

'உப்பென்னா' படத்துக்குப் பிறகு இயக்குநர் புச்சி பாபு சானாவின் இரண்டாவது படமாக வெளியாகியுள்ளது 'பெத்தி'. ‘ஆர்ஆர்ஆர்’ படத்த்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடித்தால் பான் இந்தியா படம் தான் என்று ஒற்றைக் காலில் நிற்கும் ராம் சரணின் இரண்டு ஆண்டுகால கடும் உழைப்புக்கு இந்த படம் பலன் கொடுத்ததா என்று பார்க்கலாம்.
ஆண்டு 2016... நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு கொல்கத்தாவில் ஓர் உயர்மட்ட விளையாட்டு ஆய்வுக் கூட்டம் கூடுகிறது. நாட்டின் மோசமான ஆட்டத்தால் கோபமடைந்த விளையாட்டுத் துறை அமைச்சர், அதிகாரிகளை வறுத்தெடுக்கிறார். நாட்டின் கடைக்கோடி கிராமங்களில் இருக்கும் திறமைசாலிகளை கண்டறியும் பொறுப்பு ஒரு மத்திய அரசு அதிகாரியிடம் (போமன் இரானி) ஒப்படைக்கப்படுகிறது.
விஜயநகரம் என்ற குக்கிராமத்துக்கு செல்லும் அந்த அதிகாரி அங்கே, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கிரிக்கெட் மட்டைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் தேர்வுகளுக்காக வரிசையில் நிற்பதை காண்கிறார். இந்த விளையாட்டு புரட்சிக்குக் காரணம் 'பெத்தி' என்ற மனிதன் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு பெத்தியின் கதை நமக்கு ப்ளாஷ்பேக் வழியாக சொல்லப்படுகிறது.
‘கே.ஜி.எஃப்’ என்ற படம் வந்தாலும் வந்தது. அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான படங்கள் வெறும் பில்டப்பை நம்பியே எடுக்கப்படுகின்றன. அதே பாணியில் கதையின் நாயகனை நாம் சந்திப்பதற்கு முன்பாகவே, சுற்றியிருப்பவர்கள் அவனைப் பற்றி கொடுக்கும் பில்டப் மூலம் அவனது பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படாத ஒரு குக்கிராமத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதனின் கதையை இப்படம் பேசுகிறது. அங்குள்ள மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லை, எந்த அரசு ஆவணங்களும் இல்லை, ஏன்... தங்களின் இருப்புக்கான அங்கீகாரம் கூட இல்லை.
சாதிய அடுக்குமுறைகளிலிருந்தும், அலட்சியமான அரசு எந்திரத்திலிருந்தும் பெத்தி கடுமையான பாகுபாட்டை எதிர்கொள்கிறான். அவர்களின் கிராமத்தில் ஒரு ரயில் நிலையம் உட்பட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லை, அவர்கள் ஒட்டுமொத்த அமைப்புக்கும் கண்ணுக்கு தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
மேலோட்டமாக பார்க்கும்போது இது ஒரு சக்திவாய்ந்த சமூக நீதி பேசும் கதைக்கான களம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், திரையில் அது சொல்லவந்த நோக்கம் நிறைவேறியதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டி இருக்கிறது. பல படங்களிலிருந்து துண்டு துண்டாக வெட்டி தைக்கப்பட்ட, ஒரு கம்பளி போன்றே காட்சியளிக்கிறது ‘பெத்தி’.
மாரி செல்வராஜின் 'கர்ணன்', ’பைசன்’, பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை' ஆகிய படங்களை இப்படத்தின் சில காட்சிகள் நினைவூட்டுகின்றன. ஆனால் அப்படங்களில் இருந்த உயிரோட்டமும், எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்கான நேர்மையும் இதில் இல்லை. இப்படத்துக்கென ஒரு தனித்துவமான அடையாளம் எந்த காட்சியிலும் வெளிப்படவே இல்லை.
திரைக்கதை முழுவதும் லாஜிக் முரண்பாடுகளும், செயற்கையான திருப்பங்களும் நிறைந்துள்ளதால், பல பகுதிகள் கதையை எழுதி முடித்த பிறகு வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டது போலத் தோன்றுகின்றன. நாயகன் முதன்முதலில் அறிமுகம் ஆகும்போது, அவர் ஒரு ‘ஆட்ட கூலி’ ஆக அறிமுகப்படுத்தப்படுகிறார். உயர்சாதி கிராம மக்களுடனான அவரது மோதல்கள், அவமானத்தில் முடிகின்றன.
உள்ளூர் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக மட்டுமின்றி, தன் சமூகத்தின் இருப்பை அங்கீகரிக்க மறுக்கும் அரசுக்கு எதிராகவும் ஒரு பெரிய போரை நடத்த வேண்டும் என்பதை அவர் உணர்கிறார். இதுபோன்ற காட்சிகள் எல்லாம் இப்படம் ஏதோ மிகச் சிறந்த சமூகநீதிக் கருத்துகளை பேசுவது போலத்தான் தோன்றுகிறது. ஆனால் படம் முழுக்க இருக்கும் அபத்தங்கள் இத்தகைய கருத்துகளை மழுங்கடித்து விடுகின்றன.
பெத்தி ஓர் அசாத்திய கிரிக்கெட் வீரன் என்று நிறுவப்பட்ட போதிலும், கவுரிநாயுடு (சிவராஜ்குமார்) அவரது பேட்டிங் திறமையைப் பார்த்துவிட்டு, அவரை ஒரு மல்யுத்த வீரராக மாறச் சொல்வது ஏன்? கிரிக்கெட்டுக்கும், மல்யுத்தத்துக்கும் என்ன சம்பந்தம்? பெத்தியின் தைரியம் கவுரிநாயுடுவுக்கு பிடித்திருந்தால், அவர் மாநில அளவிலான கிரிக்கெட் சாம்பியன் ஆவதற்கு அல்லவா உதவியிருக்க வேண்டும்?
சிவராஜ்குமாரின் அறிமுகத்துக்குப் பிறகு, பெத்தி ஒரு கிரிக்கெட் டிராமா என்பதிலிருந்து 'சார்பட்டா பரம்பரை' படத்தின் படுசுமாரான வெர்சனாக மாறுகிறது. மல்யுத்த காட்சிகள், 'கராத்தே கிட்' பாணி குரு-சீடன் உறவு எதுவுமே இயல்பாக இல்லை. பார்வையாளர்கள் இந்த திடீர் மாற்றத்தை கவனிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், கதை ஒரு விளையாட்டிலிருந்து மற்றொரு விளையாட்டுக்கு, அதாவது ஒரு ஜானரிலிருந்து இன்னொரு ஜானருக்கு சடாரென தாவுகிறது.
படம் எங்கும் நுணுக்கமான காட்சிகளையோ அல்லது மறக்க முடியாத சினிமா தருணங்களையோ கொண்டிருக்கவில்லை. மாறாக, பான் இந்தியா படங்களுக்கே உரிய மிகைப்படுத்தப்பட்ட வசனங்கள் மற்றும் ஓவர்-ஆக்டிங் மூலமாகவே நகர்த்தப்படுகின்றன.
ராம்சரண் கதாபாத்திரம் தவிர மற்ற எந்த கதாபாத்திரமும் சரியாக எழுதப்படவில்லை. ஒரு நிஜ மல்யுத்த வீரனைப் போலவே ராம்சரணின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. எமோஷனல் காட்சிகளிலும் ஈர்க்கிறார். அவரைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திடீரென வருகிறார்கள், திடீரென காணாமல் போகிறார்கள்.
குறிப்பாக படத்தில் நாயகியை கையாண்ட விதம் மிகவும் அருவருப்பாக உள்ளது. ‘அச்சியம்மா’ என்ற கேரக்டரில் வரும் ஜான்வி கபூர் வெறும் ஒரு கவர்ச்சி பொம்மையாக மட்டுமே சுருக்கப்பட்டுள்ளார். கேமரா அவரைத் தொடர்ந்து ஆபாசமாகவே காட்சிப்படுத்துகிறது.
இதைவிடக் கொடுமை, காதலைக் கையாண்ட விதம். அச்சியம்மாவிடம் பெத்தி நடந்துகொள்ளும் விதத்தை காதல் என்று யாரோ இயக்குநரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள் போலிருக்கிறது.
காதல் என்ற பெயரில் நாயகியை ‘அப்யூஸ்’ செய்கிறார் நாயகன். நாயகனுக்கு அன்பை வெளிப்படுத்தத் தெரிந்த ஒரே வழி இதுதான் என்று படம் அதற்கு முட்டுக் கொடுக்கிறது. காதல்(?) காட்சிகளுக்கு மட்டும் சென்சார் போர்டு 18+ சான்றிதழ் கொடுத்திருக்க வேண்டும்.
ஜெகபதி பாபு மட்டுமே தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நேர்த்தியாக, அர்ப்பணிப்புடன் செய்துள்ளார். ரயிலை நிறுத்தவேண்டி போராடும் காட்சிகளில் கலங்க வைக்கிறார். போமன் இரானி, சிவராஜ்குமார், திவ்யேந்து போன்ற திறமையான நடிகர்கள் வீணடிக்கப்பட்டுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையால்கூட படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.
மொத்தத்தில் 'பெத்தி' ஒரு தெளிவான நோக்கம் இல்லாமல் தடம் மாறி போன ஒரு படம். உத்வேகம் அளிக்கும் ஸ்போர்ட்ஸ் படமாகவோ அல்லது சமூக நீதிக்கான சக்திவாய்ந்த கதையாகவோ வராமல், எண்ணற்ற கேள்விகளை எழுப்பி, எந்த ஒரு திருப்திகரமான பதிலையும் தராத ஒரு குழப்பமான, ஏமாற்றமளிக்கும் சுமாரான படமாகவே முடிகிறது.