

நம்பவே முடியாத அதிசயங்களால் நிறைந்தது ஹாலிவுட் திரையுலகம். அதிகம் பரிச்சயமில்லாத 26 வயது காணொளிப் பதிவர், எழுத்தாளர், படத்தொகுப்பாளர், இயக்குநர் கர்ரி பார்க்கரின் இரண்டாவது படம் அது. வெறும் முக்கால் மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், வெளியான 15 தினங்களில் மட்டுமே 167 மில்லியன் டாலர் வசூலை வாரிக் குவித்திருக்கிறது. அத்துடன், இன்னும் வசூலைக் குவிக்கும் என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். அத்தகைய நவீன வகை ‘திகில்’ திரைப்படம் தான் ‘அப்செஷன்’ (Obsession- மிகைவிருப்பு)
தனித்து வாழும் கூச்ச சுபாவியான பியர் ஓர் இசை விற்பனையகத்தில் வேலை பார்க்கும் இளைஞன். தன்னுடைய இளவயது தோழியும், சக பணியாளருமான நிக்கியின் மீது ஒரு தலைக் காதல் வேறு. கூடுதலாக இயன் மற்றும் சாரா எனும் நண்பர்கள். விருப்பத்தை நேரடியாக வெளிப்படுத்தத் தயங்கும்போது, அவனுக்கு ஒரே ஒரு முறை மட்டும் கேட்கும் வரம் நிறைவேற்றும் ஒரு மர்மப் பொருள் கிடைக்கிறது. அதனிடம் அவள் உலகத்திலேயே யாரை விடவும் தன்னை அதிகம் நேசிக்குமாறு கேட்கிறான். விருப்பம் என்னவோ நிறைவேறி விடுகிறது... ஆனால், வெகு விபரீதமான பின்விளைவுகளுடன்!
அழுத்தம் திருத்தமாக எழுதப்பட்ட நல்ல திரைக்கதை மட்டுமே ஒரு நல்ல திரையனுபவத்தை தருமென்பதை இத்திரைப்படம் செயற்கை நுண்ணறிவு காலத்திலும் நிரூபித்திருக்கிறது. குறைந்த பட்ஜெட் என்பதும் ஒரு பெரிய தடையல்ல என்பது கூடுதல் நிரூபணம். ஓர் அடுக்கில் காதல் மற்றும் நட்பின் அகச்சிக்கல்களை அகழ்ந்து ஆராய்ந்தாலும் இன்னோர் அடுக்கில், அதை திகில் வடிவத்தில் பயணிக்க வைக்கும் ரசவாதத்தில் தேர்ந்திருக்கிறார் இயக்குநர் கர்ரி .
‘ஒரு தலை ராகம்’ காலத்தில் இருந்து நிறைவேறாத கனவுக் காதலை அடித்து துவைத்த படங்கள் உலகெங்கிலும் வெளிவந்தபடி இருக்க, அதன் எதிர்த்திசையில் அக்கனவு நிறைவேறினால் என்கிற புள்ளியில் கதையை அணுகியிருப்பது நல்ல மாற்றுத் தொடக்கம். எத்தனை நெருக்கமான காதலானாலும் தனி நபர் இடைவெளி என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பேசுபொருள் என்பதை இக்கதை பெரும் அச்சமூட்டி அலற அலற புரிய வைக்கிறது.
குறிப்பாக, நமக்கு நன்கு தெரிந்த வழமையான காதல் தருணங்களைக் கூட இத்திரைப்படம் திகில் தருணங்களாக மாற்றி நம்மை திகைக்க வைக்கிறது. உறங்கும் காதலனை இருளில் நின்று வேடிக்கை பார்ப்பது, வெறும் பசை நாடாவை வைத்து வாசற்கதவை அடைத்து வைப்பது, எந்த நொடியில் யாராக இருப்பாள் எனத் தெரியாமல் இருப்பது என குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தருணங்கள் பல.
வெறும் இருளையும் ஒளியையும் சரியான விகிதத்தில் வைத்தே பயச் சூழலை உருவாக்கலாம் என்பதை வெகு அழகாக நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் டீலர் க்ளெமன்ஸ். படத்தின் ஒலிக்கலவையும் பயத்தின் அளவை சரியான விகிதத்தில் நம்மை ஆட்டுவிக்கிறது.
பயம், விருப்பம், கையறு நிலைகளை வெளிப்படுத்தும் பியராக நடித்திருக்கும் மைக்கேல் ஜான்ஸ்டன் நல்ல தேர்வு. ஆனால் எல்லோரையும் விட அதகளப்படுத்திருப்பவர் கதையின் இரு வேறு நிக்கியாக வரும் இன்டி நவரெட். நொடிக்கு நொடி மாறிடும் பிறழ் கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை மிகச் சரியான துல்லியத்தில் வெளிப்படுத்தி இருக்கும் இன்டிக்கு விருது நிச்சயம். நண்பர்களோடு இரவில் நிகழும் ஒரு சிறு விளையாட்டுக் காட்சியில் அவரின் நடிப்பு திகிலில் உச்சம்.
குறைகளை குறைவே. ஆனால், எச்சரிக்கைகள் அதிகம். இது எல்லோருக்குமான திரைப்படமல்ல. ‘இந்தியன்’ சேனாபதி சொல்வது போல குழந்தைகள், பலகீனமானவர்கள், மெல்லுணர்வு கொண்டவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நலம். அதீத வன்முறை, சிதைத்துக் கொல்லுதல், பாலியல் காட்சிகள், மிருக வதை என சில அதீத ஒவ்வாமைக் காட்சிகளை சகித்துக் கொண்டால் மட்டுமே திரையரங்குகளில் பார்க்கக் கூடிய படைப்பு இது.
அன்பென்பது அடைக்கும் தாழற்றது என்றாலும் கூட ஒவ்வொரு உறவிலும், மரியாதை, தனி நபர் இடைவெளி மற்றும் எல்லைகளும் வேண்டும் என்பதை ரத்தம் தெறிக்க, பயத்தில் உறைய ஒரு திகில் படம் சொல்லியிருப்பது இதுவே முதல் முறை. முதல் வரியை மீண்டும் படிக்கவும்.