

ஒரு ஞாயிற்றுக் கிழமை, நியூயார்க் சர்வதேச ஜென் மையத்தில் சியுங் சான் தங்கியிருந்தபோது, ஒரு பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவுக்கு அமெரிக்காவில் வசிக்கும் கொரியப் பெண்கள் பலரும் வந்திருந்தனர். அவர்கள் பைகள் நிறைய உணவையும் பரிசுகளையும் கொண்டுவந்திருந்தனர்.
பெண் ஒருவர், பெரிய பிளாஸ்டிக் மலர்க்கொத்து ஒன்றைப் பரிசாகக் கொண்டுவந்திருந்தார். அதை சியுங் சானின் அமெரிக்க மாணவர் ஒருவரிடம் புன்னகைத்தபடி கொடுத்தார். அந்த மாணவர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அந்த பிளாஸ்டிக் மலர்களை, மேலங்கிகளைக் கொண்டு மறைத்தார். ஆனால், அங்கு வந்த மற்றொரு பெண் உடனடியாக அந்த மலர்க்கொத்தைக் கண்டுபிடித்து விட்டார். பெரு மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துக்கொண்டுபோய் தர்ம அறையின் பீடத்திலிருந்த பூ ஜாடியில் வைத்தார்.
அந்த மாணவருக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. அவர் சியுங் சானிடம், “அந்த பிளாஸ்டிக் மலர்கள் ரசனைக்குறைவாக இருக்கின்றன. அவற்றைப் பீடத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோய் வேறெங்காவது வைத்துவிட முடியாதா?” என்று கேட்டார்.
“உன்னுடைய மனம்தான் பிளாஸ்டிக்காக இருக்கிறது. இந்த மொத்தப் பிரபஞ்சமும் பிளாஸ்டிக் தான்” என்றார் சியுங் சான்.
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றார் மாணவர்.
“புத்தர் சொல்கிறார், ‘ஒருவரின் மனம் தூய்மையாக இருந்தால், மொத்தப் பிரபஞ்சமும் தூய்மை யாக இருக்கும்; ஒருவரின் மனம் களங்கத்துடன் இருந்தால், மொத்தப் பிரபஞ்சமும் களங்கத்துடன் இருக்கும்.’ ஒவ்வொரு நாளும், நாம் மகிழ்ச்சியற்ற பலரைச் சந்திக்கிறோம். அவர்களின் மனம் சோகமாக இருக்கும்போது, அவர்கள் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, தொடுவது என அனைத்துமே சோகமாக இருக்கும். மொத்தப் பிரபஞ்சமும் சோகமாகவே இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, மொத்தப் பிரபஞ்சமும் மகிழ்ச்சியாக இருக்கும். நீ ஏதாவது ஒன்றுக்கு ஆசைப்பட்டால், அதனுடன் நீ பிணைக்கப்பட்டு விடுகிறாய்.
அதை நீ புறக்கணித்தாலும், அதனுடன்தான் நீ பிணைக்கப்பட்டி ருக்கிறாய். ஒரு பொருள் அல்லது விஷயத்துடன் பிணைக்கப்பட்டிருப்பது என்பது உன் மனத்துக்கான தடையாகிவிடும். அதனால், ‘எனக்கு பிளாஸ்டிக் பிடிக்காது’ என்பதும் ‘எனக்கு பிளாஸ்டிக் பிடிக்கும்’ என்ற இரண்டுமே பிணைப்புகள்தாம். உனக்கு பிளாஸ்டிக் மலர்கள் பிடிக்காது, அதனால் உன் மனம் பிளாஸ்டிக்காகிவிடுகிறது. அதனால், மொத்தப் பிரபஞ்சமும் பிளாஸ்டிக்காகவிடுகிறது. அவை எல்லாவற்றையும் கைவிடு.
அதற்குப் பிறகு, எதனாலும் தடையிருக்காது. மலர்கள் பிளாஸ்டிக்காக இருக்கின்றனவா அல்லது உண்மையாக இருக்கின்றனவா என்பதைப் பற்றி அக்கறைப்பட மாட்டாய். அவை பீடத்தில் இருக்கின்றனவா அல்லது குப்பைக் குவியலில் இருக்கின்றனவா என்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டாய். இது உண்மையான விடுதலை. ஒரு பிளாஸ்டிக் மலர் என்பது வெறுமனே பிளாஸ்டிக் மலர் அவ்வளவே. ஓர் உண்மையான மலர் என்பதும் வெறுமனே உண்மையான மலர் அவ்வளவே. நீ பெயர், வடிவத்துடன் பிணைக்கப்படத் தேவையில்லை” என்று சொன்னார் சியுங் சான்.
“ஆனால், நாம் இங்கு அனைவருக்குமான ஒரு அழகான ஜென் மையத்தை உருவாக்க முயன்றுகொண்டிருக்கிறோம். எப்படி என்னால் அக்கறை காட்டாமல் இருக்க முடியும்? அந்த மலர்கள் மொத்த அறையின் அழகையும் பாழ்படுத்துகின்றன” என்றார் மாணவர்.
“யாராவது ஒருவர் புத்தருக்கு உண்மையான மலர்களை வழங்கினால், புத்தர் மகிழ்ச்சியடைகிறார். யாராவது ஒருவருக்கு பிளாஸ்டிக் மலர்கள் பிடித்துபோய், அவற்றை அவர் புத்தருக்கு வழங்கினாலும், புத்தர் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். புத்தர் பெயருடனோ, வடிவத்துடனோ பிணைக்கப்படவில்லை. மலர்கள் பிளாஸ்டிக்கா அல்லது உண்மையா என்பது பற்றி புத்தருக்கு அக்கறை கிடையாது. அவர் நமது மனம் பற்றி மட்டும்தான் அக்கறைப்படுகிறார். பிளாஸ்டிக் மலர்களை வழங்கும் இந்தப் பெண்களிடம் தூய்மையான மனம் இருக்கிறது. அவர்களின் இந்தச் செயல் போதிச்சத்துவச் செயலாகும். உன் மனம் பிளாஸ்டிக் மலர்களைப் புறக்கணிக்கிறது. அதனால், நீ நல்லது, கெட்டது, அழகு, அசிங்கம் என்று பிரபஞ்சத்தைப் பிரித்து விட்டாய்.
அதனால், உன் செயல் போதிச்சத்துவச் செயலில்லை. புத்தரின் மனத்தை மட்டும் வைத்துக் கொள். அப்போது உனக்கு எந்தத் தடையும் இருக்காது. உண்மையான மலர்கள் நல்லது; பிளாஸ்டிக் மலர்களும் நல்லது. இந்த மனம் பெருங்கடலைப் போன்றது. அதனுள் ஹட்சன் ஆறு, சார்லஸ் ஆறு, மஞ்சள் ஆறு, சீன நீர், அமெரிக்க நீர், தூய்மையான நீர், மாசடைந்த நீர், உப்பு நீர், தெளிந்த நீர் என அனைத்து நீரும் ஓடுகிறது. ‘உன் நீர் மாசடைந்திருக்கிறது. நீ எனக்குள் ஓடமுடியாது’ என்று கடல் ஒருபோதும் சொல்வதில்லை. அது எல்லா நீரையும் ஏற்றுக்கொள்கிறது. எல்லாவற்றையும் இணைத்து, கடலாகிறது. அதனால்,நீ புத்தரின் மனத்தை வைத்துக்கொண்டால், உன் மனம் பெருங்கடலைப் போலாகிவிடும். இதுதான் ஞானத்துக்கான பெருங்கடல்” என்றார் சியுங் சான். அந்த மாணவர் ஆழ்ந்த வணக்கத்தைச் செலுத்தினார்.
| புத்தர் கல் எங்கே கிடைக்கும்? ஒரு கல்வெட்டும் குவாரிக்குப் போன தலைமைச் சிற்பி, அங்கிருந்த பல பளிங்குக் கல் தொகுதிகளை ஆய்வு செய்தார். ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு ‘அடிப்படைப் பண்பு’ இருப்பதை அவர் தன் வாழ்நாளில் கற்றுக்கொண்டார். அந்த அடிப்படைப் பண்பைக் கண்டுபிடித்து, அந்தக் கல்லை உண்மையான வாழ்க்கைக்குக் கொண்டு வருவதுதான் ஒரு சிற்பியின் வெற்றிக்கான ரகசியம். “ஆஹா, இந்தக் கல்லில் ஒரு வீரத் தோற்றம் மறைந்திருக்கிறது. இந்தக் கல்லில் துறவி ஒருவர் ஒளிந்திருக்கிறார். ஆனால், என் தலைசிறந்த படைப்பாக, நான் உருவாக்கவிருக்கும் ஒரு புகழ்பெற்ற புத்தர் சிலைக்கான கல்லை எங்கே கண்டுபிடிப்பேன்” என்றார் சிற்பி. “புத்தர் கல்” என்று அவர் சொல்லிவந்த அந்தக் கல்லைத் தேடி அவர் நாற்பது ஆண்டுகளாக அலைந்துகொண்டிருந்தார். இப்போது அவர் தன் ஆற்றல் அனைத்தும் குறைந்துவருவதாக உணர்ந்தார். அவர் உலகின் சிறந்த கல்குவாரிகளுக்கெல்லாம் பயணம்செய்துவிட்டார். இத்தாலியில் மிக்கலாஞ்சலோ தன் சிற்பங்களைச் செதுக்கிய இடம், கற்களின் ஒளியால் மிளிர்ந்த வெர்மோன்ட், சீனாவின் மலைப்பகுதிகள் என எல்லா இடங்களுக்கும் சென்றார். ஆனால், புத்தரைச் சிறந்தமுறையில் பிரதிபலிக்கும் ஒரு சரியான கல்தொகுதி அவருக்குக் கிடைக்கவேயில்லை. அவர் உலகம் முழுவதுமிருந்த நிபுணர்களைக் கலந்தாலோசித்தார். அறியாத பகுதிகளுக்குச் செல்வதற்கு ஒரு நிபுணரை நியமித்தார். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. ஆறுதல் தேடி, தன் தெருவின் கோடியில் இருந்த சிறிய மடாலயத்திலிருக்கும் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றார். தன் பயனற்ற தேடல் அனுபவத்தை அந்தத் துறவியிடம் விளக்கினார். அந்தத் துறவி, புன்னகைத்தபடி, “பிரச்சினையில்லை” என்றார். “அப்படியென்றால், புத்தர் சிலையை வடிப்பதற்கான சிறந்த கல் எங்கே கிடைக்கும் என்று உங்களால் சொல்ல முடியுமா?” என்று உற்சாகத்துடன் கேட்டார் சிற்பி. |
(டிராப்பிங் ஆஷஸ் ஆன் தி புத்தா: தி டீச்சிங் ஆஃப் ஜென் மாஸ்டர் சியுங் சான் புத்தகத்திலிருந்து)
தமிழில்: என். கௌரி