின்னணி இசை கொண்டும் கதை சொல்லும் கலையாகத் தமிழ் சினிமா உருவெடுத்த பொற்காலத்தை இந்த மூவர் கூட்டணி சாதித்துக் காட்டியது.

‘எம்.ஜி.ஆர். படத்துக்குப் போறேன். சிவாஜி படத்துக்குப் போறேன்’ என்று கதாநாயகர்களின் பெயரைச் சொல்லிய காலத்தில், ‘பாரதிராஜா படத்துக் குப் போறேன்’ என்று இயக்குநரின் பெயரைச் சொல்லவைத்த யதார்த்த அலையின் காலம் அது. அரை நூற்றாண்டைக் கடந்து தமிழ் சினிமாவுக்கு ஒரு பல்கலைக்கழகமாக விளங் கிய பாரதிராஜா, முதுமையில் சிறந்த நடிப்புக் கலைஞனாகவும் பத்துக்கும் அதிகமான படங்களில் முத்திரைப் பதித்தார்.

கடைசிவரை அவர் தன் கலைவாழ்க்கையையும் பொதுவாழ்க்கை யையும் பிரித்துப் பார்க்கவில்லை. போராட்டக் களங்களில் தமிழர்களின் தார்மீக உரிமைகளைக் கோரி முன்நின்றார். தமிழ் சினிமாவை தமிழர்களின் சினிமாவாக மாற்ற விரும்பிய ‘பெப்சி - படைப்பாளி’ போராட்டத்தின் மூலவராக இருந்து தமிழ் சினிமாத் தொழிலுக்குப் புரட்சிக்கொடி ஏந்தியவர் பாரதிராஜா.

அதன் விளைவாகவே இன்று பல சினிமா சங்கங்கள் ‘தென்னிந்திய’ என்கிற சொல்லைப் புறக்கணித்து ‘தமிழ்நாடு’ எனச் சூடிக்கொண்டன. ஆட்சியில் அமரும் கட்சிகள் பதவிகளை அளிக்க முன்வந்த போதெல்லாம் அவற்றை ஏற்க மறுத்து, இலங்கையில் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு எதிராகத் திரைத்துறை யைத் திரட்டிப் போராடியவர்.

இனஅழிப்புக்கு எதிராக 2009இல் சென்னையில் திரைத்துறை நடத்திய போராட்டத்துக்குத் தலைமையேற்று, அன்றைய ஆளும் காங்கிரஸ் அரசு அளித்த ‘பத்ம’ பட்டத்தைப் போராட்டக் களத்திலிருந்து திருப்பி அனுப்பியவர் பாரதிராஜா என்கிற கலைப் போராளி!

தொடர்புக்கு - jesudoss.c@hindutamil.co.in

இயக்குநர் இமயம்: பாரதிராஜா எனும் பள்ளிக்கூடம் | புகழஞ்சலி
Thigi: ஆழ்மன ‘ரகசிய’ வலி, துணிவைப் பேசும் ஹேமாவும் மகள்களும் | திரை தேவதைகள் 20
இயக்குநர் இமயம்: பாரதிராஜா எனும் பள்ளிக்கூடம் | புகழஞ்சலி
Spider-Noir: கருப்பு வெள்ளையில் ஒரு ‘க்ளாசிக்’ அனுபவம் | ஓடிடி திரை அலசல்
இயக்குநர் இமயம்: பாரதிராஜா எனும் பள்ளிக்கூடம் | புகழஞ்சலி
எல்லை தாண்டிக் ‘கொள்ளை’யடிக்கலாம்! | சுட்ட கதை 33

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in