

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத் தில் ‘மிட்லேண்ட்ஸ் பேங்க்’ என்றொரு வங்கியிடம் தங்களுடைய அம்மாவின் பெயரில் உள்ள பண்ணை நிலத்தை அடமானமாக வைத்து, வட்டிக்கு விவசாயக் கடன் வாங்கியிருப்பார்கள் டோபியும் அவன் சகோதரன் டேன்னரும்.
அம்மா நோய்வாய்ப் பட்டு இறந்து போவார். அது அமெரிக்காவைப் புரட்டிப்போட்ட பொருளாதார மந்தநிலை தீவிரமடைந்த 2008 காலக்கட்டம். வறுமையில் தத்தளிக்கும் டோபி சகோதரர்களால் வங்கிக் கடனைக் கட்ட முடியாமல் போய்விடும். அவர்களின் நிலத்தை ஜப்தி செய்து தனதாக்கிக்கொள்ள நாள் குறிக்கிறது வங்கி.
உடனடியாக இரண்டு சகோதரர்களும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். தங்கள் குடும்பத்தின் பண்ணை நிலத்தை மீட்க, அவகாசம் கொடுக்காத, இரக்கமற்ற அதே வங்கியின் கிளைகளை அடுத்தடுத்து கொள்ளை யடிக்கிறார்கள். அந்தப் பணத்தை வெள்ளையாக்கி நிலத்தை மீட்கத் தயாராகிறார்கள்.