ஜனநாயகன்: விமர்சனம் - இதுதான் விஜய்யின் கடைசிப் படமா?

ஜனநாயகன்: விமர்சனம் -  இதுதான் விஜய்யின் கடைசிப் படமா?
Updated on
3 min read

கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, சென்சார் பிரச்சினை, இணையத்தில் முழுப் படமும் லீக், ஏ சான்றிதழ் என பல சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது தமிழக முதல்வர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’.

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத என்டர்டெயினராக இருந்துவந்த விஜய் தனது கடைசித் திரைப்படமாக அறிவித்துவிட்ட இந்தப் படம் அவரது பிரியாவிடைக்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம்.

மதுரை சிறையில் கைதியாக இருக்கும் தளபதி வெற்றிகொண்டானை (விஜய்) அறிமுகப்படுத்துவதோடு கதை தொடங்குகிறது. உயிருக்குப் போராடும் வெற்றிகொண்டானின் தாய் (ரேவதி) தன் மகனைக் கடைசி முறையாகப் பார்க்க விரும்புகிறார்.

சிறைக் கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் (கவுதம் வாசுதேவ் மேனன்) விதிமுறைகளை மீறி வெற்றிகொண்டான் தன் தாயைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறார். இதனால் சஸ்பெண்ட் செய்யப்படும் ஸ்ரீகாந்த், ஆகஸ்ட் 15 சுதந்திர தின பொது மன்னிப்பில் வெற்றிகொண்டான் சிறையிலிருந்து விடுதலை ஆகவும் உதவி செய்கிறார்.

விடுதலையான பிறகு, வெற்றிக்கும் ஸ்ரீகாந்தின் மகள் விஜிக்கும் (மமிதா பைஜூ) இடையே ஓர் ஆழமான பந்தம் உருவாகிறது. எதிர்பாராதவிதமாக ஸ்ரீகாந்த் ஒரு விபத்தில் உயிரிழக்க, விஜியின் பாதுகாவலனாக மாறும் பொறுப்பை வெற்றி ஏற்றுக்கொள்கிறார். தன் தந்தையின் ஆசையான ராணுவ அதிகாரி கனவை விஜி எட்ட, அவருக்குத் துணையாக நிற்கிறார் வெற்றி. 

இன்னொருபுறம், ஆப்பிரிக்காவில் ஜான் ஹிம்லர் (பாபி தியோல்) என்ற சர்வதேசக் குற்றவாளி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களையும் அரசாங்கத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். எதிர்பாராத சூழலில் வெற்றியின் மகள் விஜி, ஹிம்லரின் சதித்திட்டத்துக்கு குறுக்கே வருகிறார். இது வெற்றிக்கும் ஹிம்லருக்கும் இடையே மோதலுக்கு வழிவகுக்கிறது. வெற்றி தன் தங்கையின் கனவை நிறைவேற்றினாரா, ஹிம்லரின் சதியை முறியடித்தாரா என்பதுதான் 'ஜனநாயகன்' படத்தின் மீதிக் கதை.

படம் தொடங்கப்பட்டு சில மாதங்கள் வரை இது தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ ரீமேக் என்பது குறித்து படக்குழு மவுனம் காத்து வந்தது. ஆனால், போகப் போக விஷயம் கசியத் தொடங்கியதும், ‘இது அப்பட்டமான ரீமேக் இல்லை, கதையின் கரு மட்டுமே ரீமேக், மற்றதெல்லாம் ஒரிஜினல்’ என்கிற ரீதியில் படத்தின் இயக்குநர் தொடங்கி படக்குழுவினர் பலரும் கூறிவந்தனர்.

ஆனால், படத்தின் முதல் ஃப்ரேமில் இருந்து கிட்டத்தட்ட இடைவேளை வரை சீன் பை சீன் இது ‘பகவந்த் கேசரி’ ரீமேக் என்பதை அப்பட்டமாக உறுதி செய்கின்றன. இரண்டாம் பாதியில் மட்டுமே க்ளைமாக்ஸை நெருங்கும் வரை சில காட்சிகளை மாற்றி இருக்கிறார் இயக்குநர். மற்றபடி தெலுங்கில் இருந்த அந்த 100% மசாலா நெடி இங்கும் படம் முழுக்க ஹெவியாக வீசுகிறது. 

படத்தின் முதல் காட்சியான அந்த ஜெயில் சண்டையில் தொடங்கும் ஒருவித செயற்கைத்தனம் க்ளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. ஹீரோவின் டயலாக் டெலிவரி, அவரை சுற்றி கொடுக்கப்படும் ‘கேஜிஎஃப்’ டைப் பில்டப், ஒட்டாத காட்சிகள் என செல்லும் திரைக்கதை, இடைவேளையில் தான் சூடுபிடிக்கிறது.

விஜய்யின் திரை ஆளுமை, அனிருத்தின் அசத்தலான பின்னணி இசை என ஒரிஜினலை தூக்கி சாப்பிடும் மேக்கிங் அந்த சண்டை காட்சி. ஆனால் அந்த ஒரு காட்சியை தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியோ, நினைவில் வைத்துக் கொள்ளும்படியோ படத்தில் ஒரு காட்சி கூட இல்லாமல் போனதுதான் துயரம்.

படத்தின் தொடக்கத்தில் ஹீரோவுக்கு கொடுக்கப்படும் ஓவர்டோஸ் ஆன பில்டப்களே திரைக்கதையின் வில்லனாகி விடுகின்றன.

ஒரு கைதிக்கு போலீஸ் அதிகாரி பில்டப் கொடுப்பது போன்ற காட்சிகள் எல்லாம் எப்படி யோசித்தாலும் எடுபடவில்லை. ஒரு தெலுங்குப் படத்தை ஒரு தெலுங்கு ரசிகரின் மனநிலையில் இருந்து பார்த்தால் மட்டுமே ரசிக்கும்படி இருக்கும். ஆனால், அதை அப்படியே ரீமேக் செய்து தமிழுக்கு கொடுப்பேன் என்றால் எப்படி?

படத்தில் தமிழுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அது எப்படியான மாற்றம் தெரியுமா? ஒரு காட்சியில் வில்லனின் வீட்டுக்கு செல்லும் விஜய், அங்கிருக்கும் எம்ஜிஆர் படம் ஒன்றை கடந்து செல்வார். அப்போது அந்தப் படத்தில் இருக்கும் எம்ஜிஆரின் உருவம், விஜய்யைப் பார்த்து ‘தங்கமே தளபதி’ என்று கூறி சாட்டை ஒன்றை கொடுக்கும். இப்படியான ‘குபீர் கிரிஞ்சு’ மாற்றங்கள்தான் படத்தில் செய்யப்பட்டுள்ளன.

படம் முழுக்க சலிக்க சலிக்க கதைக்கு தொடர்பே இல்லாத மறைமுகமான / நேரடியான அரசியல் வசனங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் ரசிக்கும்படி இருந்தாலும் போகப் போக ஓவர்டோஸ் ஆகிறது.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ‘குட் டச் - பேட் டச்’ பற்றிய காட்சியின் நோக்கம் உயர்ந்ததுதான் என்றாலும், அது உணர்வுபூர்வமாக பார்வையாளர்களின் மனதைத் தொடத் தவறுகிறது.

இதற்கு முன்பு ‘பிங்க்’ என்ற இந்திப் படத்தை தமிழுக்கு ஏற்றவாறு அஜித்தை வைத்து ரீமேக் செய்திருந்தார் இயக்குநர் ஹெச்.வினோத். அதிலும் ஏராளமான மாற்றங்களை செய்திருப்பார். அப்படி செய்யவில்லை என்றால், அந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்குமா என்று தெரியாது. ஆனால், இங்கு ஓர் இயக்குநராக அந்த வாய்ப்பை முற்றிலுமாக தவறவிட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். 

படத்தை கடைசி வரை உட்கார்ந்து பார்க்கும் முதல் காரணம் விஜய் மட்டுமே. ஆக்‌ஷன் காட்சிகளிலும், மாஸ் காட்சிகளிலும் பொறி பறக்க விடுகிறார். எவ்வளவு மோசமான படமாக இருந்தாலும், அதை தன்னுடைய திரை ஆளுமையால் கட்டிப் போட்டு விடும் திறனை இதிலும் நிரூபித்திருக்கிறார் விஜய். 3 தசாப்தங்களாக ரசிகர்களை மகிழ்வித்த ஒருவரை இனி பெரிய திரையில் பார்க்க முடியாதே என்ற வருத்தமான எண்ணம் பல காட்சிகளின் இடையே வருவதை தவிர்க்க முடியவில்லை.

மமிதா பைஜுவுக்கு கனமான கதாபாத்திரம். அதை குறைகள் எதுவும் இன்றி திறம்பட செய்திருக்கிறார். பூஜா ஹெக்டே படம் முழுக்க ஹீரோவுக்கு துணையாக வரும் அதே வழக்கமான பணியை சிறப்பாக செய்திருக்கிறார். 

மாஸ் வில்லனாக அறிமுகம் செய்யப்படும் பாபி தியோல் போகப் போக காமெடி வில்லனாக மாறிப் போகிறார். அவரது கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம்தான் படத்தின் முக்கிய பலவீனம் என்று சொல்லலாம். கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், ரேவதி, பிரியாமணி உள்ளிட்டோர் காட்சிகளை நிரப்ப மட்டுமே பயன்பட்டுள்ளனர்.

படத்தின் மறைமுக ஹீரோ அனிருத் என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் படத்தை ஒருபக்கம் விஜய் தன் தோளில் தாங்கிப் பிடிக்க, இன்னொரு பக்கம் அனிருத் தன் அசாத்திய உழைப்பின் மூலம் சுமந்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் ஹிட் என்பதால் அவை திரையில் வரும்போது தியேட்டர் ‘ப்ளாஸ்ட்’ ஆகிறது. பின்னணி இசையிலும் சிறப்பான பணியை செய்துள்ளார். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு ஒரு கமர்ஷியல் மசாலா படத்துக்கு தேவையானதை நிறைவாக தந்திருக்கிறது. 

முன்பே குறிப்பிடதைப் போல 30 ஆண்டு காலம் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத வசூல் சக்கரவர்த்திகளில் ஒருவராக திகழ்ந்து, தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இன்று தமிழ்நாட்டின் முதல்வராக அமர்ந்திருக்கும் விஜய்க்கு அவரது கடைசிப் படம் என்பது தமிழ் ரசிகர்கள் வாழ்நாள் முழுவதும் நினைவுகூரத்தக்க ஒரு திரை அனுபவமாக இருந்திருக்க வேண்டும்.

தங்கள் ஹீரோ திரையில் தோன்றினாலே போதும் என்று ஆர்ப்பரிக்கும் முதல் நாள் ரசிகர்களுக்கு இது ஒரு வாழ்நாள் கொண்டாட்டமாக இருக்கலாம். ஆனால், சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வரும் பொதுவான பார்வையாளருக்கு ‘ஜனநாயகன்’ வெற்று பில்டப்களும், கதைக்கு தொடர்பில்லாத அரசியல் நெடி வசனங்களும் நிறைந்த வெகு சுமாரான ஒரு மசாலா படமாகவே நினைவில் நிற்கும். 

ஜனநாயகன்: விமர்சனம் -  இதுதான் விஜய்யின் கடைசிப் படமா?
QALA: ஆணாதிக்கம் தரித்த தாயும், ‘கண்ணீர் சாட்சி’ கலாவும் | திரை தேவதைகள் 27

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in