கிறிஸ்டோபர் நோலன்: மனசாட்சியை உலுக்கும் கலைஞன் | படைப்புலகம்

கிறிஸ்டோபர் நோலன்: மனசாட்சியை உலுக்கும் கலைஞன் | படைப்புலகம்
Updated on
4 min read

கடந்த வெள்ளியன்று தொடங்கி, இப்போதுவரை இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள திரையரங்குகளில் ஒரு விசித்திரமான காட்சி நிகழ்ந்துவருகிறது. மூன்று தலைமுறை உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள், 18 வயதைக் கடந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வயது முதிர்ந்த திரைப்பட ஆர்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒரு கிரேக்கச் செவ்வியல் காவியத்தின் திரை வடிவத்தைக் காணக் குவிந்துவருகின்றனர்.

ஒரே காரணம், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். அவர் திரைக்கதை எழுதி, இயக்கியிருப்பதால் மட்டுமே ‘தி ஒடிசி’யைத் தாங்கள் அவசியம் காண வேண்டிய ஒரு திரைப்படம் என்று முன்னுரிமை தருகின்றனர்.

உலக சினிமா சந்தைக்கு என்று, மசாலா குப்பைகளைத் தயாரித்து அனுப்பும் ஹாலி வுட்டில் இருந்துகொண்டு, காலத்தைத் தாண்டிச் சிந்திக்கும் ஒரு சித்தனைப் போல் தன் படைப்புகளைக் கொடுத்துவரும் படைப்பாளி அவர். அவரின் விநோதத் திரை மொழியில் ‘தி ஒடிசி’ எவ்வாறான திரை அனுபவத்தைத் தரப்போகிறது என்கிற எதிர் பார்ப்புடன் காத்திருந்ததன் விளைவாகவே, இவ்வாறு கூடுகின்றனர்.

இப்படத்தைக் காண்பதில் எந்தவிதத் தகவல் தடையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ‘ஒடிசி’, ‘இலியட்’ காவியங்களின் கதைச் சுருக்கங்களைக் கூகுள் செய்து அறிந்து கொண்டதை, திரையரங்க வாயிலில் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டபடி, திரையரங்கின் கதவு திறப்பதற்காகக் காத்திருக்கிறார்கள்.

மேலும் ‘தி ஒடிசி’யின் முதன்மைக் கதாபாத்திரங்களுக்கு நோலன் தேர்வு செய்திருக்கும் நடிகர்களைக் குறித்த தரமான அரட்டையும் அங்கே அரங்கேறுகிறது. இரண்டாயிரத்து எண்ணூறு ஆண்டு களுக்கு முன் ஹோமர் என்கிற கிரேக்க ஆதிகவி பாடிய ஒரு காவியம், 21ஆம் நூற்றாண்டு இந்தியாவில் குடும்பக் கொண் டாட்டமாக மாறியிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

இன்னொரு கண்ணோட்டத்தில் இதை நோலனின் புகழுக்கான சான்று என்று மட்டும் சுருக்கத் தேவையில்லை எனத் தோன்றுகிறது; உலகமயமாதலுக்குப் பிறகான இந்தியத் திரைப்பட ரசனையில் ஏற்பட்டுள்ள தாக்கம் அல்லது மாற்றம் என்றும் பார்க்கலாம்.

எங்கே சறுக்குகிறோம்?

அதேநேரம், நம்முடைய செவ்வியல் காவியங்கள் பிரம்மாண்டத் திரைவடிவம் பெறும்போது அவற்றைக் கொண்டாடுவது, இந்தியச் சமூகத்துக்கு அந்நியமான அனுபவமாக இருந்ததில்லை.

இலியட், ஒடிசி ஆகிய காவியங்களும் அவற்றில் வரும் கடவுளர்களும் இன்று கிரேக்க நாகரிகத்தின் செவ்வியல் பண்பாட்டு நினைவுகள் மட்டுமே. ஆனால், ராமாயணமும் மகாபாரதமும் இந்திய நாகரிகத்தின் உயிருள்ள நினைவுகள். அவை இன்னும் நம்முடைய மொழிகளிலும் கலைகளிலும் வழிபாட்டிலும் அன்றாட வாழ்விலும் தொடர்ந்து உயிர் வாழ்கின்றன.

ஆனால், ஒரு மேற்கத்திய இயக்குநர் ஹோமரின் காவியத்தைத் தனித்த முத்திரை கொண்ட, பெரும் புகழ்பெற்றுவிட்ட தன்னுடைய திரைமொழியில் அதைப் படைக்கும்போது, இந்தியச் சமூகம் அதை உலக வெகுஜன சினிமாவின் உச்சநிகழ்வாகக் கொண்டாடுவதைக் காண முடிகிறது.

அதேவேளை நமது சொந்தக் காவியங்கள் திரைப்படங்களாக மாறும் போது அவற்றைப் பெரும்பாலும் மதம், அரசியல், நடிப்பு, வி.எஃப்.எக்ஸ், வசூல் என்கிற விவாதங்களுக்குள் அடைத்துவிடுகிறோம்.

அவற்றின் ‘மீள் கதையாடல்’களை அனுமதிப்பதில்லை. இந்த முரண்பாடும் சறுக்கலும் இந்தியப் பார்வையாளரின் ரசனைக் குறைபாடு அல்ல; உலகமயமாக்கலுக்குப் பிறகு நோலன் போன்ற இயக்குநர்கள் திரைப்படக் கலையை மனித இனத்துக்கான மீட்சியின் பண்பாட்டு வடிவமாகப் படைக்கத் தொடங்கினர். அது நம்மிடம் இல்லையே என்கிற ஏக்கத்தின் வெளிப்பாடு.

நாம் நமது காவியப் படைப்புகளின் அடையாளங்களைப் பொதுமைப்படுத்தி, அவற்றை மனித மீட்சிக்கான தத்துவ விசாரணைக்குள் ஆழ்த்திட மறுத்துவிடு கிறோம். நாளை ராமாயணத்தையோ மகாபாரதத்தையோ நோலன் படமாக்க முன்வந்தால், இந்தக் காவியங்களின் கதைச் சுருக்கத்தைப் படித்துவிட்டு, ஐரோப்பிய ரசிகர்கள் திரையரங்கின் வாயில்களில் ராமனுக்காகவும் பாண்டவர்களுக்காகவும் ராவணனுக்காகவும் துரியோதனனுக் காகவும் காத்திருப்பார்கள்.

இந்தப் பின்னணியில்தான் கிறிஸ்டோபர் நோலனின் படைப் புலகையும், அவரின் ‘தி ஒடிசி’ திரைப்படம் உலகம் முழுவதும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.

காலத்துடன் விளையாடும் கலைஞனா?

கிறிஸ்டோபர் நோலனைப் பற்றி உலகம் பேசும்போதெல்லாம் முதலில் உச்சரிக்கப் படும் சொல் ‘காலம்’. நேர்கோட்டில் நகராத திரைக்கதைகள், முதன்மைக் கதாபாத்திரங்களுடைய நினைவின் சிதைவுகள், அவை சிக்கிக்கொள்ளும் காலத்தின் வளைவுகள், அறிவியலின் புதிர்களை மீறி எழும் மனித உணர்வு, கருந்துளைப் பயணத்துள் சிக்கினாலும் மாறாத உறவெனும் பிணைப்பு, அதைக் கடந்த மானுடப் பேரன்பு, கனவுகளின் அடுக்கு களுக்குள் சிக்கினாலும் மனச்சாட்சியின் கேள்விக்குத் துயர்கொள்ளும் மனம் எனத் தன் கதைக்களங்கள் பெரும்பாலான வற்றைக் காலத்தின் சித்து விளையாட்டுடன் நோலன் பிணைத்த காரணத்தால் ‘காலத்துடன் விளையாடும் கலைஞன்’ என்று அவரைக் கொண்டாடுகிறோம்.

ஆனால், அவரது திரைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக, ஒரே மூச்சில் பார்த்து முடிக்கும் யாருக்கும் மனதில் எஞ்சுவது, அவர் கையாளும் காலத்தின் விளையாட்டல்ல; துரத்தும் மனச்சாட்சியின் குரல். அது பார்வையாளருடன் நடத்தும் விசாரணை.

முதல் திரைப்படமான ஃபாலோயிங்’ (Following) தொடங்கி ‘தி ஒடிசி’ (The Odyssey) வரை நோலனின் எல்லாப் படங்களும் இறுதியில் ஒரே கேள்வியைத்தான் எழுப்பு கின்றன: ‘ஒரு முடிவை எடுத்த பிறகு, அதன் பின்விளைவுகளுடன் வாழ்வதற்காக மனிதன் எப்படிப் போராடுகிறான்?’.

அதனால்தான் அவரது படங்களில் வரும் நாயகர்கள் உலகத்தை வெல்வதில்லை; தம்மைத் தாமே எதிர்கொள்கிறார்கள்.

அவரது ‘மெமண்டொ’வின் (Memento) நாயகன் லியோனர்டு நினைவிழந்த மனிதன். ஆனால்; நிகழ்ந்த உண்மையை நினைவில் வைத்திருக்க விரும்பாத மனிதன். ‘தி பிரிஸ்டீஜ்’ (The Prestige) படத்தில் ஒருவரோடு ஒருவர் போட்டியிடும் இரண்டு சிறந்த மேஜிக் நிபுணர்கள், தங்களின் பொய்களை வாழவைக்கச் சொந்த மனைவியையும் மகளையும் இழக்கிறார்கள்.

கலையின் மகத்துவம் என்கிற பெயரில் மனிதத்தை இழக்கிறார்கள். ‘தி டார்க் நைட்’ (The Dark Knight) படத்தில் ஜோக்கரை ஒரு வில்லன் என்று சுருக்க முடியாது; நாகரிகத்தின் ஒழுக்கத்தைச் சோதித்துப்பார்க்கும் ஒரு தத்துவவாதி.

‘இன்செப்ஷன்’ (Inception) மனிதக் கனவு களுக்குள்ளும் எண்ணங்களுக்குள்ளும் ஊடுருவும் நாயகனைப் பற்றியது என நீங்கள் நம்பலாம். ஆனால், விஷக் கருத்தாக்கங்களை மனித மனங்களில் ரகசியமாக விதைக்க முடியும் என்கிற ஆபத்தான அறிவியலின் அரசியல் குறித்த விசாரணை அப்படம்.

‘இண்டர்ஸ்டெல்லர்’ (Interstellar) விண்வெளியைப் பற்றிய படம் மட்டுமே அல்ல; எதிர்காலச் சந்ததியிடம் இன்றைய தலைமுறைக்கு உள்ள பொறுப்பைப் பற்றி, அறிவியல் புனைவில் எழுந்த உணர்வின் கவிதை. ‘டன்கிர்க்’ (Dunkirk), போரில் வெல்வதை விட, உயிருடன் திரும்பி வருவதையே வீரத்தின் உச்சமாகச் சித்தரித்தது.

‘ஓபன்ஹைமர்’ (Oppenheimer) மனித அறிவின் வெற்றியைப் பறைசாற்றும் படம்போல் தோன்றினாலும், அதிகாரத்தின் முன்னால் தன்னுடைய அறிவியல் கண்டு பிடிப்பு அழிவு சக்தியாக மாறும்போது மனதளவில் தோற்றுப்போகும் ஓர் அறிவியலாளர், தன் மனச்சாட்சியால் துரத்தப்படுவதைப் பதிவுசெய்கிறது.

ஒடிசியஸ் வீரனா?

இந்த வரிசையில் பெரும் தத்துவப் பாய்ச்சலுடன் வந்திருக்கும் ‘தி ஒடிசி’யின் நாயகன் ஒடிசியஸை வெறும் சாகசங்களின் உருவகமாகப் படைக்கவில்லை. தனக்காக நிற்பவர்களுக்காக, தன்னை நினைவில் நிறுத்தி வாழ்பவர்களுக்காக அவன் எதையும் இழக்கத் தயாராக இருக்கிறான்.

வீரதீர சாகசத்தைவிட, போர் உருவாக்கிய குற்றவுணர்வில் உயிருள்ள பிணமாக வாழ்கிறான். போருக்குப் பிறகு வீட்டை நோக்கித் திரும்பும் அவனது ஏக்கம், அதற்கான அகப் பயணமாகவே திரையில் விரிகிறது. போரின் வெற்றியைவிட, அதன் அழிவுகள் உருவாக்கிய விளைவுகள், அவனை ஓநாய்கள்போல் வீடு திரும்பும் பயண வழியெங்கும் வேட்டையாடுகின்றன.

நோலனின் திரைமொழியில் கதையை விடத் திரைக்கதை முக்கியமானது. அவர் நிகழ்வுகளை வரிசைப் படுத்துவதில்லை; அனுபவங்களை மறுகட்டமைக் கிறார். ‘மெமண்டோ’ பின்னோக்கிச் சொல்லப்படுகிறது. ‘டன்கிர்க்’ ஒரு வாரம், ஒரு நாள், ஒரு மணி நேரம் என மூன்று கால ஓட்டங்களை ஒரே உச்சத்தில் சந்திக்க விரைகிறது.

‘டெனட்’ நேரத்தை இரு திசைகளில் ஓடவிடுகிறது. ‘ஓபன்ஹைமர்’ வண்ணமும் கறுப்பு-வெள்ளையும் பயன்படுத்தி நாயகனின் இருதலைக்கொள்ளி மனநிலையை, இரண்டு வரலாற்றுப் பார்வைகளைப் பார்வையாளனிடம் முன்வைக்கிறது. இவை தொழில்நுட்ப வித்தைகள் என்று பார்ப்பது ஒருவிதம் என்றால், கதாபாத்திரத்தின் உளவியலைப் பார்வையாளன் முழுமை யாக அனுபவிக்க வேண்டும் என்கிற நோலனின் திரைமொழி உந்துதல்

அவருடைய கதாநாயகர்களின், கதாநாயகிகளின் பாத்திர வரைவிலும் (Character Arc) ஒரு விசித்திரமான ஒற்றுமை இருக்கிறது. அவர்கள் வெற்றியை நோக்கிப் பயணிப்பதில்லை. உண்மையை ஏற்றுக்கொள்வதற்காகவே போராடுகிறார்கள்.

புரூஸ் வேய்ன் தனது பயத்தை, கூப்பர் தனது பிரிவை, ஓபன்ஹைமர் தனது குற்றவுணர்வை, ஒடிசியஸ் தான் பங்கெடுத்த போரின் கொடிய நினைவுகளைச் சுமந்தபடியே வாழக் கற்றுக்கொள்கிறார்கள். நோலனின் சினிமாவில் நாயக வெற்றி என்பது எதிரியை வீழ்த்துவதல்ல; தன் மனச்சாட்சியிடமிருந்து தப்பி ஓடுவதை நிறுத்துவதுதான்.

தொழில்நுட்பம் ஒரு சேவகன்

நோலன் நவீனத் தொழில்நுட்பங்களை எப்போதும் தன்னுடைய பணிவான சேவகனாகவே பயன்படுத்தி வந்திருக் கிறார். இந்தப் பின்னணியில் ‘தி ஒடிசி’ படத்துக்காக கிராபிக்ஸில் பண்டைய கிரேக்க உலகத்தை உருவாக்குவதைவிட, உண்மையான கிரீஸ் நாட்டின் கடல்கள், கடற்கரைகள், பழமையான கோட்டைகள், கரடுமுரடான மலைகள், குகைகள், இயற்கை ஒளி ஆகியவற்றை அவர் திரைமொழியில் காட்சியின் அசல் கித்தான்களாகத் திறம்படக் கையாண்டிருக்கிறார்.

ஏனெனில், ஒடிசியஸின் வீடு திரும்பும் பயணத்தை, போர் முடிந்த பிறகும் மனதில் தொடரும் காயங்களின் சித்திரமாக அவர் வரைந்து காட்ட விரும்பியிருக்கிறார்.

அந்த வலியை உணர்த்தத் தன் நாயகன் பயணிக்கும் மண் உண்மையானதாக இருக்க வேண்டும்; கடல் உண்மையானதாக இருக்க வேண்டும்; காற்றுகூட உண்மையானதாக இருக்க வேண்டும் என எண்ணியிருக்கிறார்.

அதனால்தான் கிறிஸ்டோபர் நோலனுக்கு காலத்தைப் பற்றிய திரைப்படங்களை உருவாக்குபவர் என்கிற வரையறை மட்டுமே பொருந்துவதில்லை. அவர் நினைவு, குற்றவுணர்வு, பொறுப்புணர்வு, அறிவியல், அதிகாரம், காதல், போர், மீட்பு, வீடு திரும்புதல் ஆகியவற்றை அவற்றின் தத்துவப் பின்னணியுடன் பிணைக்கிறார்.

அதன் வழியாக மனிதன் தன் செயல்களின் பின்விளைவுகளுடன் எப்படி வாழ்கிறான் என்பதைத் தன் திரைமொழியில் ஆராய்கிறார். அவருடைய படங்கள் போரையும் வன்முறையும் தத்துவார்த்தமாக எதிர்க்கின்றன. ஆனால், மனித இனமோ பேராசையால் போரையும் அழிவுகளையும் நிதர்சனத்தில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

- jesudoss.c@hindutamil.co.in

கிறிஸ்டோபர் நோலன்: மனசாட்சியை உலுக்கும் கலைஞன் | படைப்புலகம்
ஜனநாயகன்: விமர்சனம் - இதுதான் விஜய்யின் கடைசிப் படமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in