

தென்கொரியா, தாய்லாந்து ‘டார்க் காமெடி க்ரைம் த்ரில்லர்’ படங்களின் தாக்கத்தில், அவற்றைப் புத்திசாலித்தனமாகத் தழுவிப் படமெடுப்பதில் மலையாள சினிமாவில் ஜித்துகள் அதிகம். அதிலும் ‘த்ரிஷ்யம்’ படத்துக்குப் பிறகு ‘ஜித்து ஜோசப் விளைவு’ இந்தியாவின் எல்லாப் பிராந்திய சினிமாக்களுக்கும் ஏற்றுமதியானது. அந்த வகையில், குடும்பம், சென்டிமென்ட், காதல் என தமிழ் சினிமாவில் கலவை சோறு பொங்குவதில் சிறந்து விளங்கி வரும் பாண்டிராஜும் இந்த விளைவால் பாதிக்கப்பட்டு இப்படத்தை எடுத்திருக்கிறார். ‘டார்க் காமெடி க்ரைம் த்ரில்லர்’ முயற்சியில் அவரால் முழுக் கிணறு தாண்ட முடிந்ததா என்று பார்க்கலாம்.
ஐ.பி.எஸ். பயிற்சி வகுப்பு நடத்துகிறார் டியூஷன் ஆசிரியர் பரிமாளா (ஜெயராம்). இவருக்கு பராசக்தி (சஞ்சனா) மதுமிதா (அனந்திகா) என கல்லூரியில் படிக்கும் இரண்டு மகள்கள். பரிமளாவின் மனைவி சுதந்திரம் (ஊர்வசி) இந்த மூவரையும் கவனித்துக்கொள்ளும் குடும்பத் தலைவி. சென்னையில் கடற்கரையை ஒட்டிய பகுதியில் வசிக்கிறது இந்த நடுத்தர வர்க்க குடும்பம். அப்பகுதியில் பிரபலமான சில்லறை ரவுடியாக வலம் வரும் வர்கீஸ் (சாண்டி) வடிவில் இந்தக் குடும்பத்துக்குச் சிக்கல் வருகிறது.
வர்கீஸை கொலை செய்தால் மட்டும்தான் தன் குடும்பம் நிம்மதியாக இருக்க முடியும் என்று பரிமளா தனது மனைவி, மகள்கள் சகிதம் முடிவெடுக்கிறார். ஆனால், அவர்கள் முடிவெடுத்து, கொலைச் சதிக்கு திட்டமிடும் முன்னரே வர்கீஸ் கடற்கரையில் கொலையாகிக் கிடக்கிறார். அந்தக் கொலையை யார் செய்தார்கள்? எதற்காகச் செய்தார்கள் என்பதை இரண்டு மணிநேரம் இழு இழு என்று ஜவ்வு மாதிரி இழுத்துச் சொல்வது மீதிக்கதை. இல்லை இல்லை மீதி வதை.
வர்கீஸ் யாரால் கொலை செய்யப்பட்டான் என்பது பரிமளம் குடும்பத்தினருக்குத் தெரியாதபோது, மனைவி, மகள்களைப் பார்த்து ‘நம்மல்ல யாரோ ஒருத்தார்தான் கொலை செய்திருக்கோம். போலீஸ்கிட்டேயிருந்து தம்பிக்க, பாபநாசம் படத்தில் வர்ற மாதிரி எல்லாரும் ஒரே மாதிரி தான் பொய் சொல்லணும்’ என்கிறார் பரிமளம்.
குடும்ப நலனுக்காகக் கொலை செய்வது என்று முடிவெடுத்தவர்கள், பின் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்வதும் மறுப்பதும் ‘டார்க் காமெடி’ என்று நினைத்திருக்கிறார் இயக்குநர். நால்வரில் இன்னார்தான் கொலை செய்தோம் என்று குடும்பத்தினரிடம் ஒத்துக்கொண்டால், அவரைக் காப்பாற்ற மற்ற குடும்ப உறுப்பினர்கள் முயற்சி செய்வார்களே அன்றி, ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டு, பொறுப்பில்லாமல் இருக்க மாட்டார்கள்.
அதுவும் மனைவி, மகள்கள் கொலை செய்துவிட்டார்கள் என்று தெரிந்தால் சட்டப்படி அவர்களைக் காப்பாற்றுவதற்கு ஒரு அப்பாவோ, அம்மாவோ தலைகீழாக நிற்பார்கள். இங்கே அந்த ‘ஃபீல்’ யாருக்கும் இல்லாமல் ‘டிரை காமெடி’ செய்வதில் ஆர்வம் காட்டுவதால் பரிமளம் குடும்பத்துடன் ஒட்ட முடியவில்லை.
கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்க காவல் ஆய்வாளர் மிஷ்கின் உள்ளே நுழையும்போது சில தொடக்கக் காட்சிகள் சூடுபிடிக்கின்றன. ஆனால் அவர் புலன் விசாரணையை இப்படித்தான் எடுத்துக்கொண்டுபோவார் என்பது அதன்பிறகு கடைசி திருப்பம் வரையிலும் யூகிக்கும் விதமாகவே காட்சிகள் ஓல்டு பிராண்டாகவே இருப்பதால் அதிலும் சுவாரசியமில்லாமல் போய்விடுகிறது.
ஆனால், திருப்பங்களில் இல்லாத திரைக்கதையின் சிறப்பு, எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பாண்டிராஜ் தனது குடும்ப முத்திரையுடன் எழுதியிருப்பதால் படம் செத்துச் செத்துப் பிழைக்கிறது. பெரும்பாலான காட்சிகள் தனித்தனியாக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன.
ஆனால், முடிவை நோக்கி முன்னேறும் திரைக்கதையில் வரும் திருப்பங்களில் எதிலும் புதுமையோ (பல படங்களில் பேசப்பட்ட பிரச்சினை) எதிர்பாராத தன்மையோ இல்லாததால் சலிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம், காஸ்டிங் என எல்லாம் அட்டகாசமாக அமைந்துவிட்ட இப்படத்தில், படத்தின் மைய ஐடியாவும் அதை ஒரு ‘கிரிப்’பான படமாக உருப்பெறச் செய்வதில் நடந்திருக்க வேண்டிய ‘மேஜிக்’கும் நிகழாமல் போய்விட்டன. அதிலும் இரண்டாம் பாதிப் படத்தின் இழுவையும் நீட்டலும் மண்டைக் காய்ச்சல்.
படத்தின் சிறந்த பலம் அதன் காஸ்டிங் தான். பாட்டியின் நினைவாகத் தனக்கு பரிமளா என்று பெயர் வைத்துவிட்டதைச் சொல்லிக்கொள்ளும் சிக்கனக் குடும்பத் தலைவராக ஜெயராமும், 1947-இல் பிறந்ததால் சுதந்திரம் என்று பெயர் வைத்துவிட்டு, சுதந்திரமே இல்லாமல் வீட்டின் சமையலறையில் அடைபட்டுவிட்டதாகவும் கருதி வாழும் ஊர்வசியும் போட்டி போட்டுக்கொண்டு அட்டகாசமாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
ஊரே தீபாவளிக்குப் பட்டாஸில் காசை கரியாக்கிக் கொண்டிருக்க, மகள்களையும் மனைவியையும் மொட்டை மாடிக்கு அழைத்துப் போய், ஊர் வெடிக்கும் பட்டாசு மழையைப் பார்த்து பரிமளம் சந்தோஷப்படச் சொல்லும் காட்சி என்றாலும், தன்னுடைய அக்காவின் சடலத்தை ‘பாடி’ என்று சொல்லும் மனைவியோடு மல்லுக்கட்டும் போதாகட்டும், மிஷ்கினையும் யோகிபாபுவையும் எதிர்கொள்ளும்போதாகட்டும் ஜெயராம் தன்னுடைய முத்திரையைப் பதிப்பதில் எந்தக் காட்சியிலும் தவறவில்லை.
ஊர்வசி வரும் காட்சிகளில் அவர் மிகவும் சோர்ந்து காணப்பட்டாலும் அதுவே அவர் ஏற்ற கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்திவிடுகிறது. பரிமளம் - சுதந்திரம் தம்பதியின் மகள்களாக வரும் இரண்டு பெண்களுமே அக்காள் - தங்கையாகத் தங்கள் கதாபாத்திரங்களை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள்.
அதிலும் மதுமிதாவாக வந்து ‘ஒய்ன்’ சாப்பிடும் அனந்திகா, ஒரு கட்டத்தில் வர்கீஸ் மீது இரக்கம் கொள்வது ‘டார்க் ஹ்யூமர்’ என்று கரிபூசிக்கொண்ட படத்தில் அசலான ‘டார்க் ஹ்யூமர்’ அணுகுமுறை. படத்தின் பலவீனங்களை மறக்கடிப்பதில் நம்ம வீட்டுப் பெண்களைப் போல் உணர வைக்கும் இந்த இரண்டு இளம் பெண்களின் பங்களிப்புதான் படத்துக்கு பெரும் பலம்.
வர்கீஸாக சில காட்சிகளே வந்தாலும் சாண்டி மாஸ்டர் செய்யும் ‘ஸ்டாக்கிங்’ அட்டகாசங்கள் கோபத்தை வரவழைக்கும் விதமாக செய்திருப்பது அவரது திறமை. ஆனால், ஹாரர் ஒப்பனையில் வரும் சில காட்சிகளில் அவர் ‘லோகா’வை நினைவூட்டுகிறார்.
காவல் ஆய்வாளராக வரும் மிஷ்கின் இயக்குவதை விட்டுவிட்டு நடிக்கப் போய்விடலாம் என்கிற அளவில் மனிதர் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார். பரிமளாவின் மச்சானும் தம்பியுமாக வரும் பகவதி பெருமாள் - சிங்கம்புலி சில காட்சிகளே வந்தாலும் நச்சென்று பொருந்திக்கொள்கிறார்கள்.
‘ஜோமி ஜார்ஜ் நிக்கோலஸ் கேஸ் என்கிறது ஒரு பிராண்டு டா... அந்த பிராண்டையே அழிக்கப் பார்க்கிறீங்களா?’ என்று முறுக்கிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரம் வருகிறது. அதனால் திரைக்கதைக்கு என்ன பயன் என்று தெரியவில்லை.
ஆனால், வீட்டு உரிமையாளர் ‘உயிர் உலக்’ ஆக வரும் யோகிபாவுவின் டம்மி கதாபாத்திரம் இந்தப் படத்தில் எடுபட்டிருக்கிறது. அவர் பரிமாளா குடும்பத்திடமும் மிஷ்கின் & கோவிடமும் மகள் வயதே கொண்ட மனைவியிடமும் அவர் படும் பாடுகள் ரசிக்கும்படி இருக்கின்றன.
திரிஷ்யம் படத்தில் லால் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் எதிர்பாராமையும் அந்தப் படத்தின் திரைக்கதை கொண்டிருந்த திருப்பங்களில் நிறைந்திருந்த டார்க் தன்மையும் இந்தக் களத்துக்குப் பொருந்தாது என்றாலும், நடுத்தர வர்க்க குடும்பங்களில் இளம் பெண்கள் எதிர்கொள்ளும் ‘ஸ்டாக்கிங்’ பிரச்சினையாகத் தொடங்கி, அதை இன்னொரு சமூகச் சிக்கலாக நகர்த்திகொண்டு போனது திரைக்கதையின் காலை பின்னால் பிடித்து இழுத்துவிட்டது. என்றாலும் நடிகர்கள் தேர்வு மற்றும் நடிகர்களின் பங்களிப்புக்காக ஒருமுறை உறுதியாகப் பார்க்கலாம்.
தனித் தனி காட்சிகளாக படத்தின் பெரும் பகுதி எடுபட்டாலும் ஒரு படமாகத் திரண்டு வராத காரணத்தால் திரை அனுபவம் கிடைக்காது என்பதையும் மனதில் கொண்டு நகைச்சுவை தோரணங்களை மட்டும் மனம் விட்டு ரசித்துவிட்டு வரலாம்.