Thigi: ஆழ்மன ‘ரகசிய’ வலி, துணிவைப் பேசும் ஹேமாவும் மகள்களும் | திரை தேவதைகள் 20

Thigi: ஆழ்மன ‘ரகசிய’ வலி, துணிவைப் பேசும் ஹேமாவும் மகள்களும் | திரை தேவதைகள் 20
Updated on
6 min read

பெரும் மகிழ்ச்சி, கொடுந்துயரம், அபார வெற்றி, படுதோல்வி, சகிக்க முடியாத துரோகம், பேருதவி, உறைய வைக்கும் பீதி என எந்தவொரு உணர்வும் அதன் மிகையில் சம்பவிக்கும்போது அங்கு முதல் மொழி மவுனம் தான். ஓசையும் வடிவமும் இல்லாதது எப்படி மொழியாகும் என்றால்... ஆகும் என்பதன் அரூப சாட்சியே மவுனம்.

மவுனம் காதலில் குளிர் தென்றலாய் வீசும், காமத்தில் சுக நெருப்பாய் வருடும், கோப உச்சத்தில் எதிராளிக்கு வலியை தரும், துரோக உச்சத்தில் ஒருவர் தன்னை வலிமையானவர் என்பதை நிரூபிக்கவும் உதவும். உணர்வுகளுக்கு ஏற்ப அது தன்னை தகவமைக்கும். அது இறை போன்றது.

அப்படியாக, மரணப் படுக்கையில் இருக்கும் ஒரு தாயின் ஆழ்மனது மவுனமும், அவளது மூத்த மகள் தன் சுயமரியாதைக்கு சவாலாகும் சுரண்டலை சுமக்க முடியாமல் வெளிப்படுத்தும் மவுனப் பரிதவிப்பும், தாயின் ‘கேர் கிவ்வர்’ ஆக தனது லட்சியக் கனவுகள், தனிப்பட்ட வாழ்க்கை கரைந்துபோவதை சகித்துக் கொள்ளும் இளைய மகளின் மவுனமும், அவர்களின் மவுனம் பேசும் வலியும், வலிமையும் தான் ‘திகி’ (Thigi) மராத்தி படத்தின் ஒன்லைன். திகி என்றால் மராட்டிய மொழில் ‘நாம் மூவர்’ என்று அர்த்தமாம்!

மார்ச் 2026-ல் வெளியான இந்தப் படத்தை ஜீ 5 ஓடிடி தளத்தில் காணலாம். ஓர் இதமான மெலோ டிராமா ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும்போது முட்டையிலிருந்து லார்வா, பியூபா நிலைகளைக் கடந்து சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியை காண்பது போன்ற ஒரு ரம்மியமான உணர்வை எனக்குக் கடத்தியது.

தாய் ஹேமலதா ரானடே, மூத்த மகள் ஸ்வாதி கர்னிக், இளைய மகள் சாரிகா ரானடே என மூன்ற பெண்களைச் சுற்றியதுதான் இந்தக் கதை. ரோஜாவையும், அல்லியையும், இன்னும் விதவிதமான அலங்கார மலர்களையும் ஒரே கூடைக்குள் அடக்கும்போது பூங்கொத்து உருவாவதுபோல்தான் உறவுகளும்.

கருத்து வேறுபாடுகளும், உள, உடல், நிதிப் போராட்டங்களுக்கு மத்தியிலும் அன்பு ஒன்றிருந்தால் போதும்... அது பூங்கொத்தாய் மிளிர!

‘திகி’யிலும் தாயும், மகள்களும் பூங்கொத்தாக உருவாகி ஆச்சர்யப்படுத்துவார்கள்.

மூத்த மகள் ஸ்வாதி கர்னிக்கிடம் இருந்துதான் படம் தொடங்குகிறது. பெரிய பீடிகையெல்லாம் இல்லை. ரயிலில் ஏறி அவள் ஆஃபிஸ் வந்த அடுத்த விநாடியே அவளுடைய அலுவலக பாஸ் ஒரு செக்ஸுவல் பிரிடேட்டர் என்பது தெரிகிறது.

கல்வியும், வேலைவாய்ப்பும் மிடில் கிளாஸ் மக்களை அதே வர்க்கத்தில் பிழைத்திருக்கச் செய்கிறது. அதன் ஊடே அடுத்த நகர்வு என்று அவர்கள் யோசித்தாலே கடனில்தான் விழ நேரிடுகிறது.

கணவர் மல்ஹார் கர்னிக் தொழிலுக்காக தனது பாஸிடம் ரூ.25 லட்சம் கடன் வாங்கியிருக்கிறாள் ஸ்வாதி. ஏதோ திட்டமிட்டே அந்த உதவியைச் செய்திருந்த முதலாளி, அவளை பாலியல் ரீதியாக சீண்டிக் கொண்டே இருக்கிறான். அமெரிக்காவுக்கு பிசினஸ் மீட்-டுக்காக செல்வோம் பாஸ்போர்ட் கொடு என்று அவன் கேட்கும் போதுதான் அவளது தாயைப் பற்றிய செய்தி வருகிறது.

கதை அவளது பிறந்த வீட்டுக்கு நகர்கிறது. 4-வது ஸ்டேஜ் கருப்பை புற்றுநோயில் உடலளவில் துவண்டு கிடக்கிறாள் தாய். மருத்துவமனை முதல் காட்சியிலேயே சகோதரிகள் கீரியும் பாம்பும் போல சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

மிடில் கிளாஸ் குடும்பச் சண்டைகள் பல ஒருவர் மீதான இன்னொருவரின் காழ்ப்புணர்வு என்பதைத் தாண்டி, தனிப்பட்ட வாழ்வில் தத்தம் அழுத்தங்களை வெளிப்படுத்த வடிகால் இல்லாது தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மீது அள்ளித் தெளிக்கும் விரக்திகளாகவே இருக்கின்றன. அந்த நேரத்தில் அந்த விரக்தியைக் கையாளப் பழகிக் கொண்டாலே வாழ்தல் சுகமாகும்.

படத்தின் நங்கூரம் தாய் ஹேமலதா தான். தனது புற்றுநோயின் யதார்த்தத்தை அணுகுவதிலும்கூட அவர் காட்டும் ‘கர்வம்’ சிங்கிள் மதர்களுக்கே உரித்தானது. வாழ்க்கை காட்டிய கொடிய முகத்துக்கு புறமுதுக்கிட்டு ஓடாமல் அவர்கள் காட்டும் கெத்து முகம் உத்வேகத்தின் ஊற்று.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் காட்சி அதனை விளக்கும். “எனது சாவு எனது அறையில்தான் நிகழ வேண்டும் என்னை மாட்டிக்கு கூட்டிச் செல்லுங்கள்..” என்று வீல்-சேரில் பிடிவாதமாக அமர்ந்து கொண்டு வரும் மகள்களை ஏலேலோ - ஐலசா பாடவைத்து ஹேமலதா, அறை வாசலுக்கு வந்ததும் எழுந்து செல்லும் குறும்பு ரசிக்க வைக்கும்.

வயோதிகம் குழந்தையின் குறும்பை மீண்டும் செய்துபார்க்கத் தூண்டும்.

இந்தியச் சமூகத்தில் வயோதிகர்கள் எல்லாம் ‘பேபி சிட்டர்’களாக மாறிவருகின்றனர். அதற்கு லாயக்கில்லாவிட்டால் முதியோர் இல்ல உறுப்பினர்களாகிறார்கள். ஊதியமும், கவுரமும் இல்லாத உரிமைக் குரலும் இல்லாத வர்க்கம் அது!

ஆனால், பொருளாதார சுதந்திரத்தைப் பெற்ற நம் ஹேமலதாவுக்கு, நானும் நீங்களும் தனித்தனி அடல்ட்கள். உங்களது வாழ்வில், முடிவுகளில் நானும், என் வாழ்வில், முடிவுகளில் நீங்களும் தலையிடக் கூடாது என்ற வரையறையை வகுத்தவர். அதனால், தன் வாழ்வை வயோதிகக் குறும்புகளுக்கு தகுதியானதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

பராமரிப்புகள், சண்டைகள் என நகரும் நாட்களில், புதுவரவாக ஒரு கருப்பு நாய்க்குட்டி வருகிறது. மத்தியப் பிரதேசத்தின் கருப்பு கோழி இனத்தின் பெயரான கடக்நாத் என்பதை அதற்கு சூட்டுகிறார் ஹேமா. பிராணிகள் மீது நாட்டமில்லாதவர் தன் படுக்கையில் அதற்கு தூங்க இடம் கொடுக்கிறார். அவர் மனதின் ஒரே சஞ்சலம், அவர் காக்கும் ரகசிய மவுனம்.

இது ஒருபுறமிருக்க, ஸ்வாதியை தேடி அந்த முதலாளி புனேவுக்கும் வருகிறான். ‘உணவகத்துக்கு வா, ஒயின் அருந்து’ என்று நிர்பந்திக்கிறான். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் தேதியாவது அவனிடம் சொல்வோம். அது அவனுக்கு நான் உன் விருப்பத்துக்கு தயாராக இல்லை. கடனை திருப்பிச் செலுத்தவே தயாராக இருக்கிறேன் என்ற செய்தியைக் கடத்துமே என்று கணவரிடம் தேதி சொல் என்று கதறுகிறாள்.

மறுபுறம், எப்போதோ கைவிட்டுப் போன யுஎஸ் வேலை கைகூடி வருகிறது. என்றாலும், அம்மாவை விட்டு எப்படிப் போவது. நண்பரோடு சேர்ந்து உருவாக்கிவரும் ஸ்டார்ட் அப்பை விட்டு கைவிடுவது என்று தவிக்கிறாள் சாரிகா.

இதற்கிடையில் தான், தங்கள் தந்தை பற்றிய தாய் இதுநாள் கூறியதில் இருக்கும் பொய்யை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவதா அல்லது கடந்து போவதா என்று காரசார விவாதமும் செய்வார்கள் ஸ்வாதியும் சாரிகாவும்.

“நான் பள்ளிக்கூட ஓவியப் போட்டியில் என் இரு பக்கமும் அம்மா நிற்பதுபோலவும் நடுவில் நாம் நிற்பது போலவும் ஓவியம் வரைந்தேன். எல்லோரும் என்னை கேலி செய்தார்கள். அம்மா மட்டுமே என்னைப் பாராட்டினார்” என்று சாரிகா கண்ணீர் மல்கச் சொல்வாள்.

தந்தை விட்டுச் சென்ற வெற்றிடத்தை தாயைக் கொண்டு பல குழந்தைகள் நிரப்பி சுயமாகத் தேறுகிறார்கள். அவர்களையும், தாயுமானவர்களைக் கொண்டாடுவதுபோல் தந்தையும் ஆன பெண்களையும் இந்தச் சமூகம் கொண்டாடுவதில்லை. மாறாக, எந்தச் சாக்கில் எப்படி விமர்சிக்கலாம் என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறது.

மூவரும் மூன்றுவிதமாக தவிக்க, அந்த வீட்டுக்குள் தென்றல் போல வீசிச் செல்வபராக இருக்கிறார் சாரிகாவின் நண்பரும், ஸ்டார்ட் அப் பார்ட்னருமான கந்தர்வா.

ஒரு பொறுப்பான தந்தை. அவர் மகளுக்கு பிறந்தநாள் பரிசாகத்தான் கடக்நாத் கைமாறவிருக்கிறது. ஹேமாவுக்கு கந்தர்வா மீது மிகுந்த மரியாதை. கடக்நாத்தை கொடுப்பதற்கு முன்னால், “எப்பவும் ஒரு பொறுப்பான தந்தையாக இரு. உன் மகளை என்றைக்கும் கண்ணீர்சிந்த வைத்து விடாதே” என்பார்.

உங்கள் தந்தை மரணித்துவிட்டார் என்பதைத் தவிர வேறு எந்தத் தகவலும் அதுவரை மகள்களுக்குச் சொல்லிராத ஹேமா, முதன்முறையாக தந்தையின் பொறுப்பு பற்றிப் பேசுவாள்.

அதுநாள் வரை தந்தையை பற்றிய தாயின் மவுனத்தை மட்டுமே கேட்டுப் பழகிய மகள்களும் அந்த ஓசை ஆச்சரியத்தைத் தரும்.

அதுபோல், ”இனிமேல் எனக்கு சிகிச்சை வேண்டாம். நான் ஹாஸ்பைஸ் மையம் செல்கிறேன். எனது இறுதி நாட்கள் வேதனையை நீங்கள் பார்க்கக் கூடாது. நான் ஒரு சுதந்திரமான பெண்ணாக, பலமானவளாகவே இருந்திருக்கிறேன். எனது அந்த முகத்தை மட்டுமே நீங்கள் நினைவில் வைத்திருந்தால் போதும். என்னை சுமப்பது உங்கள் வாழ்க்கை அல்ல” என்று யதார்த்தங்களைப் பேசுவது ஒரு சிங்கிள் மதரின் உச்சபட்ச அன்பு.

மகள்களும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. ஒரு உறுதியான பெண் அவளை நகலெடுத்ததுபோல் உறுதியான வாரிசுகளைத் தான் உருவாக்குவாள் என்பதற்குச் சான்று. பரஸ்பரம் இருவரும் சிக்கலில் இருப்பதை வெளிப்படையாகப் பேசிக் கொள்வார்கள். நாம் சேர்ந்து சமாளிக்கலாம் என்று பரஸ்பரம் ஆறுதல் மொழி பேசுவார்கள்.

இதற்கிடையில், சாரிகாவின் கணவனின் வருகை அன்பின் இன்னொரு பரிமானம். மனைவியைப் பார்க்க வந்துவிட்டு அவளிடம் பணமும் கேட்டுப் பெறுவான். அப்போது, “இந்தப் பணத்துக்காக நான் வரவில்லை. உனக்காக வந்தேன். உன்னை சர்ப்ரைஸ் செய்ய வந்தேன். உன்னுடன் ஒரு காபி குடிக்க, உன்னை ஆரத்தழுவிக் கொள்ள வந்தேன். நாம் இந்த நிலையை நிச்சயம் கடந்து செல்வோம்” என்பான்.

பணம் இல்லாதவர்களின் அன்புக்கும், வாக்குறுதிக்கும் மதிப்பு கொடுக்காத இந்த உலகத்தில், “நாம் சரியாகிவிடுவோம்” என்று கணவனுக்கு அடிக்கடி உத்வேக உரைகள் நிகழ்த்திய ஸ்வாதிக்கு சரியான நேரத்தில் அதைத் திருப்பிச் சொல்லி, ஆரத் தழுவிக் கொள்ளும் காட்சி சொல்லும் பாடம் இதுதான்...

மனிதனை பணத்தால் மதிப்பிடாதீர்கள்!

மரணத்துக்கு முன்னால் கடக்நாத்தை ஏந்திக் கொண்டு ஹேமா பேசும் காட்சி வாழ்க்கைத் தத்துவம்.

“இங்கே நம்மைத் தவிர எல்லோரும் அவசரமாக எதை நோக்கியோ ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன். ஆனால் நமக்காக எது தீர்மானிக்கப்பட்டதோ அதைத்தான் நாம் அடைகிறோம்.

எனக்கு பிராணிகள் மீது பெரிதாக விருப்பமில்லை. நீ வரும் வரை. ஏனெனில் அவை பேசுவதில்லை. ஆனால், உன்னுடைய மவுனம் எனக்கு ஒன்றை புரிய வைத்தது. நீ எதையும் யாரையும் எடைபோடுவதில்லை. நீ இன்று என் வீட்டு பால்கனியில் என் கைகளில் தவழ்கிறாய். நாளை கந்தர்வா வீட்டில் இன்னொருவர் கையில் இருப்பாய். அது தவறில்லை. மரங்களை விட்டு உதிரும்போது இலைகள் என்ன சொல்லிவிட்டாச் செல்கின்றன” என்று பேசும் காட்சி வாழ்க்கைத் தத்துவம்.

மகள்கள் மனப் போராட்டத்தில் இருப்பதை உணர்ந்த தாய், ஸ்வாதியின் முதலாளி வீடுவரைக்கும் வந்து சென்ற பின்னர், அவர்களை அழைத்து சில உண்மைகளை உடைத்துப் பேசுவாள்.

அது அவளின் ‘ரகசிய’ வலி பற்றியது. அந்த வலியை அவள் விவரிப்பதும். கணவர் மஞ்சுநாத்தை ஏன் பிரிந்தேன் என்று சொல்வதும் பேரதிர்ச்சியைத் தாண்டி, கண்களின் கண்ணீரை கொண்டுவராமல் இருக்காது.

ஸ்வாதியிடம் ‘உன் வேலையைவிடு’ என்பாள். சாரிகாவிடம் ‘உனக்கான முடிவை எடு’ என்பாள். “நீங்கள் சாய்ந்து கொண்டிருக்கும் இந்தச் சுவர் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இனி உங்கள் முதுகெலும்பை வலுப்படுத்துங்கள்” என்பாள். மூவரும் ஒரு பூங்கொத்து பொட்டலமாக கட்டியணைத்து அன்பைப் பரிமாறுவார்கள்.

மரணத்தை எதிர்கொள்ள நாம் தயாராகலாம். ஆனால் மரணம் நம்மை எப்பொது தழுவும் என்பதை அதுவே தீர்மானிக்கும்.

நீ பட்ட வேதனைகள் போதும் என்று அவளை மரணம் ஸ்வீகரிக்கும். மகள்களும் பாதைகளை கிட்டத்தட்ட தீர்மானித்திருப்பார்கள்.

ஸ்வாதிக்கு ‘உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் கிரெடிட்’ என மெசேஜ் வரும்; சாரிகா யுஎஸ் நிறுவனத்துக்கு ‘என் முடிவை மாற்றிவிட்டேன். மன்னிக்கவும்’ என்று மெசேஜ் அனுப்புவாள்.

வாழ்க்கை இப்படித்தான் நம் செல்பேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்து சேரும் கால அளவில் மாறிவிடும். அதற்கான முடிவை நாம் எடுக்கும் துணிச்சலும், அதை செயல்படுத்த வெளியில் இருந்து சிறிய துடுப்பும் கிடைக்கும்போது நீந்திவிடலாம். நம்புங்கள்.

ஸ்வாதி, சாரிகா எதிர்கொண்ட மவுனம் தந்த வலியை தாய் ஹேமாவின் மவுனத்தின் பின்னால் இருந்த ஆழ்மன ரகசிய வலியும், அதிலிருந்து அவள் வீறுகொண்டு எழுந்த வலிமையும் துடைத்தெறியும்.

ஒரு வகை பாலியல் குற்றத்தின் வேரையும், அதன் மீதான உளவியல் அணுகுமுறையையும் பெரும் தாக்கம் தரும் திரைமொழியில் இந்தப் படத்தை இயக்குநர் ஜீஜிவிஷா, ஒரு கவிதையைப் போல்தான் படைத்திருப்பார்.

படத்தின் ஆரம்பக் காட்சி ஃப்ரேம்தான் இறுதிக் காட்சி ஃப்ரேமும். அந்தக் காட்சியில் கடற்கரையில் கையில் தாயின் அஸ்தியை ஏந்தியவாறு ஸ்வாதியும், அருகே சாரிகாவும் நிற்க தூரத்தில் ஒரு முதியவர் நிற்பார். அவர் ரோஜா, அல்லியோடு இன்னொரு கொய்மலராக சேர்ந்து பூங்கொத்து ஆவாரா? இன்னும் சில மவுனங்கள் கலையுமா என்பதெல்லாம் நமது கற்பனைக்கானது.

அந்தக் காட்சி லாங் ஷாட்டில் விரிந்தபோது. முட்டையிலிருந்து லார்வா, பியூபா நிலைகளைக் கடந்து சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியை காண்பது போன்ற ஒரு ரம்மியமான உணர்வு எனக்குக் கிட்டியது. அதுவும் ஜீஜிவிஷாவின் முதல் படம் இதுவென்றறிந்தபோது அந்த வண்ணத்துப்பூச்சி இன்னும் அழகாகத் தெரிகிறது.

| தேவதைகள் வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

Thigi: ஆழ்மன ‘ரகசிய’ வலி, துணிவைப் பேசும் ஹேமாவும் மகள்களும் | திரை தேவதைகள் 20
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in